Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

றெக்க

றெக்க,Rekka
21 அக், 2016 - 12:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » றெக்க

மக்கள் செல்வன் எனும் பட்டத்துடன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மூன்றாவது படமே "றெக்க". சேதுபதி ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க, "வா டீல்" படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள "றெக்க" ரசிகர்கள் நெஞ்சில் றெக்க கட்டி பறக்குமா...? பார்ப்போம்...!


வேலை வெட்டி இல்லா கும்பகோணத்து வாலிபர் சிவா எனும் விஜய் சேதுபதி., தன் பெற்றோரின் சம்மதத்துடன் காதல் ஜோடிகளை கல்யாணத்தில் சேர்த்து வைக்கும் வேலையை சேவையாய் செய்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு சேவையால் ஊரின் பெரும் ரவுடி டேவிட்டை பகைத்துக் கொள்ளும் சேது, அதன் விளைவாக தன் ஆசை தங்கச்சியின் திருமணத்தின் போது வில்லன் டேவிட்டிடம் மண்டியிட வேண்டிய சூழல். சேதுபதி மண்டியிட்டாரா? அல்லது, டேவிட்டால் மதுரை சென்று, செயற்கரிய காரியங்கள் பல செய்து, தனக்கும் ஒரு தேவதையைத் தேடிக் கொண்டு, ரசிகனை மயிர் கூச்செரியவைத்தாரா..? என்பது தான் "றெக்க" படத்தின் கதையும், களமும்!


காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து நிறைய விரோதமும், தனக்கு ஒருகாதலியையும் சேர்த்துக் கொள்ளும் சிவாவாக விஜய் சேதுபதி வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். நடை, உடை, பாவனை... எல்லாவற்றிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் சேதுபதியிடம் ஆக் ஷன் கொப்பளிக்கிறது. ஆனால் அது, லாஜிக்காக கொப்பளிக்காதது சற்று வருத்தம்.


மதுரை பெரும்புள்ளி மணிவாசகத்தின் மகள் பாரதியாக., சிவா - சேதுபதியை காண்பதற்கு முன்பிருந்தே அவர் மீது காதல் கொண்டிருக்கும் அம்மணியாக, அழகியாக சேதுபதி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடி வரும் லட்சுமிமேனன் நம்ப முடியாத கச்சிதம்.


விஜய் சேதுபதியின் இன்பார்மர் நண்பராக வரும் காமெடி சதிஷ், செல்வம் அண்ணனாக வரும் கிஷோர், நாயகரின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார், நாயகியின் அம்மா மீரா கிருஷ்ணன், கும்பகோணத்து வில்லன், கோயமுத்தூர் வில்லன், மதுரை மணிவாசகம்... உள்ளிட்ட எல்லோரும் கனகச்சிதம்.


யுகபாரதியின் வரிகளில் டி.இமானின் இசையில் சும்மா விர்ரு ... விர்ருன்னு..." பாடல் வசீகரம் என்றாலும், அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும், மெட்டமைக்கப்பட்டிருக்கும் விதமும் மாதவன் நடித்த "ரன்" படப்பாடலை ஞாபகப்படுத்துவது கண்ணைக் கட்டுது. இதே இசைஞர், இதே பாடலாசிரியரின் கூட்டணியில் "கண்ணைக் காட்டு போதும்... ", "கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை.." உள்ளிட்ட பிறபாடல்கள் புது வித ரசனை... என்பது ஆறுதல் மோகன மகேந்திரனின் கலை இயக்கம் கச்சிதம், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஓவியப் பதிவு.


"ஒருத்தன் சண்டை வேண்டாம்... சண்டை வேண்டாம்ன்னா... அவன், சண்டைக்கு பயந்தவன்னு அர்த்தமில்ல, அவன், அதைவிட பெரிய சண்டைக்கு வெயிட் பண்றான்னு அர்த்தம்...", காட்டுக்கு போயி புலியவேட்டை ஆட முடியலைன்னு.... வீட்டுக்கு வந்து பூனைய அறுத்துப் போட, சொல்றீயா... , "சார் நீங்க ஹீரோ சார்... கட்டிக்கப் போற பொண்ணை விட்டுக் கொடுத்துட்டு போறீங்கள்ள... அப்போ ஹீரோ தான்...", " படிக்கப் போனான் பத்திரம் போச்சு... படிச்சுட்டு வந்தான்.... அந்த வீடும் போச்சு..." என்பது உள்ளிட்ட வசனங்கள் வசீகரம் என்றாலும், ஆறாம் வகுப்பு ப்ளாஷ்பேக், தங்கச்சி கல்யாணத்தை விட்டுட்டு டேவிட்டுக்கு பயந்து சிவா, மதுரை போய் ஆள்பலம் நிரம்பிய மணிவாசகம் ஆட்களையே நையப் புடைத்து விட்டு அவர் பெண்ணைத் தூக்கிக் கொண்டு கும்பகோணம், கோயமுத்தூர் என அலைவதற்கு பதில் டேவிட்டையும் அவர் ஆட்களையும் கும்பகோணத்திலேயே புடைத்திருக்கலாமே? என எழும் வினா.., மதுரை பெரும்புள்ளி மணிவாசகத்தின் மகள் பாரதி, சிரித்தபடி முன் பின் தெரியாத சிவா, இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓடி வருவது... லட்சுமி மேனனாவது பரவாயில்லை... சேதுபதி செய்து வைத்த 80-வது கல்யாணத்தை பார்த்து அவர் மீது காதல் வசப்படுவதாக பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. ஒ.கே. ஆனால், பாரதி - லட்சுமியின் அம்மா, பாட்டி எல்லாம் பாரதி - லட்சுமியை, சிவா - சேதுபதியுடன் சிரித்தபடி வழியனுப்புவது... எல்லாம் லாஜிக்காக இடி, இடியென இடிக்கிறது .


இது மாதிரி சிறு, சிறு குறைகளையெல்லாம் தாண்டி ரத்தின சிவாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் "றெக்க - ஒரு மாதிரி, றெக்க கட்டி பறக்க முயற்சித்திருக்கிறது அவ்வளவே!"


ஆக மொத்தத்தில் "றெக்க - பறக்கல்லாம் இல்லை... - பார்க்க...லாம்!"




---------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்




முன்னொரு காலத்தில், (மைக்) மோகன் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும் மூன்று திரையரங்குகளில் காட்டப்பட்டதாகச் சொல்வார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது விஜய் சேதுபதிக்க அந்தச் சிறப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை தக்கவைத்துக் கொள்ள நினைத்தால் படத் தேர்வில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

தென்னந்தோப்பில் பிரம்மாண்டமான திரையில் விளையாட்டுகளை ரசிக்கும் கபீர்சிங் மற்றும் அவரது எதிரி ஹரீஷ் உத்தமன் தோன்றும் ஆரம்பக் காட்சியில் குபீரென்று படம் வேகம் எடுப்பதென்னவோ உண்மைதான். கொஞ்ச நேரத்திலேயே வேகம் மங்கிவிடுகிறது. ஏற்கெனவே சிலபல படங்களில் பார்த்துத் தேய்ந்த கதை மற்றும் காட்சியமைப்புகள் அலுப்பை உண்டாக்குகின்றன.

காதல் ஜோடிகளைச் சேர்த்துவைக்கும் வேலை நம்ம ஹீரோவுக்கு. ஆனால் அவர் வக்கீலாம். போகிற போக்கில் அப்பா கே.எஸ். ரவிகுமார் அடித்துவிடும் பேச்சில் இருந்து நாம் அதை அவதானிக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு - படம் முடியும் வரையிலும் - அவர் எந்தக் கோர்ட்டிலும் வாயைத் திறந்து பேசவில்லை. கோவையில் ஒரு ஃபுட் கோர்ட்டில் தேவையான அளவு பேசுகிறார். அவ்வளவுதான்!

நூற்றுக்கணக்கான ஆட்களைத் தனியொருவராக விஜய்சேதுபதி தூக்கித் தூக்கி வீசுகிறார். அவர்களில் பலரும் ஏற்கெனவே உடையத் தயார் நிலையில் இருக்கும் கார் கண்ணாடிகள், கதவுகள், மேசைகள் மீது விழுந்து சிதறவைக்கிறார்கள். அடேங்கப்பா! ஆனால் படா படா தாதாக்கள், மிகப் பெரிய அரசியல்வாதி என்று யாரிடமும் சின்னத் துப்பாக்கிகூட இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஆச்சர்யம்.

கதாநாயகி லட்சுமி மேனன், முகத்தில் லேசான தழும்போடும் மிகை ஒப்பனையோடும் திகழ்கிறார். அவரது முக்கியமான நடிப்பு, விஜய் சேதுபதி நடந்தாலும் பேசினாலும் எதிரிகளோடு மோதினாலும் வேறு என்ன செய்தாலும் ஒரு மாதிரி கிறக்கப் பார்வை பார்ப்பதுதான்.

இமாம் இசையமைப்பு சண்டைக் காட்சிகளில் அமர்க்களமாக இருக்கிறது. விர்ர் பாட்டு கிர்ர்ர்ர்ரடிக்கவைக்கும் சூப்பர் அதகளம்! விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பும் தனிப்பட்ட உச்சரிப்பும் படத்துக்குப் பெரும் பலம்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கட்டக் கடைசியில் ஆறாம் கிளாஸ் பையன், டியூஷன் டீச்சரிடம் ஐலவ்யூ சொல்வதாகக் காட்சி வைத்திருக்கிறார்கள். பின்னாளில் லவ் என்றால் அன்பு என்று பையன் சேதுபதி உணர்ந்து கொள்வதாக ஒரு சமாளிப்பு வேறு


மொத்தத்தில், றெக்க - மொக்க.

திரையரங்கில் முதுநிலை ஆசிரியர்கள் பல்லடம் முகமது அயூப் மற்றும் ஒண்டிப்புதூர் கணேசன் கருத்து. விஜய் சேதுபதி படம்னா விடமாட்டோம். இத மாதிரி படங்களை அவர் தவிர்ப்பது நல்லது. படம்... ம்ஹூம்...



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
றெக்க தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in