ஏமாலி
விமர்சனம்
நடிப்பு - சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா, ரோஷினி
இயக்கம் - வி.இசட். துரை
இசை - சாம் டி ராஜ்
தயாரிப்பு - லதா புரொடக்ஷ்ன்ஸ்
காதல் என்ற உணர்வு எவ்வளவு தூய்மையானது, இனிமையானது என பல காதல் படங்கள் தமிழ் சினிமாவில் காவிப் படங்களாக இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றன. காதலையும் கொச்சைப்படுத்தி, காதலர்களையும் கொச்சைப்படுத்தி வந்த படங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்ததில்லை.
இந்த ஏமாலி படம் முடிந்த பின் மட்டும் அட்வைஸ் செய்கிறேன் என ஒரே ஒரு கார்டை மட்டும் போட்டுவிட்டு, அந்த சில வினாடிகளில் மட்டும் நல்லதைச் சொல்லி, அதற்கு முன் படத்தில் இடம் பெற்ற 2 மணி நேர 26 நிமிடக் காட்சிகளிலும் எந்த இடத்திலும் நல்ல விஷயம் என ஒன்றைக் கூடச் சொல்லவில்லை.
இன்றைய தலைமுறைக் காதல் எப்படியிருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்கிறேன் என ஆபாசமாகவும், புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் என மொத்தமாக இளைய சமுதாயத்தைக் குறை சொல்லி அதிர்ச்சியான ஒரு படத்தைக் கொடுத்திருககிறார் இயக்குனர் வி.இசட்.துரை.
ஐ.டி கம்பெனியில் வேலையில் இருக்கும் சாம் ஜோன்ஸ், அதுல்யா 2 வருடத்திற்கும் மேல் காதலர்களாக இருந்து பிரேக்-அப் செய்து கொள்கிறார்கள். காதலி அதுல்யாவை மறக்க முடியாமல் மிகவும் தடுமாற்றத்தில் இருக்கிறார். அவருக்கு நண்பராக, அண்ணனாக இருக்கும் அட்வைஸ் சிகாமணி சமுத்திரக்கனியிடம் தன் காதல் தோல்வியைப் பற்றி சொல்கிறார். எப்படியாவது அதுல்யாவைக் கொலை செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் சாம். சமுத்திரக்கனியின் அட்வைஸ்படி அவரைக் கொலை செய்தால் எப்படி எல்லாம் விசாரணை வரும் என்பதை ஆலோசித்து கொலை செய்வோம் என முடிவெடுக்கிறார்கள். அவர்கள் கொலை திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் ஆபரேன் ஏமாலியின் கதை.
விசாரணை எப்படியெல்லாம் வரும் என்பதை சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் யோசிக்கும், செயல்படுத்திப் பார்க்கும் காட்சிகளில் போலீஸ் அதிகாரிகளாக, சிபிஐ அதிகாரிகளாக அவர்களே நடித்திருப்பதுதான் படத்தின் ஒரே ஒரு புதுமை. அந்தப் புதுமையிலும், சில சமயங்களில் தொடர முடியாமல் ரசிகர்களுக்குக் குழப்பம் வரும்.
அறிமுக நாயகன் சாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே குறை சொல்ல முடியாத அளவிற்கு முயற்சித்து நடித்திருக்கிறார். காதல் தோல்வி என்றாலே நாயகனுக்கு தாடி வைத்துவிடுவார்கள், இதிலும் அப்படித்தான்... அதோடு, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்திலும் அறிமுகப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சமுத்திரக்கனியை இனி, தமிழ் சினிமாவின் நிரந்தர அட்வைஸ் நடிகர் என அழைக்கலாம். இந்தப் படத்திலும் விடாமல் அட்வைஸ் மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறார். ஆனால், அவரே ஒருவரைக் கொலை செய்யச் சொல்லி, ஆலோசனை சொல்லி, கடைசியில் தடுக்க முயல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்தான்.
அதுல்யா படத்தின் முதல் நாயகி. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அவரை அந்த அளவிற்கு ஆபாசமாக காட்டியிருக்க வேண்டாம். தொடர்ந்து அவரை புகை பிடிக்க வைத்து, ஏமாற்ற வைத்து, தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒரு கதாநாயகியின் கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு மோசமாகக் காட்டியதில்லை என்று சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர்.
மற்றொரு நாயகியாக ரோஷினி. சமுத்திரக்கனியுடன் லிவிங்-டு-கெதர் வாழ்க்கை வாழ்கிறார். இவரை மட்டும் கொஞ்சம் கண்ணியமாகக் காட்டியது ஏனோ ?.
இரட்டை அர்த்த வசனங்களை ஆங்காங்கே தெளித்து தனக்கு டபுள் மீனிங் காமெடியும் வரும் என சொல்லாமல் சொல்கிறார் பாலசரவணன்.
மேக்கிங்கில் நிறையவே குறை. தொழில்நுட்ப விஷயங்களும் படத்தில் பெரிய அளவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஒரு டிவி தொடரைப் பார்ப்பது போன்றே உள்ளன. படத்தில் கதாபாத்திரங்களும் விடாமல் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
புகை பிடித்தல், மது அருந்தும் காட்சிகள், லிவிங் டு கெதர் வாழ்க்கை, மோசமான காதல் தோல்வி, நாயகிகளின் உடைகளில் அளவுக்கதிகமான கிளாமர், என நல்ல படங்களை எடுக்க நினைக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் எதை சொல்லத் தயங்குவார்களோ, அவை அனைத்தையும் இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் துரை.
“முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள்” ஐந்து படங்களைக் கொடுத்தும் தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்ற கோபத்தில் ஆறாவது படமான ஏமாலியை இப்படி ஆபாசமாக எடுத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குனர் துரை.
ஏமாலி, ஏமாளி தான்...!
பட குழுவினர்
ஏமாலி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்