2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ், காட் பிளஸ் என்டர்டெயின்மென்ட், பர்ப்புள் புல் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - என்எஸ் பொன்குமார்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - கவுதம் கார்த்திக், ரேவதி, புகழ்
வெளியான தேதி - 7 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.75/3

இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி, அந்தக் காலங்களில்தான் கொஞ்சம் படங்கள் வந்தன. அவை உண்மைச் சம்பவங்களைத் தழுவிய படங்களாக அதிகம் இருந்தன. ஆனால், கற்பனையான ஒரு கதையை வைத்து நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பொன்குமார்.

தமிழகத்தில், திருநெல்வேலிக்கு அருகில், மலைகளுக்கு நடுவில் உள்ள செங்காடு என்ற கிராமம். அந்த கிராமத்தில் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஊர்மக்கள். அவர்கள் தினமும் 16 மணி நேரம் பருத்தியிலிருந்து, நூல் எடுக்கும் தொழிலைச் செய்பவர்கள். அந்த கிராமத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொடூர குணம் கொண்ட ஆங்கிலேயே அதிகாரி, இளம் பெண்கள் மீது ஆசைப்படும் அவரது மகன், ஆங்கிலேயனுக்கு விசுவாசமாக இருக்கும் ஜமீன்தார் என படத்திற்கான கதைக்களத்தை, கதாபாத்திரங்களை அந்தக் காலத்திற்கே செல்லும்படியாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் சமயத்தில் செங்காடு கிராமத்தில் உருவாகும் பருத்தி நூலுக்கு அடுத்த 30 வருடங்களுக்கு லாபத்தில் பங்கு தர வேண்டும் என சென்னை மாகாண ஆங்கிலேயே அதிகாரி ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்த நினைக்கிறார். அது சம்பந்தமாகப் பேச செங்காடு கிராம ஆங்கிலேயே அதிகாரியான ராபர்ட்டை (ரிச்சர்ட் அஷ்டன்) அழைக்க கடிதம் அனுப்புகிறார்கள். கடிதம் கொண்டு செல்பவர்கள் புலி தாக்கி இறந்து போகிறார்கள். ராபர்ட்டின் மகனான ஜஸ்டின் (ஜேசன் ஷா) அந்த கிராமத்தில் எந்தப் பெண் வயதுக்கு வந்தாலும் அவர்களை தனது படுக்கைக்கு அழைத்துச் செல்லும் கொடியவன். அவன் கண்ணில் தனது மகள் தீபாலி (ரேவதி) பட்டுவிடக் கூடாது என ஜமீன்தார் (மதுசூதன ராவ்) சிறு வயதிலேயே இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறார். ஆனால், ஒரு சூழலில் ஜஸ்டின் கண்ணில் தீபாலி பட்டுவிட, அவளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கட்டளையிடுகிறான். அதனால், தனது மகளை உயிரோடு பூமியில் புதைத்து பூமி தானம் செய்கிறார் ஜமீன். தீபாலி மீது சிறு வயதிலிருந்தே ஆசைப்படும் பரமன் (கவுதம் கார்த்திக்) அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி மலைகளுக்கு நடுவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள செங்காடு கிராம மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்ற சஸ்பென்ஸ்தான் இந்தப் படத்தில் முக்கியமானது. அதைச் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்க வாய்ப்புள்ளது. அதைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஊர் மக்களுக்கு அது பற்றித் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன என்ற உணர்வே ஏற்படுகிறது. காட்சியமைப்புகளில், கதாபாத்திரங்களில் சரியான கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால் இப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

தன் அம்மாவை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்த ஊர் மக்கள் மீது எப்போதும் வெறுப்புடனேயே இருப்பவர் கவுதம். ஜஸ்டின் வீட்டில் வேலை பார்ப்பவர். சிறு வயதிலிருந்தே ஜமீன் மகள் ரேவதியைக் காதலிப்பவர். ஆனால், ரேவதிக்கு பக்கத்து ஊர் ஜமீன் வாரிசை திருமணம் பேசப் போகிறார்கள் என்று தெரிந்ததும் தனது காதலை மறைத்துக் கொள்கிறார். இருந்தாலும் தனது காதலி நன்றாக இருக்க வேண்டும் என அவரைக் காப்பாற்றுகிறார். காதலிக்காத காதலிக்காக அவர் செய்யும் ஒரு விஷயம்தான் படத்தின் திருப்புமுனை.

ஜமீன் மகள் தீபாலியாக புதுமுகம் ரேவதி. மேக்கப்பில்லாமல் அழகாகவே இருக்கிறார். படத்தில் இவர் மட்டும்தான் காட்சிக்குக் காட்சி புது ஆடையில் வருகிறார். மற்றவர்களுக்கெல்லாம் ஒரே ஆடைதான். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் நண்பராக புகழ். குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். ஆங்கிலேயே அதிகாரி ராபர்ட் ஆக ரிச்சர்ட் அஷ்டன், அவரது மகன் ஜஸ்டின் ஆக ஜேசன் ஷா கதாபாத்திரங்களை தமிழ் பேசுபவர்களாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஜமீன்தாராக மதுசூதன ராவ், விசுவாசத்தை மீறி அடிமையாகவே மாறிவிட்டார். மற்ற கதாபாத்திரங்களில் அந்த பாட்டி மனதில் இடம் பிடிக்கிறார்.

ஷான் ரோல்டன் பின்னணி இசை குறிப்பிடும்படி இருக்கிறது, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி ஹிட் ஆக்கியிருக்கலாம். கலை இயக்குனர் மறைந்த சந்தானத்திற்குத்தான் படத்தில் அதிக வேலை. அதை கவனமாகவே செய்திருக்கிறார். இயக்குனர் செல்வகுமார் அந்த காலகட்டத்தை கண்முன் காட்டியிருக்கிறார்.

கொஞ்சம் குடிசை வீடுகள், ராபர்ட் வீடு, ஜஸ்டின் வீடு என குறுகிய வட்டத்திற்குள்ளேயே மொத்த படமும் நகர்கிறது. மக்களை ராபர்ட், ஜஸ்டின் கொடுமைப்படுத்தும் காட்சிகள் கோரமாக இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பது ஊர் மக்களுக்கு எப்படியும் தெரிந்துவிடும் என்ற கிளைமாக்சை ஆரம்பத்திலேயே யூகித்துவிடலாம். ஆனால், அது எப்படி தெரிய வரப் போகிறது என்ற பதைபதைப்பை திரைக்கதையில் சேர்க்கத் தவறிவிட்டார்கள். இருப்பினும் 1947 காலகட்டத்தை ஓரளவிற்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். அந்த உழைப்பிற்காகப் பாராட்டலாம்.

ஆகஸ்ட் 16, 1947 - வெள்ளையனே வெளியேறு

 

பட குழுவினர்

ஆகஸ்ட் 16 - 1947

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓