திரு மாணிக்கம்
விமர்சனம்
தயாரிப்பு - ஜிபிஆர்கே சினிமாஸ்
இயக்கம் - நந்தா பெரியசாமி
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - சமுத்திரக்கனி, அனன்யா
வெளியான தேதி - 27 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழகத்தில் லாட்டரி சீட்டு வியாபாரம் கிடையாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அதன் வியாபாரம் தடை செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. அதனால், இந்தப் படத்தின் கதைக்களமாக தமிழக எல்லையில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளியை வைத்துக் கொண்டுள்ளார்கள்.
குமுளியில் லாட்டரி சீட்டு கடை வைத்திருப்பவர் சமுத்திரக்கனி, மனைவி அனன்யா, இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருபவர். அவரது கடைக்கு வயதான, ஏழ்மையான பாரதிராஜா வந்து லாட்டரி சீட்டு வாங்குகிறார். பணத்தை பிறகு வந்து தருவதாக சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால், அவர் வாங்கிய லாட்டரி ஒன்றிற்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. பணம் தரவில்லை என்றாலும், அந்த லாட்டரியை வாங்கி வைத்ததால் அது அவருக்குத்தான் சொந்தம் என நினைக்கிறார் நேர்மையான சமுத்திரக்கனி. எனவே, அந்த சீட்டை எடுத்துக் கொண்டு பாரதிராஜாவைத் தேடிச் செல்கிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி அதைக் கொடுக்கக் கூடாது எனத் தடுக்கிறார்கள். பாரதிராஜாவை சந்தித்து அந்த லாட்டரி சீட்டை சமுத்திரக்கனி கொடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்திற்குப் படம் நேர்மையானவராக, கருத்து சொல்பவராக நடிப்பவர் சமுத்திரக்கனி. அதனால், இந்தப் படத்திலும் மாணிக்கம் கதாபாத்திரத்தில் மாசற்ற விதத்தில் நடித்திருக்கிறார். இந்த உலகத்தில் இப்படியும் ஒரு சில நேர்மையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். படம் முழுவதும் சமுத்திரக்கனியைச் சுற்றியே நகர்கிறது. மலையாளப் படங்களில் வரும் யதார்த்தமான கதாபாத்திரம் போல அமைக்கப்பட்டுள்ள மாணிக்கம் கதாபாத்திரத்தில் நிறைவாய் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
கிடைத்த ஒன்றரைக் கோடி ரூபாயை தங்களதாக்கிக் கொள்ள வேண்டும் என தவியாய் தவிக்கிறார் சமுத்திரக்கனியின் மனைவி அனன்யா. அதனால், அவரது பெண் குழந்தைகளைச் சொல்லி மிரட்டி சமுத்திரக்கனியைப் பணிய வைக்க நினைக்கிறார். பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார் நாசர். சில காட்சிகளில் மட்டுமே வந்து பரிதாப்பட வைக்கிறார் பாரதிராஜா. நமது பொறுமையை சோதிக்கும் விதத்தில் தேவையே இல்லாத திணிப்பாய் தம்பி ராமையா கதாபாத்திரம்.
குமுளி பகுதியை அற்புதமாய் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். படத்தின் காட்சித் தரம் சிறப்பாய் அமைவதற்கு அவரது காட்சிப் பதிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. விஷால் சந்திரசேகர் ஒரு சில உணர்வுபூர்வக் காட்சிகளில் உருக வைக்கும் இசையைத் தந்திருக்கிறார்.
கடந்த வருடம் வெளிவந்த 'பம்பர்' என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். அந்தப் படத்தில் ஒரு மலையாள முஸ்லிம் பெரியவர் அவரது குடும்ப வறுமையைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிடம் லாட்டரி வாங்கிய தமிழர் ஒருவரைத் தேடி தூத்துக்குடி வருவது கதையாக இருந்தது. இந்தப் படத்தில் அந்த முஸ்லிம் பெரியவர் கதாபாத்திரத்தை, கேரளாவில் வசிக்கும் தமிழர் சமுத்திரக்கனி கதாபாத்திரமாய் வைத்துக் கொண்டுள்ளார்கள்.
'பம்பர்' படத்தில் இருந்த அந்த உணர்வுபூர்வமான காட்சிகள், இந்த 'திரு மாணிக்கம்' படத்தில் மிஸ்ஸிங்.
திரு மாணிக்கம் - திருப்தி குறைவாய்…
திரு மாணிக்கம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
திரு மாணிக்கம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்