பாட்னர்,Partner

பாட்னர் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ராயர் பார்ச்சுனா கிரியேஷன்ஸ்
இயக்கம் - மனோஜ் தாமோதரன்
இசை - சந்தோஷ் தயாநிதி
நடிப்பு - ஆதி, யோகி பாபு, ஹன்சிகா, பாலக் லால்வானி
வெளியான தேதி - 25 ஆகஸ்ட் 2023
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.5

வாழ்க்கையில் நடக்கவே நடக்காத விஷயங்களை கதையாக வைத்து ஒரு படத்தை எடுக்கும் போது படைப்பு சுதந்திரத்துக்கு எல்லையே கிடையாது. என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். அப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மனோஜ் தாமோதரன் ஒரு சுவாரசியமான கதையை யோசித்திருக்கிறார். கதையை யோசித்த அளவுக்கு திரைக்கதையையும், காட்சிகளையும் யோசிக்கவில்லை. அதையும் கூடுதல் கவனத்துடன் செய்திருந்தால் கவனிக்கப்படக் கூடிய படமாக இந்தப் படம் இருந்திருக்கும். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்.

ஊரில் வாங்கிய கடனை அடைப்பதற்காக சென்னைக்கு வருகிறார் ஆதி. நண்பன் யோகிபாபுவுடன் தங்கியிருந்து அவரது அலுவலகத்திலேயே வேலைக்குச் சேர்கிறார். ஐ.டி. கம்பெனி போல நடக்கும் ஒரு திருட்டு கம்பெனிதான் அவர்கள் வேலை செய்வது. ஆராய்ச்சியாளரான பாண்டியராஜன் வீட்டிலிருந்து ஒரு 'சிப்'பை எடுத்து வந்தால் 50 லட்சம் பணம் தருகிறேன் என ஜான் விஜய் அந்த கம்பெனியில் சொல்கிறார். அதை மடை மாற்றி தானே அந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார் ஆதி. அந்த சிப்பை எடுக்கச் செல்லும் போது ஆராய்ச்சி ஊசி ஒன்று யோகிபாபுவை குத்த, அவர் பெண்ணாக மாறுகிறார். அந்தப் பெண்தான் ஹன்சிகா. அவர் மீண்டும் ஆணாக மாறினாரா, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு நகைச்சுவைப் படத்துக்குரிய கதை. ஆனால், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. படம் முழுவதும் யோகிபாபு இருந்தாலும் காமெடிக்கு அப்படி ஒரு வறட்சி. சுவாரசியமான கதையை எப்படி சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவது என்பதை இன்றைய பல இயக்குனர்கள் கற்றுக் கொண்டு வருவது அவர்களுக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது.

'மரகத நாணயம்' படத்தில் ஏற்கெனவே நகைச்சுவை கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார் ஆதி. அந்த படம் தந்த அனுபவத்தில்தான் அவரும் இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்க வேண்டும். நம்பி தேர்வு செய்த ஆதியை இயக்குனர் நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார்.

யோகிபாபு படத்தில் நகைச்சுவை சிறப்பாக இருப்பது அந்தந்த இயக்குனர்களின் கைகளில்தான் உள்ளது என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. தனக்காக ஒரு காமெடி கூட்டணியை உருவாக்கி நல்ல நல்ல டைமிங் வசனங்களை எடுத்துப் பேச யோகிபாபு முயற்சிக்க வேண்டும்.

இடைவேளைக்குப் பின்தான் ஹன்சிகா வருகிறார். உடலால் பெண்ணாகவும், மனதால் ஆணாகவும் இருக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம். உடல்மொழியில் ஏதாவது வித்தியாசம் காட்டுவோம் என கொஞ்சமே கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்.

ஆதியின் காதலியாக பாலக் லால்வானி, அதிக வேலையில்லை. ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், தங்கதுரை என மற்ற நடிகர்கள் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே சுமார் ரகம்தான்.

பாட்னர் - சீட்டர்

 

பாட்னர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பாட்னர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓