அங்காடித்தெரு மகேஷூம், அவரது ஜோடியாக நாடோடிகள், எங்கேயும் எப்போதும், புலி வால் படங்களின் நாயகி அனன்யாவும் நடித்திருக்கும் திரைப்படம் தான் இரவும் பகலும்!
போலீஸ் அதிகாரி துணையோடு மேஜிக் ஷோ நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி, அந்த ஏரியாவில் பெரும் கொள்ளை நடத்தும் ஒரு கொள்ளை கூட்ட கும்பலை, ஹீரோ மகேஷ் அந்த கும்பலில் ஒருவனாக இருந்து கூண்டோடு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கும் கதை. இந்த கதையில் ஹீரோயின் அனன்யா, முதலில் ஹீரோ மகேஷை திருடனாக சந்தேகித்து, பிறகு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு காதலித்து கைபிடிக்கும் கதையையும், கலந்துகட்டி இரவும் பகலும் வரும் படத்தை ஜனரஞ்சகமாக தர முயன்றிருக்கிறார் இயக்குநர்.
அங்காடித்தெரு மகேஷ், குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக ஓவர்லோடு சுமந்திருக்கிறார். அனன்யா அம்சமாக வந்து போகிறார். படத்தின் பெரும் பலம் இவர் தான்.
வில்லானிக் போலீஸ் - ஏ.வெங்கடேஷ் நகைபிரியர் என்பதால் உடம்பு முழுக்க கொள்ளையடித்த நகைகளை மாட்டிக் கொண்டு ஆடிப்பாடுவதெல்லாம் ரொம்ப ஓவர். கூடவே செம போர்!
காமெடி ஜெகன், சாமிநாதன், யுவராணி, கவர்ச்சி சஞ்சனா சிங், ஷகிலா, எல்லோரும் இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்.?!
கிருஷ்ணசாமியின் ஔிப்பதிவும், தினாவின் இசையும் ஓ.கே. வி.டி.விஜயன், என்..கணேஷ்குமாரின் படத்தொகுப்பை நம்பமுடியவில்லை!
இரவும் பகலும் வரும் எனும் டைட்டிலுக்கும், படத்திற்கும் என்ன சம்பந்தம்.? என்பதை இயக்குநர் பாலஸ்ரீராம் தான் விளக்க வேண்டும்!
மொத்தத்தில், இரவும் பகலும் வரும்... ஆனால், வராது!!