தினமலர் விமர்சனம்
சமீபமாக பெங்களூரு டேஸ் ( பெங்களூர் நாட்கள் ) , உள்ளிட்டசில மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி வாகை சூடிவருகின்றன... அந்த வரிசையில் பிருத்விராஜ் நடித்து மெமரீஸ் எனும் பெயரில் மலையாளத்தில் சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் ரீமேக்காக ஆறாது சினம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்அறிவழகன்.
ஏற்கனவே ஈரம் தந்த, அறிவழகனின் திரைக்கதை, வசனம், இயக்த்தில் "ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அருள்நிதி கதாநாயகராக நடித்து, வெளிவந்திருக்கிறது ஆறாதுசினம்.
கதைப்படி, மதுரை, காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருள்நிதி, மாட்டுத்தாவனி சேகர் எனும் ஒரு பெரிய ரவுடியை என் கவுண்டர் செய்ய, தன் டீமுடன் துரத்தும்போது, எதிர்பாராத விதமாக, ரவுடியின் மனைவி, அருள்நிதியின் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா பட்டு உயிரை விடுகிறார். அப்போது உயர் அதிகாரிகளிடம் இருந்து அந்த ரவுடியை என்கவுண்டர் செய்ய வேண்டாம்... என்று போன் வருகிறது. அதனால், ரவுடி மீதான என்கவுண்ட்டர் திட்டத்தை கைவிடுகிறார் அருள்நிதி.
கொஞ்சநாளில் பழிக்கு பழியாக, மனைவியை இழந்த ரவுடி, அருள்நிதி வீட்டில் இல்லாத நேரம் ., அவரது வீட்டுக்குள் நுழைந்து, அருளின்ஆசை மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும், அவரது அழகிய குழந்தையை கொலை செய்ய முயற்சிக்கிறார். இது சமயம் வீட்டிற்குள் வரும் அருள்நிதி, தன் குழந்தையையும், மனைவியையும் காப்பாற்ற போராடுகிறார். ஆனாலும், அருள்நிதியின் கண்எதிரே அவரது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விட்டு தானும் அருள்நிதியின் துப்பாக்கி தோட்டாவுக்கு இரையாகிறார் ரவுடி மாட்டுத்தாவனி சேகர்.
அன்றுமுதல், தன் கண்ணெதிரே மனைவி, குழந்தை துள்ளத் துடிக்க படு கொலை செய்யயப்பட்ட துக்கத்தில், குடி, குடி, குடியென... குடிஅடிமையாகிடும் அருள்நிதி, போலீஸ் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். குடிக்கிறார்.
இச்சமயத்தில் தமிழ்நாட்டில் நாமக்கல் - பரமத்தி வேலூர், தேனி - போடிநாயக்கனூர், காரைக்குடி - தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட கிழமையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து ஒரே மாதிரி கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை போலீஸ் உதவி கமிஷ்னராக இருக்கும் ரோபோ சங்கரும், அவரின் உதவி போலீஸாக இருக்கும் சார்லியும் விசாரிக்கிறார்கள். ரோபோ சங்கரின் காமெடி தனத்தாலும், ஈகோவாலும் அந்த வழக்கில் குற்றவாளி எஸ்கேப் ஆகியபடி அடுத்தடுத்து கொலை செய்கிறான.
கொலைகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதனால் டென்ஷனாகும் உயர் அதிகாரி ராதாரவி, இன்று, குடும்பத்தை இழந்த சோகத்தால் குடிகாரர் ஆனவர் அருள்நிதி என்றாலும் அவரது அபார திறமை மேல் உள்ள நம்பிக்கையில் அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார். முதலில் அதை ஏற்க மறுக்கும் அருள்நிதி, தன் தாயின் வற்புறுத்தலுக்கும், இறந்த மனைவியின் அசிரீரிக்கும் பின், முழு மனதுடன் அவ்வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார்.அருள்நிதியின் விசாரணைக்குப்பின் அந்த வழக்கிற்குப்பின் ஒளிந்து கிடக்கும் பல பகீர் ரக நிஜங்கள் தெரிய வருகிறது. சில திருப்பங்கள் நிகழ்கிறது அதன்பின், நடக்கும் தீவிர தேடுதல் வேட்டையும், விசாரணையும், விறுவிறுப்பு திருப்பங்களும் தான் ஆறாது சினம் படத்தின் அதிரடி மீதி பாதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அருள்நிதி, அஸிஸ்டண்ட் கமிஷ்னர் அரவிந்த் எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. தன் காதல் மனைவியையும், ஆசை குழந்தையையும், தன் கண்முன்னே ரவுடி கொல்லும் போது, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கும் அருள் நிதி, அந்த சம்பவத்தையும், தன் குடும்பத்தின் கடைசி நேர சப்தத்தையும் அடிக்கடி ராவாக குடித்தபடி நினைத்து பார்க்கும் காட்சிகளிலும், நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
அதிலும், இந்து அருள் நிதிக்கும் - அவர் கிருஸ்து காதலி ஐஸ்வர்யாவுக்குமிடையேயான கல்யாண சீன் - பொயடிக்... எல்லாத்தையும் விட்டுட்டு எங்கூட வான்னா... எல்லாத்தையும் விடுன்னு அர்த்தம் அல்ல... நீ பிறந்ததில் இருந்து நீ கும்பிடும் சாமியை கும்பிடு... என அருள்நிதி, ஐஸ்வர்யாவை அரவணைக்கும் இடம் சூப்பர்ப்! இது மாதிரி காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் மனிதர். கீப் இட் அப் அருள்!
அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சமுள்ள, நல்ல படங்களையே தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, இப்படக் கதையையும் தனக்கேற்றபடி., தேர்வு செய்து சிறப்பாக நடித்திருப்பதற்காகவும், ஒன்றிரண்டு படங்களுக்கு முன், ஒரு படத்தில் கான்ஸ்டபிளாக காமெடி செய்த அருள், இதில் திறமையான ஏசி யாக நடந்த தொடர் கொலைகளில் இயேசு, மக்களிடம் பேசிய போதனை மொழியான அராமிக் லெட்டர்ஸ் சம்பந்தப்பட்டிருப்பது, சிலுவையில் அவர் அறையப்பட்டது மாதிரி கொலை செய்யப்படுபவரின் பூத உடல்கள் கட்டி வைக்கப்படுவது, கொலை செய்யப்படும் ஆட்கள் வெள்ளி கிழமையில் காணாமல் போய், ஞாயிறன்று போலீஸ் கையில் கிடைப்பது, ஒவ்வொரு பாடியும், முதல் பாடிக்கிடைக்கும் இடத்திற்கும், அடுத்த பாடிக் கிடைக்கும் இடத்திற்கும் இடையே 150 கிலோ மீட்டர் தூரம் இருப்பதை அறிவது, என ஏகப்பட்ட விஷயங்களை கண்டறிகிறார். அதற்காக அருள்நிதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் டூ யூ சொல்லியே ஆகவேண்டும்..
அருள்நிதியின் காதல் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ், கொஞ்சம் கொஞ்சம் ப்ளாஷ்பேக் காட்சிகளிலேயே வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். காக்கா முட்டையில இரண்டு பசங்களுக்கு அம்மா... இதுல ஒரு பெண் பிள்ளைக்கு தாய்.... அடுத்த படத்துல மூணு குழந்தைக்கு தாயாகதயாரா? மேடம்.? !
அதே மாதிரி, அருள்நிதி பற்றி ஆரம்பத்தில் தவறாக கருதிடும், பின் அவருக்கு உதவும் பெண் நிருபராகவும் வரும் ஐஸ்வர்யா தத்தாவும் கொஞ்ச நேரமே வந்தாலும் நீண்ட நாள் மனதில் நிற்கின்ற பாத்திரத்தில் நச்சென்று நடித்திருக்கின்றனர்.
போலீஸ் ஜாயின்ட் கமிஷ்னராக வரும் ராதாரவி, அருளின் அம்மாவாக வரும் துளசி, அமைச்சர் - ஆர்என்ஆர் - மனோகர், மற்றும் இரக்க மனமுள்ள, இயல்பான போலீஸாக வரும் சார்லி, ஆகியோர் நடிப்பில் அனுபவம் கொப்பளிக்கிறது. ரோபோ சங்கரின் காமெடி அடாவடி, அதிகப்படியாகத் தெரிகிறது. க்ளைமாக்ஸில் மட்டுமே முகம் காட்டும் சங்கிலி தொடர் கொலையாளியாக தூங்கா நகரம் இயக்குனர் கெளரவ், கொடூர வில்லனாக லாஜிக்காக, மேஜிக்காக கொலை செய்து அலறடிக்கிறார். ராம்நாத் ஷெட்டி, டாக்டர் சூரி, உள்ளிட்டவர்களும், அவர்களது பாத்திரங்களும் ஒ.கே.
தனிமையே தனிமையே .... இத்தனை நாள் தாகம்... உள்ளிட்ட பாடல்கள், தமன் எஸ்.எஸ். இசையில் பக்காவாக உள்ளதென்றால், பின்னணி இசை, பாடல்களைக் காட்டிலும் மேலும் சிறப்பு.
ஜீத்து ஜோசப்பின் கதை, ராஜேஷ் கண்ணாவின் படத்தொகுப்பு, சக்தி வெங்கட்ராஜ்.எம்.மின் கலை இயக்கம், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைபலே. அதிலும் அந்த டைட்டில் கார்டு சமயத்தில் மிதமான வேகத்தில், மிரட்டலான சப்தத்தில் மரம் செடி கொடி.. நிரம்பிய சாலைப்பகுதியில் பயணிக்கும் கேமிரா, சபாஷ்யா!
ஆறாது சினம் படத்தின் திரைக்கதையிலும் காட்சிப்படுத்தல்களிலும் ஹீரோவின் சகோதரர் தான் வில்லனின் லாஸ்ட் டார்கெட்.... என்பது ஆரம்பத்திலேயே தெரிய வருவதும், ராதாரவி, ரோபோ, சார்லி, அருள் உள்ளிட்ட இவர்கள் அந்த சங்கிலித் தொடர் கொலைகளுக்கான ஸ்பெஷல் போலீஸ் டீம் என்பதை சொல்லாது, ஓட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் ஒரு ஜெ.சி, இரண்டு ஏ.சி, சார்லி மாதிரி ஏதோ சில போலீஸ்காரர்கள் மட்டுமே இருப்பது மாதிரியும் காட்டியிருப்பது சற்றே குழப்புகிறது.
அதேபோன்று, அருள் நிதியின் மொடாக்குடி நினைவுகளில் மட்டும் அவ்வப்போது வாழும் அவர் மனைவி, குழந்தையின் காட்சிகளை ப்ளாஷ்பேக்காக துண்டு, துண்டாக காட்டாது... ஆரம்பத்திலேயே இன்னும் அழகாக ஒரு தொகுப்பாக காட்டியிருந்தால் இன்னும் அறிவழகனின் இயக்கத்தில் அழகாக இருந்திருக்கும் ஆறாது சினம் என்பது நம் கருத்து மட்டுமல்ல... பெருவாரியான ரசிகர்களின் கருத்தும் கூட!
ஆனாலும், இது போன்ற குறைகளையும் தாண்டி மலையாள மெமரீஸைக் காட்டிலும், ஆரம்ப காட்சிகளுக்கு அடுத்தடுத்து போகப்போக விறுவிறுப்பைக் கூட்டி வித்தியாசத்தை காட்டியிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்! கூடவே அருள்நிதியும்!
ஆகவே, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் வெற்றிப் பட வரிசையில் அருள்நிதியின் ஆறாது சினம் படமும் இடம்பெறுவது நிச்சயம்!
மொத்தத்தில், "ஆறாது சினம் - அதிரடி படம்!
----------------------------------------------------------------------
கல்கி சினிமா விமர்சனம்
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ஜீத்து ஜோஸப்பின் கதையான 'மெமரீஸ்' படத்தின் ரீமேக் இது. பெரும்பாலான திரைக்தை - காட்சிகள் உட்பட - மலையாள மூலத்தை ஒட்டியே இருக்கின்றன. தொடர் கொலையாளி ஒருவனைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிக் காவல்துறை அலுவலர் வேடத்தில் அருள்நிதி.
படம் மழுக்க லேசான தாடி மற்றும் கசங்கிய சட்டையுடனே திரிகிறார். போதாக்குறைக்கு கர்ணனின் கவச குண்டலம் போல ஒவ்வொரு காட்சியிலும் கையில் மதுக் குப்பி! சோகம் இருப்பதால் குடிப்பதாக தர்ம நியாயம் வேறு. சரி, குடிப்பதால் சோகமாவது மறைந்ததா என்றால் அதுவும் இல்லை. குடித்துவிட்டு மேன்மேலும் சோகப் புலம்பலோ புலம்பல்.
இந்த மாதிரி சீரியஸ் படங்களில் சென்டிமெண்டோ, துருத்திக் கொண்டிருக்கும் நகைச்சுவையோ படத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும். மலையாளத்தில் இதை உணர்ந்து கச்சிதமாகக் கடைப்பிடித்திருந்தார்கள். ஆனால், ஆறாது சினத்தின் ரோபோ சங்கர் மற்றும் சார்லியின் நகைச்சுவை அபத்தம்.
நிருபர்களைப் பார்த்துப் பேசும், 'தூக்கி அடிச்சிருவேன்' வசனம் கூட எடுபடவில்லை. 'பாக்கிறதெல்லாத்தையும், அநியாயம்னு சொல்லக் கூடாது. கிட்டப்போய்ப் பார்க்கணும்' மாதிரியான வசனங்கள் கூர்மை. பின்னணி இசை படத்தோடு ஒன்றிக் கலந்திருக்கிறது. தொய்வில்லா எடிட்டிங் ஜிவ்வ்வ்வ்! சபாஷ்!
சீரியஸான இந்தப்படத்தில் சதுர முகக் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தடி சாக்கில் அருள்நிதிக்கு இரண்டு முத்தங்களைக் கொடுத்து அந்நியோன்யத்தை வெளிப்படுத்துகிறார். சோளக் கொல்லை பொம்மையின் பானைக்குள் பிணத்தின் மகத்தைக் காட்டியிருக்கும் காட்சி கெதக்.
சார்லி இன்ஸ்பெக்டர் பரமத்தி வேலுரானாலும் சரி, தேனியானாலும் சரி எங்கே கொலை நடந்தாலும் விசாரிக்கும் குழுவில் அவர் இடம்பெறுகிறார். அவருக்கு அந்த அளவு பரந்த அதிகாரம்.. அடேயப்பா..!
சிலுவையின் வடிவத்துக்கும் கொலை நடக்கும் இடங்களுக்கும் பொருத்தம் இருப்பதாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். சிலுவையின் மையத்தில் இருந்து, அதன் நான்கு எல்லைகளும் ஒரே தூரத்தில் இருக்காது. மேலும் படத்தில் சொல்லியிருப்பதைப் போல ஒரே தூரம் என்றாலும், நேர்கோட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை 180 டிகிரி என்பதை 180 கி.மீ. என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ!
ஆறாது சினம் - போறாது கனம்!