இராவண கோட்டம்,Raavana Kottam
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கண்ணன் ரவி குரூப்
இயக்கம் - விக்ரம் சுகுமாரன்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - சாந்தனு, ஆனந்தி, பிரபு
வெளியான தேதி - 12 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று ஒரு புவியியல், ஒரு வாழ்வியல் உண்டு. அந்தந்த நிலப்பரப்புகளுக்கென சில தனிப்பட்ட பிரச்சினைகளும் உண்டு. அப்படியான ஒரு நிலப்பரப்பு கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம். தமிழகத்தின் வறண்ட பிரதேசமாக அறியப்படும் இராமநாதபுரம் பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலத் தெரு, கீழத் தெரு மக்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழும் கிராமம், அவர்களது ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் எம்எல்ஏ, வறட்சிக்கான காரணமாக இருக்கும் சீமக் கருவேல மரப் பிரச்சினை, கூடவே கொஞ்சம் காதல், கொஞ்சம் நட்பு என படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

ஏனாதி என்ற கிராமத்தில் மேலத் தெருவைச் சேர்ந்த பிரபு, சொல்வதைத்தான் ஊர் மக்கள் கேட்பார்கள். அவரும் கீழத் தெருவைச் சேர்ந்த இளவரசுவும் நெருங்கிய நண்பர்கள். எந்த சாதி வித்தியாசமும் இல்லாமல் ஊரே ஒற்றுமையாக இருக்கிறது. ஆளும் அரசியல் கட்சியினர், அமைச்சரைக் கூட ஊருக்குள் அரசியல் செய்யவிடாமல் தடுப்பவர் பிரபு. அதனால் அவரை ஒழித்துக் கட்ட நினைக்கிறார் எம்எல்ஏ அருள்தாஸ். மேலத் தெருவைச் சேர்ந்த சாந்தனு எப்போதுமே பிரபுவுடனேயே இருக்கிறார். இளவரசுவின் மகன் சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்கள். சாந்தனு, அவரது முறைப் பெண் ஆனந்தியைக் காதலித்து வருகிறார். ஊரில் சாதி மோதலை உருவாக்கி கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என சாந்தனு, சஞ்சய்யைப் பிரிக்க ஆனந்தியை பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நடந்துவிடுகிறது. அமைதியாக ஒற்றுமையாக இருந்த ஊர் இரண்டுபட்டு மோதிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து ஈடுபாட்டுடன் நடிக்க முயற்சித்திருக்கிறார் சாந்தனு. அவருடைய முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் படத்தில் அவரிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. செங்குட்டுவன் கதாபாத்திரத்தில் கிராமத்து இளைஞராக துடிப்பாக, ஆவேசமாக நடித்திருக்கிறார். தனது ஊரும் மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என கடைசி வரை போராடுகிறார்.

சாந்தனு நண்பனாக படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு சஞ்சய் சரவணனும் படம் முழுவதும் வருகிறார். கீழத் தெருவைச் சேர்ந்த அவர் மனதில் ஆனந்தி அவரைக் காதலிப்பதாகப் பொய்ச் சொல்லி அவரை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார் அவரது மாமா. அவர்களது சூழ்ச்சியில் விழுந்து நண்பனை விரோதியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார் சஞ்சய். இருந்தாலும் கடைசியில் அவர் மீது அனுதாபம் வரும்படி அவரது கதாபாத்திரத்தை முடித்திருக்கிறார்கள்.

ஆனந்தி வழக்கம் போல கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அவருடைய பங்கை சிறப்பாகச் செய்துவிடுகிறார். காதலிப்பதை மட்டுமே அவருக்கான வேலையாகப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஊரின் பெரிய மனிதராக பிரபு. சாதி ஒற்றுமையைப் பற்றிச் சொல்லும் படம் என்று சொன்னாலும் பிரபு சார்ந்த சாதியின் பெருமையை கிடைக்கும் காட்சிகளில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அவரது நண்பராக இளவரசு, சாந்தனுவின் அக்காவாக தீபா சங்கர், ஊரைப் பிரித்து அரசியல் செய்ய நினைக்கும் அருள்தாஸ், அவருக்கு உதவி செய்யும் முருகன் என மற்ற கதாபாத்திர நடிகர்களும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

அவ்வப்போது வரும் உணர்ச்சிபூர்மான காட்சிகளில் ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை, ராமநாதபுரத்தின் வறண்ட புவியியலைப் பதிவு செய்யும் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு உதவியாய் அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக இருந்து வரும் சில முக்கிய பிரச்சினைகளை ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அனைத்தையும் அடுத்தடுத்து இன்னும் அழுத்தமாகத் தொடர்புப்படுத்திக் கொடுத்திருக்கலாம். சாதி மோதல், சீமக்கருவேல அரசியல், கார்ப்பரேட் அரசியல், அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி என ஒரே படத்தில் இடம் பெறுவது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகவும் உள்ளது.

இராவண கோட்டம் - அரசியல்வாதிகளின் காட்டம்

 

இராவண கோட்டம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

இராவண கோட்டம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓