கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
விமர்சனம்
தயாரிப்பு : ஸ்ரீ கணபதி பிலிம்ஸ்
இயக்கம் : கே. ரங்கராஜ்
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா, பரதன், நிமி இமானுவேல்,பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன்.
இசை : ஆர்.கே.சுந்தர்
வெளியான தேதி : 14.03.2025
நேரம் : 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 2.25/5
கதைக்களம்
தொழிலதிபரான அமித் எஸ்டேட்டில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக ஸ்ரீகாந்த் வேலை செய்து வருகிறார். பெரிய கோடீஸ்வரர் ஆன சச்சு வீட்டில் புஜிதா பொன்னாடா வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் ஏமாற்றி தாங்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்றும் பணக்காரர்கள் என்றும் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. அதன் பிறகு யாருடைய பெயரை சொல்லி இவர்கள் ஏமாற்றினார்களோ அவர்கள் இடத்திலேயே இவர்கள் பொய் சொன்னது தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? இவர்கள் இருவரின் காதல் என்ன ஆனது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்து போன பொய் சொல்லி ஏமாற்றி காதலிக்கும் பழைய கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் கே ரங்கராஜ். அதில் புதிய விஷயங்களை சேர்த்து சுவாரசியமாக சொல்லி இருந்தால் கூட ரசிக்கும்படியாக இருந்திருக்கும். இவ்வளவு அனுபவம் இருந்தும் ஏன் இது போன்று ஒரு படத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை. அதேபோல் ஹீரோ மார்க்கெட்டை இழந்துவிட்ட நடிகர் ஸ்ரீகாந்தும் பழைய இடத்தை பிடிப்பதற்காக இதுபோன்று பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இனியாவது நல்ல கன்டென்ட் மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தால் இண்டஸ்ட்டியில் அவர் நீடிக்க முடியும்.
அதேபோல் ஹீரோயின் புஜிதா பொன்னாடா திரையில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள பரதன் மற்றும் நிமி இமானுவேல் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். இவர்களோடு பார்கவ் , நம்பிராஜன், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர். பழம்பெரும் நடிகர்களான கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். பி.என்.சி. கிருஷ்ணாவின் வசனம் எடுபடவில்லை.
தாமோதரன் ஒளிப்பதிவால் ஓரளவிற்கு படத்தை பார்க்க முடிகிறது. ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் எரிச்சலடைய வைக்கிறது.
பிளஸ் & மைனஸ்
படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருப்பதாலும், ஒளிப்பதிவாளர் உதவியாளும் படத்தை ரசிக்க முடிவது பிளஸ். பழைய புளித்த மாவு என்றாலும் அதில் மசாலா சேர்த்து மசாலா தோசையாக இயக்குனர் கொடுத்திருக்கலாம். அதையும் தவறவிட்டது மைனஸ்.
"கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" - கொஞ்சம் பழசு
பட குழுவினர்
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்