விமர்சனம்
தயாரிப்பு - மாஸ் சினிமாஸ்
இயக்கம் - தாமரை செல்வன்
இசை - திபு நினன் தாமஸ்
நடிப்பு - சாம் ஜோன்ஸ், ஆனந்தி
வெளியான தேதி - 22 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
மதுரை, அரசியல், கவுரவம், காதல், சாதி, கொலைகள் என தமிழ் சினிமாவில் மீண்டும் வந்துள்ள ஆயிரத்து ஒன்றாவது சாதி வெறி காதல் கதை. மதுரையை இன்னும் ரத்த பூமியாகவே எத்தனை இயக்குனர்கள்தான் காட்டப் போகிறார்களோ. அப்படிக் காட்டினால் அந்தப் பக்கத்திலாவது நமது படங்கள் ஓடிவிடாதா என இப்படத்தை இயக்கியுள்ள தாமரை செல்வன் போல சில இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் போலிருக்கிறது.
மதுரையையே தனது அரசியல், ரவுடியிசம் ஆகியவற்றால் ஆட்டிப் படைப்பவர்கள் அண்ணன், தம்பிகளான வேல ராமமூர்த்தி, வெங்கடேஷ். நடைபெற உள்ள தேர்தலில் வேல ராமமூர்த்தியை வேட்பாளராகத் தேர்வு செய்கிறது அவரது கட்சி. அதே கட்சியைச் சேர்ந்த, வேல ராமமூர்த்தியின் மைத்துனரான கரு பழனியப்பவன் தனது மாமாவை எதிர்த்து அரசியல் செய்பவர். எப்படியாவது மாமாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என துடித்துக் கொண்டிருப்பவர். அதற்கு வசதியாக தனது அக்கா மகளும், வெங்கடேஷின் மகளுமான கயல் ஆனந்தியின் காதல் விவகாரம் அவரைத் தேடி வருகிறது. தன்னுடன் படிக்கும் ஆட்டோ டிரைவரின் மகனான சாம் ஜோன்ஸைக் காதலிக்கிறார் ஆனந்தி. இது தெரிந்ததும் சாம் ஜோன்சை ஒரு கொலை வழக்கில் கோர்த்து விடுகிறது கயல் ஆனந்தியின் குடும்பம். இந்த விவகாரத்தை வைத்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல்தான் படத்தின் மீதிக் கதை.
மதுரைப் பின்னணி, காதல் கதை என்றாலே அதில் சாதி என்பதை நமது இயக்குனர்கள் சேர்த்து விடுவார்கள். இந்தப் படத்திலும் அப்படியே சேர்த்திருக்கிறார். என்ன ஒன்று, யார் யார் எந்த சாதி என வெளிப்படையாகவோ, மறைமுகமாகவே சொல்லாமல் தவிர்த்துவிட்டார். இடைவேளை திருப்புமுனையை யோசித்தது போல அதற்குப் பிறகான திரைக்கதையை வேறு விதமாக யோசித்திருக்கலாம். எங்கங்கோ சுற்றி வளைத்து கதையை நகர்த்துகிறார்.
சாம் ஜோன்ஸ் உடனடியாக நடிப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு சினிமாவில் நடிக்க முயற்சிக்கலாம். எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முக பாவத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார். கயல் ஆனந்தி போன்ற அழகான பெண்ணைப் பார்த்தால் இந்த இளம் வயதில் காதல் தானாகவே வந்துவிடும். திரையில் அவர் முகத்தில் அப்படி எதுவுமே வரவில்லை. படங்களைத் தயாரித்து, நாயகனாக நடிக்கலாம், தப்பில்லை. தயாரிப்பதற்குப் பணமிருந்தால் போதும், ஆனால், நாயகனாக நடிப்பதற்கு நடிப்பு வேண்டும். அதனால், நடிக்கக் கற்றுக் கொண்டு நாயகனாக நடிக்க முயற்சி எடுங்கள் சாம்.
படத்தில் இயல்பாக நடித்துள்ள ஒரே நடிகை கயல் ஆனந்தி மட்டுமே. அவரும் இது போல பல படங்களில் நடித்திருப்பார். ஏன் 'பரியேறும் பெருமாள்' படத்தில் கூட இதே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். காதல், கோபம், ஆசை, வெறுப்பு என நவரசங்களையும் அடுத்தடுத்து படம் முழுவதும் வெளிப்படுத்தி படத்தைக் காப்பாற்றுவது ஆனந்தி மட்டுமே.
வேல ராமமூர்த்தி சாதி வெறி பிடித்த அரசியல் தலைவராக மீண்டும் மீண்டும் நடிப்பார் போலிருக்கிறது. அதே ஸ்டீரியோ டைப் ஆக்டிங். பேச்சையும், உடல் மொழியையும் மாற்றவில்லை என்றாலும் தோற்றத்தையாவது படத்திற்குப் படம் மாற்றலாம். அவரது தம்பியாக வெங்கடேஷ். அண்ணனுக்கு அடிமையாக இருக்கும் ஒரு தம்பியாக நடித்திருக்கிறார். நாயகன் சாம் ஜோன்ஸ் அப்பாவாக முனிஷ்காந்த். மற்ற கதாபாத்திரங்களில் தனது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பது இவர் மட்டுமே. கரு பழனியப்பன் மற்றுமொரு அரசியல்வாதி. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார். ஒன்றில் விக் இருக்கிறது, மற்றொன்றில் விக் இல்லை. ஒரு இயக்குனராக இருப்பவருக்கு நடிக்கும் போது இவ்வளவு கவனக் குறைவா ?.
திபு நினன் தாமஸ் இசையில் ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் அதிக ஈடுபாடு இல்லை. ஒளிப்பதிவில் தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் எம்எஸ் பிரபு.
மக்கள் வாழ்வியல், ஆன்மிகம், அன்பு, பாசம் என தமிழ்க் கலாச்சாரத்தின் வேராக இருப்பது மதுரை மாநகர். 'வைகை நதி' ஓடும் அந்த மாநகரைப் பற்றி இனியும் இந்த மாதிரியான படங்களை எடுத்து மதுரை மண்ணை களங்கப்படுத்தாமல் நல்ல படங்களைக் கொடுத்து மதுரை போன்ற மாநகர் இந்த உலகத்தில் இல்லை என இந்த உலகிற்கு வெளிப்படுத்துங்கள் இயக்குனர்களே.
நதி - வறட்சி