தினமலர் விமர்சனம்
ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படைப்பு தான் நெருங்கி வா முத்தமிடாதே. டைட்டிலை வைத்துக் கொண்டு மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு காதல் படைப்பாக தெரிந்தாலும், நெடுஞ்சாலையில் நடக்கும் டீசல் கடத்தலும், அதை ஒட்டி நிகழ இருக்கும் அசம்பாவிதமும், தேச துரோகமும், அதை தடுக்கும் ஹீரோவின் சாமர்த்தியமும் தான் நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மொத்த கதையும். அதனூடே காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கட்டி வித்தியாமும், விறுவிறுப்புமாக கதை சொல்ல முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி !
நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் சூழலில், ஊரை அழிக்க ஊடுருவும் தீவிரவாத கும்பலும் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலே லாரியில் டீசல் கடத்தி செல்கிறார் ஹீரோ ! ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அந்த கடத்தலின் பின்னணியில் இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ.,வில் தொடங்கி, முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் லட்சுமி ராமகிருஷ்ணன் வரை சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தான் எப்படி தப்பிக்கிறார் எனும் கதையுடன், இரண்டு காதலையும் (நாயகர் மீதான நாயகியின் காதல் உள்பட) கலந்து கட்டி பக்காவாக கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராகிருஷ்ணன், தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக இக்கதையை இயக்கி இருப்பதால் அந்த இயக்கத்தில் மட்டும் சற்றே கோட்டை விட்டிருக்கிறார்.
நாயகராக புதுமுகம் ஷபீர் ஒரே லுங்கி சட்டையுடன் வீம்பும், வீராப்புமாக தன் பாத்திரத்திற்கேற்ற நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார். அப்பா ஒய்.ஜி.மகேந்திரனிடம் அப்படி என்னதான் ஷபீருக்கு கோப தாபமோ.?!
நாயகி பியா, அப்பா யார்? என்று சொல்லாத அம்மா விஜி சந்திரசேகர் மீது காட்டும் வெறுப்பில் ஆகட்டும், நண்பன்(காதலன்?) என்று உடன் வந்தவன் இக்கட்டான சூழலில் எஸ் ஆகிவிட, காப்பாற்றி கரை சேர்த்த லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான ஹீரோ ஷபீர் மீது காதல் கொள்ளும் காட்சிகளிலாகட்டும்... ஒவ்வொன்றிலும் உருக்கி விடுகிறார் அம்மணி. கீப் இட் அப் பியா!
விஜி சந்திரசேகர், நான்குபேர் சேர்ந்து செய்த கேங்ரேப்பில் தான் நீ பொறாந்தாய்.? என தன் அப்பா யார்? என்று அடிக்கடி கேட்கும் பெண்ணிடம், ஒருநாள் வெடித்து உண்மையை உடைத்து சொல்லிவிட்டு அந்த சூடு ஆறுவதற்குள் மலேசியாவிற்கு பாட்டு கச்சேரிக்கு பாட கிளம்புவதெல்லாம் ரொம்ப ஓவர். ஆமாம், கடைசிவரை விஜி ஸ்டேஜில் பாடவே இல்லையே? ஏன்.?
சித்தப்பா சாவுக்காகவும், சொத்துக்காகவும் காத்திருக்கும் பாலசரவணனின் காமெடி ஓ.கே! லாரியில் லிப்ட் கேட்டு ஏறும் தம்பி ராமையாவின் காமெடி கடி! எம்.எல்.ஏ. ஏ.எல்.அழகப்பன், மத்திய மந்திரி லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் வில்லத்தனமும், சதி செயல்களும் புரியாத புதிர். தலைவாசல் விஜய்யின் காதல் அட்வைஸூம், ரோட்டோரத்து பாலியல் தொழிலாளியின் இரக்க சுபாவமும் ஈரம்!
மெலடி புளூஸின் இனிய இசை, வினோத் பாரதியின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில், நடுக்கடலில் நிற்கும் கப்பலுக்கு போக, படகில் டீசல் இல்லாமல் காத்திருக்கும் தீவிரவாதி யார்.? அவன் காரைக்காலில் செய்த அல்லது செய்ய இருக்கும் சதிச்செயல் என்ன.? ஒய்.ஜி.எம்.முக்கு மகன் ஷபீர் மீது அப்படி என்ன வெறுப்பு.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டிருந்ததென்றால் நெருங்கி வா முத்தமிடாதே ரசிகர்களை இன்னும் கிறங்கி போய் முத்தமிட வைத்திருக்கும்! அவ்வாறு இல்லாதது படத்தில் உள்ள பலங்களை மிஞ்சிற்கும் பலவீனம்!
மொத்தத்தில், நெருங்கி வா முத்தமிடாதே - பல இடங்களில் ரசிகர்களை நெருங்கி கிறங்கிபோக செய்யும்! சில சீன்களில் உறங்கிபோகவும் செய்யும்!!
-------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
லாரிக்குப் பின்னால இருக்கிற விளம்பர வாசகங்களில் ஒண்ணுதான் "நெருங்கி வா! முத்தமிடாதே! அப்படின்றது. மத்தபடி வேறெதையும் எதிர்பார்த்துத் தியேட்டருக்குப் போனால் கம்பெனி பொறுப்பானது.
நாடு முழுக்க டீசல் ஸ்ட்ரைக் நடக்குறபோ காரைக்கால்ல இருக்கிற தீவிரவாதி, கடல்வழியே தப்பிக்கிறதுக்கு அர்ஜன்டா டீசல் தேவைப்படுது. அப்பாவியான கதாநாயகனை, விஷயத்தை மறைச்சிட்டு டீசல் கொண்டு போறதுக்குப் பயன்படுத்தறாரு வில்லன். (வழுக்கைத் தலையாயும், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட, கூட எப்பவும் அடியாளோட இருக்கிறதால் அவரை வில்லன்னு ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்). அந்த விபரீதம் தெரியாம கதாநாயகன், (லுங்கி கட்டிகிட்டு, தாடியும் வச்சிருக்கிறதால அவர் தான் கதாநாயகன்னும் செம ஈஸியாகக் கண்டுபிடிச்சிடலாம்) லாரியில டீசல் எடுத்துகிட்டுக் காரைக்கால் போறார்.
வெறும் லாரிப் பயணத்தை மட்டும் காண்பிச்சால் கோவிச்சுக்குவீங்க இல்லியா? அதனால லாரி போகும்போது, தமாஸ்காரரு ஒருத்தரு, வேவ்வேற சாதியைச் சேர்ந்த ஓடிவர்ர காதல் சோடிங்க ஒண்ணு, ம்ம்ம் அப்புறம் காமமா, காதலா, நட்பா, அல்லது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒண்ணான்னு தெரியாத (அட! நமக்குத் தெரியாத) பைக் விபத்து சோடி ஒண்ணும் லாரிக்குள்ளாற எறிக்கிறாங்க. ஒரு ஸ்டேஜுல கதாநாயகனுக்கு எப்படியோ உண்மை தெரிஞ்சு, கட்டக் கடோசீல போலீஸ் வழக்கம் போல வந்து, எல்லாம் சுபம். அப்பத்தாங்க லுங்கி, தாடி அப்புறம் லேசான ரவுடித்தனம் இருக்கிறதால கதாநாயகன் மேல ஒரு பொண்ணுக்கு கிரிகிரியாயிருது.
ஏதோ ஒரு எஸ்.எம்.எஸ். மூலமா தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்கிறதா சில ஆப்பீசருங்க போகிற போக்கில அடிச்சு விடறாங்க. அது என்னான்னே புரியலை. படம் முடிஞ்சு வெளிய வந்த பலரையும் கேட்டோம். முறைச்சிட்டுப் போறாங்களே தவிர யாரும் சரியா பதில் சொல்லலை.
தம்பி ராமையாவுடைய அதே பிராண்டட் நடிப்பு அலுப்பூட்டுது. படத்தின் ஆரம்பித்தில் இருக்கும் படு விரசமான கரப்பான் பூச்சி டயலாக்கைத் தவிர்த்திருக்கலாம். "ஞான் சோறு தரும் அப்படின்னு ஆரம்பத்தில் மலையாளம் பேசும் அம்பிகா, பத்துப் பதினஞ்சு நிமிசத்துல நல்ல தமிழ் பேசி, பட்டையக் கிளப்புறது ஒரு மெடிக்கல் மிராக்கிள்!
ஒரு சில சீன்களே மட்டும் படத்தில் வந்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணன் அட்டகாசமாகச் செஞ்சிருப்பாங்க. என்னா ஒரு மிடுக்கு! என்னா ஒரு கம்பீரம்!
படத்தில தேசபக்திக்கோசரம் துக்களியூண்டு மெசேஜ் மறைமுகமா இருக்கு. ஆனால், தலைவாசல விஜய் ஒரு சீன்ல வந்து, "மொதல்ல லைஃபில் செட்டில் ஆவுங்க. அப்புறமா லவ் பண்ணுங்கனு கண்டிஷனா மெசேஜ் சொல்லிட்டு உடனடியா காணாம போயிடுறார்.
படத்துல பாராட்டவேண்டிய முக்கியமான அம்சம் மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு! வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதையும் பாராட்டணும்.
பாடல் வரிகள், அப்புறம் பாட்டெல்லாம் பத்தி ஒண்ணுமே சொல்லலையேங்கறீங்களா? எதாச்சு நினைவுல இருந்தா வச்சுகிட்டு இல்லைன்னா சொல்லப் போறேன். என்னாங்க நீங்க?
மொத்தத்தில் "நெருங்கி வா! நிறைய எதிர்பார்க்காதே!