ராமம் ராகவம்
விமர்சனம்
தயாரிப்பு : ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பிக்சர்ஸ்
இயக்கம் : தன்ராஜ் கொரனானி
நடிகர்கள் : சமுத்திரக்கனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன், சுனில், மோக்ஷா, சத்யா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ்.
வெளியான தேதி : 21.02.2025
நேரம் : 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதை சுருக்கம்
அரசு அதிகாரியான சமுத்திரக்கனி தனது மகனை டாக்டராக்க வேண்டும் என்ற கனவுடன் படிக்க வைக்கிறார். ஆனால் மகன் தன்ராஜோ வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக நண்பர்களுடன் குடி, சிகரெட் என சுற்றித்திரிகிறார். மகன் மேல் உயிரையே வைத்துள்ள சமுத்திரகனி அவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்கிறார். அவை அனைத்தையும் தவறாக பயன்படுத்தும் தன்ராஜ், இறுதியில் அப்பாவையே கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? சமுத்திரக்கனிக்கு என்ன ஆனது? வாழ்க்கையில் திருந்தினாரா தன்ராஜ்? என்பதே படத்தில் மீதி கதை.
பல தெலுங்கு படங்களில் காமெடியன், வில்லனாக நடித்துள்ள தன்ராஜ் கொரனானி, ராமம் ராகவம் படத்தை தெலுங்கு, தமிழ் என பைலிங்குவல் படமாக இயக்கியுள்ளார். மகனுக்காக உயிரையே கொடுக்கத் துணிந்த தந்தை; தந்தையையே கொல்ல துணிந்த மகன் என்ற ஒன் லைன் ஸ்டோரியை அழகாக இயக்கியுள்ளார் . நடிப்பு மட்டுமின்றி இயக்கமும் தெரியும் என்பதை இந்த படத்தின் மூலம் தன்ராஜ் நிரூபித்துள்ளார். அதோடு லீடு ரோலில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கும் நியாயம் சேர்த்துள்ளார். படம் பார்ப்பவர்களை இவ்வளவு மோசமான மகனா இவன் என்று சொல்லும் அளவிற்கு தன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார்.
அதேபோல் ஒட்டுமொத்த படத்தையும் சமுத்திரகனி தன் தோளில் சுமந்துள்ளார். லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரி, மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அப்பா என அவரது கேரக்டரை தூக்கி சுமந்துள்ளார். அம்மாவாக நடித்துள்ள பிரமோதினி கணவன்- மகன் இடையில் அழகான நடிப்பை தந்துள்ளார். அதேபோல் ஹரிஷ் உத்தமன், சுனில் என அனைவரும் தங்கள் ரோலை சரியாக செய்துள்ளனர். அருண் சிலுவேறுவின் இசை ரசிக்கும்படியாக உள்ளது. துர்கா கொல்லிபிரசாத்தின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.
பிளஸ் & மைனஸ்
தந்தை, மகன் பாச கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த தசரத ராமன் - ராகவ் பாசக் கதையை சொல்லிய விதம் புதிது. தெலுங்கு படம் என்று தெரியாத அளவிற்கு தமிழில் டப்பிங் செய்திருப்பது பிளஸ் என்றாலும், படத்தில் சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமனை தவிர்த்து ஒருவர் கூட தமிழ் நடிகர் இல்லாதது பெரிய மைனஸ். தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் அப்பா கேரக்டர் என்றால் சமுத்திரகனி நினைவுக்கு வந்து விடுகிறார் போல.
ராமம் ராகவம் - பழைய பாச கதை
ராமம் ராகவம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ராமம் ராகவம்
- நடிகர்
- இயக்குனர்