2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ்
இயக்கம் - லட்சுமி ராமகிருஷ்ணன்
இசை - இளையராஜா
நடிப்பு - சமுத்திரக்கனி, அபிராமி, முல்லையரசி
வெளியான தேதி - 22 செப்டம்பர் 2023
நேரம் - 1 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதைகளை டிவி தொடர்களில்தான் அதிகம் பார்க்க முடிகிறது. சினிமாவில் அப்படிப்பட்ட கதைகளை வைத்துப் படமெடுத்தால் டிவி சீரியல் போல உள்ளது என்று புறம் தள்ளிவிடுகிறார்கள். இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை கதையாக எடுத்துக் கொண்டு அதை சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

'குழந்தை தத்தெடுப்பு' என்பது அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துவிடாத ஒன்று. அதற்காக சட்ட ரீதியாக சில பல விஷயங்களை தெளிவாகச் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அதில் பெற்ற குழந்தைக்காகப் போராடும் ஒரு தாய், பெறாத குழந்தைக்காகக் போராடும் ஒரு தம்பதியினர் என சென்டிமென்ட்டையும் உணர்வுபூர்வமாய் கொடுத்திருக்கிறார்.

முல்லையரசி, அசோக் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்கின்றனர். அந்தக் குழந்தையை வளர்க்கும் அளவிற்கு வருமானம் இல்லாத முல்லை அந்தக் குழந்தையை யாருக்கோ தத்து கொடுத்துவிடுகிறார். சென்னையில் இருந்து அந்தக் குழந்தை கேரளாவில் இருக்கும் குழந்தையில்லாத நடுத்தர வயது தம்பதியினரான சமுத்திரக்கனி, அபிராமியால் தத்தெடுக்கப்படுகிறது. ஒரு வருடம் கழித்து திடீரென தனது குழந்தையைத் தனக்குத் திருப்பித் தர வேண்டும் என 'சொல்லாததும் உண்மை' என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்துகிறார் முல்லை. விவகாரம் குழந்தை நல கமிட்டி வரை செல்கிறது. சிபிசிஐடி விசாரணையும் ஆரம்பமாகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹீரோக்கள், ஹீரோயின்கள் பின்னால் செல்லாமல் தனது கதைக்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிறார். நல்ல நடிகர்களின் தேர்வே அவரது வேலையை பாதியாகக் குறைத்துவிடுகிறது.

நடுத்தர வயதைத் தொட்ட பின்னும் குழந்தை இல்லாமல் தவிக்கும் சமுத்திரக்கனி, அபிராமி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து அதைத் திடீரென பிரியும் மனநிலையை நமக்கும் பதட்டம் ஏற்படும் அளவிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தான் பெற்ற குழந்தை தனக்கே வேண்டுமென தவிக்கும் முல்லையரசியின் தவிப்பும் நம்மைக் கண் கலங்க வைக்கிறது. பெற்றெடுத்து விட்டவர் ஒரு பக்கம், தத்தெடுத்து வளர்ப்பவர்கள் மறுபக்கம் என இருவரது பாசப் போராட்டத்தையும் 'பேலன்சிங்' ஆகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

அந்த மையக் கதையுடன் 'சொல்லாததும் உண்மை' என்ற டிவி நிகழ்ச்சியின் முன்புலம், பின்புலம் என ஒரு காலத்தில் நிஜத்தில் அவர் பல வருடங்கள் தொகுத்து வழங்கிய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியையும், அதே தொகுப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்து தன் பங்கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஓரிரு காட்சிகளில் வரும் மிஷ்கின், அசோக், பாவல் நவகீதன், ஆடுகளம் நரேன், அனுபமா குமார், அந்த விசாரணை அதிகாரி என ஒவ்வொருவருமே அவர்களது கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜவின் பின்னணி இசை வழக்கம் போல உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு, பிரேம்குமார் படத்தொகுப்பு இயக்குனருக்கு 'ஓகே'வாய் இருந்திருக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகளில் உள்ள நாடகத்தனத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆர் யு ஓகே பேபி - யெஸ்… ஓகே…

 

பட குழுவினர்

ஆர் யு ஓ கே பேபி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓