ஒயிட் ரோஸ்
விமர்சனம்
தயாரிப்பு - பூம்பாறை முருகன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கே ராஜசேகர்
இசை - சுதர்ஷன்
நடிப்பு - கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ்
வெளியான தேதி - 5 ஏப்ரல் 2024
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2/5
கிரைம் திரில்லர் படங்கள் என்றால் ஒன்று கொலை நடக்க வேண்டும், அல்லது சைக்கோ கதையாக இருக்க வேண்டும். இதுதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பார்முலா. இந்தப் படத்தில் 'சைக்கோ' கதையை வைத்து பயமுறுத்தப் பார்த்திருக்கிறார்கள். எந்த வழக்கமான பார்முலாவையும் சிறிதும் மாற்றி யோசிக்கவில்லை இயக்குனர் கே ராஜசேகர்.
காதல் திருமணம் செய்து கொண்டவர் கயல் ஆனந்தி. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கணவரது பிறந்தநாளில் வெளியில் சென்று திரும்பும் போது போலீஸ் நடத்திய என்கவுண்டரில் அவரது கணவர் தவறுதலாக கொல்லப்படுகிறார். வீட்டு வாடகை பிரச்சனை, கடன் தொல்லை ஆனந்தியை நெருக்குகிறது. பக்கத்து வீட்டு தோழியின் ஆலோசனைப்படி விபச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார். அப்படி முதல் முறையாக போகும் போது 'சைக்கோ' ஆர்கே சுரேஷிடம் சிக்கிக் கொள்கிறார். அவர் ஏற்கெனவே சிலரைக் கொலை செய்தவர். அவரிடமிருந்து தப்பிக்க முயல்கிறார் ஆனந்தி. தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு சைக்கோவிடம் சிக்கிக் கொண்ட பெண், அந்த பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்கும் போலீஸ் என வழக்கமான 'டெம்ப்ளேட்' படங்களிலிருந்து துளியும் மாறாத ஒரு திரைக்கதை. அடுத்து இப்படித்தான் நகரும் என எளிதில் யூகிக்க முடியும் படியான காட்சிகள்.
காதலித்து கல்யாணம் செய்து குழந்தை பெற்று கணவனை அநியாயமாய் பறி கொடுத்த ஒரு பெண் கதாபாத்திரம் தான் கதாநாயகி. அப்படியான அனுதாபம்ன கதாபாத்திரத்திற்கு ஆனந்தி பொருத்தமான தேர்வு. அவர்தான் படத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றுகிறார். அவர் லேசாக சோகமாக இருந்தாலே போதும், மற்றதை பின்னணி இசை பார்த்துக் கொள்ளும். இப்படியே படம் முழுவதிலும் சோகமாய் நடித்துள்ளார்.
ஆர்கே சுரேஷ் தான் சைக்கோ வில்லன். இந்தப் படத்தில் அவரை அதிகம் பேச வைக்கவில்லை. நடப்பது, முறைப்பது என சிலவற்றுடன் நிறுத்திவிட்டார் இயக்குனர். அசிஸ்டன்ட் கமிஷனராக ரூசோ ஸ்ரீதரன். ஆனந்தியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடிப்புடன் இருக்கிறார். அவரது தலைமையிலான குழுதான் என்கவுண்டரில் ஆனந்தி கணவரை தவறுதலாகக் கொன்றுவிடுகிறது. அதற்கு பிராயச்சித்தமாகவே ஆனந்தியைக் காப்பாற்ற ஓடுகிறார்.
சுதர்ஷன் பின்னணி இசை அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய மிரட்டல் இசை ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது. ஏரியல் வியூ காட்சிகளை நிறைய சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இளையராஜா.
எத்தனையோ கிரைம் திரில்லர் கதைகள் கொட்டிக் கிடக்கிறது. மலையாள சினிமா பக்கம் போனாலே பல விதவிதமான கதைகளைப் பார்க்கலாம். அங்கிருந்து ஒரு கதையை உரிமை வாங்கி கூட ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கலாம். இப்படி பார்த்த கதைகள், பார்த்த காட்சிகளையே எத்தனை முறை திரும்பப் பார்ப்பது, மாத்தி யோசிங்க.
ஒயிட் ரோஸ் - Withered Rose..