தலைநகரம் 2,Thalainagaram 2

தலைநகரம் 2 - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரைட் ஐ தியேட்டர்ஸ், அருந்தவம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - விஇசட் துரை
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா
வெளியான தேதி - 23 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

இயக்குனராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம், 2006ல் வெளிவந்த 'தலைநகரம்'. அப்படத்தின் இரண்டாம் பாகமாக, அதே 'ரைட்' கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடிக்க, விஇசட் துரை இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகி உள்ளது.

முதல் பாகத்தில் வட சென்னையின் மிகப் பிரபலமான ரவுடி ரைட் ஆக இருந்த சுந்தர் சி, இந்தப் படத்தில் ரவுடியிசத்தை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளிலும் பிரபலமான ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள மீண்டும் ரவுடியாக களம் இறங்குகிறார் சுந்தர் சி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் ஒரு இறுக்கமான முகத்துடனேயே நடித்திருக்கிறார் சுந்தர் சி. ஆனால், சண்டைக் காட்சிகளில் அவரது அடி ஒவ்வொன்றும் அதிரடியாக இறங்கியிருக்கிறது. மூன்று வில்லன்களை தனித் தனியாக வைத்து செய்கிறார். எந்தத் துணையும் இல்லாமல், தனியாளாக அத்தனை அடியாட்களை எதிர் கொள்கிறார்.

படத்தில் மூன்று வில்லன்கள். மூவரையும் அதிரடி வில்லனாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அவர்களில் 'பாகுபலி' பிரபாகர் மட்டுமே தெரிந்த முகம். மற்ற இருவர் யாரென்றே தெரியவில்லை. அதுவே படத்திற்கு மைனஸ் பாயின்ட். பிரபலமான வில்லன் நடிகர்களை போட்டிருந்தால் படத்திற்கு இன்னும் பக்கபலமாக இருந்திருக்கலாம். ஆனாலும், மூவருமே ரைட்டுக்கு முன்னால் ராங்காகப் போய்விடுகிறார்கள்.

படத்தில் கதாநாயகி ஒருவர் இருக்க வேண்டுமென பாலக் லால்வானியை சேர்த்திருக்கிறார்கள். நடிகையாக இருந்தாலும் அவர் ஒரு வில்லனுக்கு ஆசை நாயகியாக இருக்கிறார். அதன்பின் திடீரென சுந்தர் சியின் நல்ல மனதைப் புரிந்து கொண்டு அவரைக் காதலிக்க ஆரம்பிப்பதெல்லாம் சரியான சினிமாத்தனம்.

முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவை அந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது, படத்தையும் காப்பாற்றியது. இந்தப் படத்தில் எந்த ஒரு நகைச்சுவைக் காட்சியும் இல்லை, சென்டிமென்ட் காட்சிகள் மட்டுமே ஆங்காங்க உண்டு. அதற்காக தம்பி ராமையா கதாபாத்திரமும், அவரது மகள் கதாபாத்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள், பின்னணி இசை மிகச் சுமார் ரகம். சுந்தர் சி ஆக்ரோஷமாக வரும் பேதெல்லாம் 'கரகரகரகரகர' என சிலரை கத்தவிட்டிருக்கிறார். அதை பின்னணி இசை என எப்படி சேர்த்தாரோ ?. படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக்கிற்குத்தான் அதிக வேலை. சுந்தர் சியின் அடி ஒவ்வொன்றையும் இடியாக இறங்கும் அளவிற்கு வடிவமைத்திருக்கிறார். படத்தில் உள்ள சில கொலைக் காட்சிகள் கர்ண கொடூரமாய் அமைந்துள்ளன. அவ்வளவு வன்முறையுடன் அந்தக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

படத்தில் போலீஸ் வருகிறார்கள், போகிறார்கள், ஆனால் இத்தனை கொலைகள், ரவுடியிசத்திற்கு எந்த விசாரணையும் செய்யாமல் இருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வில்லனைப் பற்றிய அறிமுகமே நீண்ட நேரம் போகிறது. அதற்குப் பிறகு தாமதமாகவே 'என்ட்ரி' கொடுக்கிறார் படத்தின் நாயகன் சுந்தர் சி. அவருக்கான பில்டப் காட்சிகளைக் கொடுக்க இயக்குனர் நிறைய யோசித்திருக்கிறார். இடைவேளை வரை இருந்த சுவாரசியம், இடைவேளைக்குப் பின்னர் குறைந்துவிட்டது. கிளைமாக்ஸ் இப்படித்தான் போகும் என யூகிக்க முடிவதும் அதற்கு ஒரு காரணம்.

தலைநகரம் 2 - 'தலை' தப்புமா ?

 

தலைநகரம் 2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தலைநகரம் 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓