ஆனந்தம் விளையாடும் வீடு
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீவாரி பிலிம்ஸ்
இயக்கம் - நந்தா பெரியசாமி
இசை - சித்துகுமார்
நடிப்பு - கவுதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா
வெளியான தேதி - 24 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
குடும்பப் பாங்கான கதைகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமாகிவிட்ட நிலையில் அண்ணன், தம்பி பாசக்கதையாக வந்திருக்கும் படம்தான் 'ஆனந்தம் விளையாடும் வீடு'.
இயக்குனர் நந்தா பெரியசாமி ஒரு பெரிய குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாகக் கொடுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அண்ணன், தம்பி பாசக் கதைகள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. இந்த படத்தில் காட்டப்படும் பாசமும், போராட்டமும் பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது.
திண்டுக்கல் அருகில் வசிக்கும் ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணன் மகன் கவுதம் கார்த்திக், மகள் வெண்பா. இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள். சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசம் வைத்துள்ளார். வெண்பாவின் குழந்தை தங்கள் வீட்டில்தான் பிறக்க வேண்டும் என சரவணன் நினைக்க, அதற்காக தனக்கு சொந்தமான வீட்டு மனையை சரவணனுக்குக் கொடுத்து வீடு கட்டச் சொல்கிறார் சேரன். அண்ணன், தம்பிகள் என தனது மொத்த குடும்பமும் ஒன்றாக வசிக்க பெரிய வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார் சரவணன். இந்த அண்ணன், தம்பிகளை பகை காரணமாக பிரிக்க நினைக்கிறார் டேனியல் பாலாஜி. அண்ணன், தம்பிகள் ஒன்றாகவே இருந்தார்களா, பிரிந்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் 30க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக காட்சிகளை வலியத் திணிக்காமல், அவரவருக்கு சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் நாயகர்களாக கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூவரையும் சொல்ல வேண்டும். அப்பா சரவணன் பேச்சைத் தட்டாத பாசமான மகனாக கவுதம் கார்த்திக். வாய்ப்பு கிடைக்கும் காட்சிகளில் பாசத்தை வெளிப்படுத்தும் அழுத்தமான நடிப்பு.
சேரனுக்குத்தான் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். ஒரு பக்கம் பாசமான அண்ணன், மறுபக்கம் குடும்பத்தை பிரிக்கத் துடிக்கும் தம்பிகள், தகராறு செய்யும் மனைவி, பாசம் காட்டும் அண்ணன் மகன் கவுதம் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் சேரன்.
அன்பான, அதிர்ந்து கூட பேசாத அண்ணனாக சரவணன். ஒட்டு மொத்த குடும்பத்தையும் தனது ஒற்றைச் சொல்லால் நிர்வகிக்கிறார். இப்படி ஒரு அண்ணன் நமக்குக் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.
கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர். குறைவான வாய்ப்புதான். அடுத்தடுத்த படங்களில் ராஜசேகர் - ஜீவிதா ஜோடியின் நட்சத்திர வாரிசு என்பதை நிரூபித்தாக வேண்டும்.
வில்லனாக டேனியல் பாலாஜி. வழக்கமாக கண்களை உருட்டி வில்லத்தனம் செய்வார், இந்தப் படத்திலும் அப்படியே. தம்பிகளில் செல்லா, சவுந்தரராஜாவுக்கு பொறுப்பற்றவர்களாக நடிக்க நல்ல வாய்ப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மருமகள்களில் சூசனுக்கு மட்டுமே கொஞ்சம் மிரட்டலான காட்சிகள். மவுனிகா அன்பான அம்மாவாக நெகிழ வைக்கிறார்.
சித்துகுமார் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. இம்மாதிரியான படங்களில் பாடல்கள் உணர்வுபூர்வமாய் அமைய வேண்டும். ஒரே ஒரு பாடலையாவது அழுத்தமாகக் கொடுத்திருக்கலாம். பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்துக் குடும்பத்தை அப்படியே யதார்த்தமாய் பதிவு செய்துள்ளது.
இப்படத்தைப் பார்க்கும் போது இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்த 'பாண்டவர் பூமி, கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட சில படங்களின் ஞாபகம் வந்து போகிறது.
அண்ணன், தம்பிகள் ஒன்றாகக் கட்டும் வீடு மட்டும் தான் அவர்களுக்கான பிரச்சினையாக வந்து போகிறது. வேறு எந்த பிரச்சினையும் பெரிய பிரச்சினையாக இல்லாத காரணத்தால் பெரிய சச்சரவுகள், திருப்புமுனை என இல்லாதது குறையாக உள்ளது.
ஆனந்தம் விளையாடும் வீடு - கொஞ்சமாய்…
ஆனந்தம் விளையாடும் வீடு தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஆனந்தம் விளையாடும் வீடு
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்