Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வல்லினம்

வல்லினம்,Vallinam
 • வல்லினம்
 • நகுல்
 • மிருதுளா
 • இயக்குனர்: அறிவழகன்
12 மார், 2014 - 14:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வல்லினம்

தினமலர் விமர்சனம்


"உலகளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியையாவது கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் தாருங்கள்... என அறைகூவல் விடுக்கும் வகையில், கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து "ஈரம் அறிவழகன் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வெற்றிபடம் தான் ""வல்லினம்!

கதைப்படி, திருச்சியில், ஒரு கல்லூரியில் "பி.சி.ஏ., படிக்கும் நகுலன், பெரும் கூடைப்பந்து விளையாட்டு வீரர். ஒருநாள் போட்டி மைதானத்தில் நகுலன் வீசும் பந்து, இதயபலவீன நண்பர் கிருஷ்ணாவின்(கெஸ்ட் ரோல்) உயிரை பறிக்கிறது. அது முதல் பேஸ்கட்பாலை தொடுவது இல்லை... என சபதம் ஏற்கும் நகுலன், கோட்ச் ஆதி(இவரும் கெஸ்ட் ரோல்), ""இதய பலவீனத்தால் தான் கிருஷ்ணா இறந்தார்...என எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், சென்னையில் உள்ள நேஷனல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்க வருகிறார்.

மீரா எனும் மிருதுளாவின் காதலும், குணா எனும் அம்ஜத்தின் நட்பும், ஜெகனின் காமெடி தோழமையும் கிடைக்கிறது. கூடவே அந்த நேஷனல் கல்லூரியே கொண்டாடும் வகையில் இரண்டு ஆண்டுகளாக அந்த கல்லூரிக்கே கிரிக்கெட்டில் வெற்றி கோப்பை வாங்கி தந்திருக்கும் சீனியரான கிரிக்கெட் டீம் கேப்டனுடனும் அவர் தலைமையிலான கிரிக்கெட் டீமுடனும் முட்டலும் மோதலும் ஏற்படுகிறது. தன் நண்பர்கள் குணா, ஜெகன் எல்லோரும் வெற்றிக்கனியை தட்டிபறிக்க முடியாத கூடைப்பந்தாட்ட வீரர்கள், இவர்களது எதிராளிகளோ வெற்றிகரமான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்... எனும் நிலையில், நண்பனின் மரணத்தால் கூடைப்பந்து விளையாட்டை கைவிட்ட நகுலன், நண்பர்களின் வெற்றிக்காக மீண்டும் கூடைப்பந்தை கையில் எடுக்கிறார்.

அதுநாள் வரை கிரிக்கெட்டிற்காக பேசப்பட்ட நேஷனல் கல்லூரி, கூடைப்பந்திற்காக பதக்கம் பெற்றதா? நகுலனும், நண்பர்களும் மாநில் அளவில் வெற்றி பெற்றார்களா? அதற்கு கதாநாயகி மிருதுளாவின் உதவி என்ன? கிரிக்கெட் கோஷ்டியின் உபத்திரம் என்னென்ன?, கூடைப்பந்து கோச் அதுல் குல்கர்னியின் அர்ப்பணிப்பு எப்படி.? என்பது உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கலந்து கட்டி "வல்லினம் படத்தை வெற்றி இனம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்!

நகுலன், கூடைப்பந்தாட்ட வீரராக பட்டையை கிளப்பியிருக்கிறார். நட்பு, காதல், மோதல், பாசம் எல்லாவற்றிலும் கைதேர்ந்த நடிகராக வளர்ந்திருக்கும் நகுலன், முந்தைய படங்களின் தோல்வியை "வல்லினம் வெற்றிமூலம் ஈடு கட்டிவிடுவார் என நிச்சயம் நம்பலாம்!

மீராவாக வரும் மிருதுளா ஹோம்லி குத்துவிளக்கு. குணாவாக வரும் அம்ஜத், சுந்தர், கோச்-அதுல் குல்கர்னி, அமைச்சர் சந்தான பாரதி, கல்லூரி முதல்வர் ஓய்ஜி மகேந்திரன், நாயகியின் தந்தையும், பெரும் தொழிலதிபருமான ஜெயப்பிரகாஷ், வில்லன் கிரிக்கெட் கேப்டன், அவரது அண்ணனாக வரும் தற்போதைய கமலா திரையரங்க அதிபர்களில் ஒருவர் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஜெகனின் "அவுட்ஸ்டேண்டிங் பிளேயர்... எனும் அளவான காமெடி, சந்தானபாரதி, நமக்கு அந்த விளையாட்டெல்லாம் தெரியாது, நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு விளையாட்டு தான் என்று போனில் பேசியபடியே அங்கு கிராஸ் ஆகும் பெண் உதவியாளரை பார்க்குமிடம், ஒய்ஜிஎம், தன்னை மாணவர்கள் மிரட்டி சென்றதும் வீட்டிற்கு போன் செய்து, தன் மகளை கம்பியூட்டரில், டுவிட்டரில் இருந்து எழும்ப செய்வதும் தியேட்டரில் கைதட்டல் சிரிப்பு அதிர்வை ஏற்படுத்துகிறது. இது மாதிரி பல காட்சிகள் படத்தில் இடம் பிடித்திருப்பது "வல்லினம் படத்தின் பெரும்பலம்!

தமனின் இனிய இசை, கே.எம்.பாஸ்கரனின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகளுடன், இயக்குநர் அறிவழகன், கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் வேண்டுமென ஒவ்வொரு காட்சியிலும் போராடியிருக்கும் விதம், போரடிக்காமல் பேர் சொல்லும் விதமாக இருப்பது தான் வல்லினம் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி!

கூடைப்பந்தாட்டத்திற்காக போராடும் இப்படத்தின் முதல் காட்சியிலேயே கிருஷ்ணா, நகுலன் எறிந்த கூடைப்பந்தால் நெஞ்சில் பட்டு (என்ன தான் இதய பலவீனக்காரர் என்றாலும்...) இறப்பது, உள்ளிட்ட ஒரு சில குறைகள், நெருடல்கள் இருந்தாலும், கிரிக்கெட் சூதாட்டம் என்பதையும், அதில் அதிகம் அக்கறை காட்டாத அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் உலகின் வல்லரசுகளாக வலம் வருவதையும் சொல்லாமல் சொல்லி இருக்கும் இயக்குநர் அறிவழகனின் ""வல்லினம் - வாகைசூடிடும் வசூல்இனம்!--------------------------------------------------------------

குமுதம் சினி விமர்சனம்துரத்தித் துரத்தி காதல், கதறக் கதற நகைச்சுவை என்ற தமிழ் சினிமாவின் தகர ஃபார்முலாவிலிருந்து மாறுதலாய் ஒரு படம்.

மட்டைப் பந்தாட்டத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை கூடைப் பந்து உள்ளிட்ட மற்ற எந்த விளையாட்டுக்கும் தருவதில்லை என்ற ஆதங்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.

பாஸ்கெட் பால் ஆட்டத்தின் போது எதிர்பாராத விதமாக நண்பன் இறந்துவிட, விளையாட்டையே மறந்து வெளியூருக்குப் படிக்க வருகிறார் நகுல். அந்தக் கல்லூரியில் பாஸ்கெட் பால் புறக்கணிக்கப்பட்டு, கிரிக்கெட்டே முதன்மை வகிக்க, பொங்கி எழுந்து, பதக்கத்தை பாஸ்கெட் பால் அணிக்கு வாங்கித் தரும் பெரிய திருப்பங்கள் இல்லாத கதை.

தன்னுடைய நோபாள முகத்திற்குள்ளும் கோபம், தவிப்பு, வெறுப்பு என்று எல்லா பாவங்களையும் காட்டியிருக்கிறார் நகுல்.

மெல்லினமாக வரும் மிருதுளா, தொலைக்காட்சி வர்ணனையாளர் போல் இருக்கிறார்! அதே அலட்டல்!

ஜகன், அவ்வப்போது பல் தெரிய வைக்கிறார்.

வசனம் பல இடங்களில் பட்டாசு. "காலேஜ்ல முதல் வருஷம் படிக்கிறவனுக்கு கல்லூரி புதுசுன்னு கவலை இருக்கும். மூணாவது வருஷம் படிக்கிறவன், வெளியில் போய் வேலை கிடைக்குமான்னு கவலைப்படணும். செகண்ட் இயர் படிக்கிறவனுக்க எந்தக் கவலையும் இல்லை.

பாடல்கள் சோளப்பொரி.

வில்லன், கிரிக்கெட் கேம் ஆடிய படியே, பாஸ்கெட் பாலை கவனிக்கும் உத்தி நைஸ்.

எல்லாம் ஒரே மூஞ்சி போல இருப்பதால் யார் - எந்தக் கும்பல் என்று புரிபடுவது குழப்பம்ஸ்!

வல்லினம் - கோல்!

குமுதம் ரேட்டிங்! - நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in