Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மிருதன்

மிருதன்,Miruthan
"நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2வது படம் இது.
26 பிப், 2016 - 14:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மிருதன்

தினமலர் விமர்சனம்


"மிருதன் என்பதன் பொருள்... மிருகமான மனிதன் என்பதே!


ஜெயம் ரவி, லக்ஷ்மிமேனன் நடிக்க, குளோபல் இன்போடெயின்மெண்ட் எஸ்.மைக்கேல் ராயப்பன் வழங்க, செராபின் ராய சேவியர் தயாரித்திருக்க, "நாய்கள் ஜாக்கிரதை

படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ள இரண்டாவது படம் தான் மேற்படி மிருதன்".


கதைப்படி., போக்குவரத்து போலீஸ் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டு ஊட்டியில் பணியாற்றும் இளைஞரான ஜெயம் ரவி, பெற்றோர் இல்லாதவர். தன் தங்கை பேபி அனிக்காவுடன்., இவருக்காக அவர், அவருக்காக இவர், என அண்ணன், தங்கை இருவரும் ஒருவர் மீது, ஒருவர் உயிரை வைத்தபடி ஊட்டியில் மகிழ்ச்சிகரமாக வசிக்கின்றனர். இந்நிலையில், யதேச்சையாக தான் சந்திக்கும் இளம் பெண் மருத்துவர் லக்ஷ்மி மேனன் மீது ஜெயம் ரவிக்கு காதல் வருகிறது. ஆனால், அதேநேரம், லட்சுமி மேனனுக்கு ஒரு மருத்துவ காதலன் இருப்பதும் ரவிக்கு தெரிய வருகிறது.


இந்நிலையில், மனிதனின் மூளையில் மிருகவெறியை மட்டுமே முழுக்க முழுக்கத் தூண்டி விட்டு உடலை உருக்குலைத்துக் கோரமாக்கி, சக மனிதனையே வெறி பிடித்துக் கடிக்கவைக்கும் அதி அபாயகரமான வைரஸ், அடங்கிய திரவம் ஒன்று ஊட்டி பகுதியில் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சாலையில் கொட்டி விடுகிறது. அதை நாய் ஒன்று, நக்கி குடித்துவிட, அந்த நாய்க்கு உடனடியாக வெறி பிடிக்கிறது. வெறி பிடித்த அந்தநாய் ஒரு மனிதனைக் கடிக்கிறது. அதனிடம் கடிபட்ட அந்த மனிதன் மிருக வெறியோடு, தன் அம்மாவைக் கடிக்க, அவரும் உடனடியாக தன் மருமகளைக் கடிக்க, குடும்பத்திற்கே வெறி பிடிக்கிறது. மொத்த குடும்பமும் வெளியே வந்து, மற்ற மனிதர்களைக் வெறியோடு துரத்தி கடிக்கின்றனர். இப்படியே அந்த பகுதியில் கடிபடும் எல்லோரும் மற்றவர்களைக் கடிக்கும் மிருக வெறி மனிதர்களாக அதாவது மிருதன்களாக மாறுகின்றனர். சில மணி நேரங்களில், இரண்டொரு நாட்களில் மிருக - மனிதர்கள், அதாங்க., மிருதன் களின் எண்ணிக்கை அதிகம் ஆகி ஊட்டிக்குள் எமர்ஜென்சி கால தடை உத்தரவு அறிவிக்கப்படுகிறது.


மனித குலத்தை வேரோடு அழிக்க முயலும் அந்தகொடிய வைரசுக்கு ஏற்றமாற்று மருந்து கண்டுபிடித்து, மேற்கொண்டு மிருதன்கள் உருவாவதை தடுப்பதோடு, மிருதன்களாக மாறிய ஆண், பெண்களை மனிதர்களாக்கும் பணியில் பெண் மருத்துவர் லட்சுமி மேனனும், அவரது மருத்துவக் குழுவும் ஈடுபட, அதற்கு தன் தங்கையுடன நாயகர் ஜெயம் ரவியும், அவரது சக போலீஸ் நண்பர் கருணாகரனும் எவ்வாறு உதவுகிறார்கள்..? என்னும் கதையோடு, வெகு வேகமாக பரவும் வெறிநோயை அறவே தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?, லட்சுமி மேனன் மீதான ஜெயம் ரவி யின் காதல் கைகூடியதா?- இல்லையா ...? கொலைவெறி நோய் பரப்பும் மிருதன்களிடம் இருந்து, இவர்கள் தப்பித்தார்களா? இல்லை, அவற்றிடம் கடி வாங்கி இவர்களும் மிருதன் ஆனார்களா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு கூட்டம் கூட்டமாக வந்து மிரட்டும் மிருதன்களுடன் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்லி, மிருதனின் அடுத்த பாகத்துக்கும் கட்டியம் கூறி முடிகிறது "மிருதன்படத்தின் மீதிக் கதை....!


தனி ஒருவன், பூலோகம் என ஹாட்ரிக் வெற்றிகளைத் தந்த ஜெயம் ரவி., இப்படத்தில் நடிக்க கொஞ்சம் யோசித்திருக்கலாம் என மிருதன் மொத்த படத்தையும் பார்க்கும் போது சற்றே தோன்றினாலும், ஜெயம் ரவி இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியாது... எனும் அளவிற்கு ஆரம்பம் முதல் இப்படத்தில் ரசிகர்களை கவர்பவர் ரவி ஒருவரே! லஞ்ச லாவண்ய போக்குவரத்துக் காவலராக, பாசமுள்ள அண்ணனாக, கண்ணியம் மிக்க காதலனாக, நட்புக்கு தலை வணங்கும் நல் நண்பனாக , சராசரி மனிதனாக, இறுதியில் மிருதனாக, மிருதனான பின்னும் காதல் மணம் மாறாத காதலானாக ஜெயம் ரவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.பேஷ், பேஷ்!


லட்சுமி மேனன் இரக்க சுபாவமுள்ள கோபதாபம் நிரம்பிய இளம் பெண் மருத்துவராக, தன்னை, காதலிப்பவருக்கும், கணவராக போகிறவருக்கும் இடையில் கிடந்து தவிக்கிற தவிப்பு கச்சிதம் லட்சுமியும் அதில் நச் - டச் கொடுத்துள்ளார். பலே, பலே!


காளி வெங்கட்., ஜெயம் ரவியின் சக போலீஸ் நண்பராக அவ்வப்போது அடக்க மாட்டாத சிரிப்பை ஏற்படுத்துகிறார். நாயகி லட்சுமி மேனனின் எம்பி அப்பாவாக பந்தா பேர்வழியாக வரும் ஆர்என்ஆர்.மனோகர். மிருதன்களை தன் கட்சித் தொண்டர்களாக கருதி ஆம்புலன்ஸில் இருந்து இறங்குவதும், பின் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடுவதும், அவரது தொண்டி சிறிது வண்டி பெரிது சீரியஸ் டைம் காமெடி டயலாக் உள்ளிட்டவையும் ஹாஸ்யம் !


ஸ்ரீமன், ஜீவா ரவி, ராகவன், பேபி அனிக்கா, சுரேந்திரன், கிரேன் மனோகர் அமித் பார்கவ், திலிப்ராயன், நெல்லை சிவா, சூப்பர் குட் கண்ணன், கே.ஆர்.ரஞ்சன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு பலம் சேர்க்க சிறப்பாய் நடித்துள்ளனர்.


இமானின் இசையில், அந்த முன்னாள் காதலி... பாடலும், மிருதன் பாடலும் மனசுக்குள் மகுடி வாசிக்கிறது பின்னணி இசை சில பல காட்சிகளில் ஒஹோ! சில காட்சிகளில் ஒ.கேங்கோ.... எனும் அளவில் இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ், சி.ஜி.. உள்ளிட்டவைகளும் சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கும் பரபரப்பிற்கும் பெரும்பலம் சேர்க்கின்றன. கே.ஜெ.வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு முன்பாதியில் பக்கா அப்பு, பின் பாதியில் பக்கா ஆப்பு! கணேஷ்குமாரின் பிரமாண்டசண்டைக் காட்சிகளும் சபாஷ் ரகம்!


மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அந்த அம்மா, பிள்ளை, மருமகளுக்கு வெறி பிடிக்கும் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் அருமை, புதுமை! பெரும்பாலான காட்சிகளில் கோர முகத்துடன் இவ்வளவு இணை, துணை நடிகர்கள் தேவை தானா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!


சோம்பி தன்மை கதையில் சென்டிமென்ட்டை கலக்க வேண்டும் என்று முடிவானபின் டாப் கியரில் படமும் காட்சிகளும் எகிறியிருக்க வேண்டாமா?


கதைப்படி, சோம்பி ஆகி கடிப்பவர்களும், அப்படி சோம்பியானவர்களிடம் கடிப்படுபவர்களும் தங்களுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்து மாறும் காட்சிகளை இன்னும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கியிருக்கலாம். அதிலும் குறிப்பாக தண்ணீரைக் கண்டால் சோம்பி பயப்படும் என்னும் கான்செப்ட்டுக்கு ஏற்ப., அதை வைத்து தண்ணீரைப் பயன்படுத்தி, இன்னும் மிரட்டலான காட்சிகளை காட்சிப்படுத்தாமல் க்ளைமாக்ஸில் ஒரு தீயணைப்பு வண்டியின் ஒரு லாரி தண்ணீரோடு சோம்பியின் தண்ணீர் பய காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது இடிக்கிறது.


மிருதன் மாதிரி ஸோம்பி வகைப்படங்களின் மிகப் பெரிய பலமே ஒரு கட்டம் வரை திகில் கூட்டும் அமைதியும், எப்போது எங்கே எப்படி ஸோம்பிக்கள் வந்து தாக்கும்?அவற்றால் மனிதர்கள் கடிக்கப்படுவது எப்போது நடக்கும்..? என்ற திகிலும் , சஸ்பென்சும எதிர்பார்ப்பும் தான். ஆனால், மிருதனில் சோம்பிக்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து., துப்பாக்கிக் குண்டுக்கு குறிப்பாக ஹீரோ ஜெயம் ரவியின் துப்பாக்கி ரவைக்குஇரையாகிக் கொண்டே இருப்பது சலிப்பை தருகிறது. இரண்டாம் பகுதி முழுக்க இதுவே மீண்டும் மீண்டும் நிகழ்வது மேலும் சலிப்பை ஏற்படுத்துகிறது. டாக்டர் சோம்பியின் சஸ்பென்ஸ் உடைபடும் இடமும் நம்பும்படியாக படமாக்கப்படவில்லை.


இன்றைய சூழலில், எதாவது வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பது தான் இந்தப் படத்தின் சிறப்பு. ஆனால் , அதை பிரமாண்டமாக, பிரமாதமாக சொல்ல முடியாதது தான் மிருதனின் மிகப் பெரும் சறுக்கல்! அதே மாதிரி ஹீரோ ஜெயம் ரவி சுடும் வரை மனிதர்களின் கழுத்தை கடிக்காமல் சோம்பிகள் மோப்பம் பிடிப்பதும் மோர்ந்து பார்ப்பதும் காமெடி.


இதுமாதிரி ஒருசில குறைகள் இருந்தாலும் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில், ரவியின் மிருதன் - ரசிகன் சிலருக்கு த்ரில்லன் சிலருக்கு வருத்தன்!




--------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்




தமிழில் வெளிவந்திருக்கும் முதல் ஸோம்பி படம் நாய் போன்ற மிருகத்திடமிருந்து மனிதனின் உடலில் பரவும் ஒருவகை வைரஸ், அந்த மனிதனையும் மிருகமாக்கி, காண்போரையெல்லாம் கடித்துக் கொன்று குவிப்பதுதான் 'மிருதன்' (மிருகம்+மனிதன் = மிருதன்)


ஊட்டியில் ஒரு சாதாரண ட்ராபிக் எஸ்.ஐ.ஆக இருக்கும் ஜெயம்ரவி, இந்த வைரஸை அழிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க இருக்கும் லட்சுமிமேனன் அடங்கிய டாக்டர் குழுவை, இந்த மிருதன்களிடமிருந்து எப்படி தப்பவைக்கிறார் என்பதே கதை. 'நாய்கள் ஜாக்கிரதை' சக்தி சௌந்தர்ராஜனுக்கு இது சவாலான கதைதான்.


படம் முழுக்க ஜெயம்ரவிதான். ட்ராபிக் எஸ்.ஐ., பாசக்கார அண்ணன், கண்ணியமான காதலன் என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மிருதன்களால் கடிபட்டு தானும் மிருதன் ஆனாலும் காதலியைக் காப்பாற்ற அவர் நடத்தும் போராட்டம் டாப். அதே நேரம் ரொம்ப ஓவர்.


இளம் மருத்துவர் லட்சுமி மேனன் காதலிப்பவனுக்கும் கட்டிக்கப் போறவனுக்கும் இடையில் தவிக்கும் தவிப்பு கச்சிதம். காளி வெங்கட் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். பேபி அனிதா மனதில் நிற்கிறார்.


தமிழில் யாரும் முயற்சிக்காத கதைக்கரு. ஆனால் திரைக்கதை தடுமாறுகிறது. மிருதன்களை ஜெயம்ரவி சுட்டுக் கொண்டே இருப்பது போரடிக்கிறது. தண்ணீருக்கு மிருதன்கள் பயப்படுகிறார்கள். என்றால், தண்ணீரை வைத்தே கட்டுப்படுத்தலாமே, ஏன் சுட வேண்டும்? அடிபட்டாலும் உயிர் காக்க உதவும் ரத்தத்துடன் தங்கையைக் காட்டும் காட்சி மிருதனாக மாறினாலும் காதலியை ஹீரோ காப்பாற்றத் துடிக்கும் காட்சிகளால் படம் நிற்கிறது.


மிருதன் - கொடூரன்


குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in