சாந்தனு பாக்யராஜ், சிருஷ்டி டாங்கே ஜோடி நடிக்க, பாலாவின் சிஷ்யர் அதிரூபன் இயக்கத்தில், ஷாமியாலயா கிரியேஷன் எனும் பேனரில், பொள்ளாச்சி வி.விசு, கோல்டு வி.குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் "முப்பரிமாணம்".
பொள்ளாச்சி ஏரியாவில், கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரியின் வாரிசு சாந்தனுவிற்கும், ஜாதி அரசியல் செய்யும் சகோதரர்களின் வாரிசு சிருஷ்டி டாங்கேவிற்கு இடையில் சிறு வயதில் ஏற்பட்ட நட்பு, வாலிப வயதில் காதலாக கசிந்துருகுகிறது. ஆனால் இரு குடும்பத்திற்குமிடையே தீரா பகை பல வருடங்களாக பற்றி எரிகிறது. ஆனாலும், சிருஷ்டிக்காக சாந்தனு தன் லட்சியமான அமெரிக்கா செல்லும் வாய்பு கிடைத்தும், அதை அலட்சியமாக தூக்கி எறிந்து விட்டு காதலே கண்ணாக இருக்கிறார்.
ஊரில் பள்ளி படிப்பை முடிக்கும் சிருஷ்டிக்கு சென்னையில் மெடிக்கல் படிக்கும் வாய்ப்பு அமைகிறது. தங்களது காதலுக்கு உள்ளுரை விட வெளியூர் உகந்த இடம் என கருதும் சாந்தனு, முதலில் வெளியூரில் படிக்க மறுக்கும் சிருஷ்டியை அதற்கு சம்மதிக்க வைக்கிறார். ஆனால், சென்னையில், சாந்தனு சிருஷ்டியின் காதல் திட்டமிட்டபடி வளர மறுக்கிறது. அதற்கு சிருஷ்டியே காரணமாகவும் இருக்கிறார். அது எப்படி? அதற்கு சாந்தனுவின் பதிலடி எப்புடி..? என்னும் திக், திக், திக், கதை. திரைக்கதை, களம், காட்சிப்படுத்தல் தான் "முப்பரிமாணம்" மொத்தமும்.
நாயகர் சாந்தனு பாக்யராஜ், தனது முந்தைய படங்களைக் காட்டிலும் கெட்-அப்பிலும், ஆக்டிங் பிக்-அப்பிலும் செமயாய் முன்னேற்றம் காட்டி புலிக்கு பிறந்தது பூனையாகாது என இப்படத்தில் மெய்பித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் கதை, திரைக்கதை தேர்விலும் அந்த முன்னேற்றத்தையும், அக்கறையையும் காட்ட வேண்டும் என்பது நம் அன்பு வேண்டுகோள்.
கதாநாயகி சிருஷ்டி டாங்கே முன் பாதியில் நடித்தும், பின் பாதியில் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கிறார் பாவம்.
இப்படக் கதைப்படி இளம் கதாநாயகராக வரும் ஸ்கந்தா அஷோக் கச்சிதமாக நடித்திருக்கும் புதுமுகம் என்பது ஆறுதல்.
வில்லனாக நாயகியின் சித்தப்பாவாக வரும் ரவிபிரகாஷ், நயன்டீஸ் லவ் வில்லன்களை ஞாபகபடுத்துகிறார், ஓ.கே. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோரின் ஒவர் ஆக்டிங் காமெடி, ஒவர்கடி .அதிலும் அப்புக்குட்டி ஓவர் மேக்-அப்பில் ஒவரோ ஒவராய் கடித்து, அவர் உதட்டு லிப்ஸ்டிக் கலரில் ரசிகனின் நெஞ்சில் இரத்தம் வர வைப்பது கொடுமை.
படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனின் கத்திரி படத்தின் முதல் பாதியை முழுதாக கத்தரித்து போட்டிருந்தால் "முப்பரிமாணம்" ஏதாவது ஒரு பரிமாணத்தில் நிச்சயம் ஜொலித்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் இராசாமதியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பாடல் காட்சியில் மட்டுமின்றி படக்காட்சியிலும் ஓவியப் பதிவென்பது பெரும் ஆறுதல்.
இசையாளர் ஜிவி.பிரகாஷ் குமாரின் இசையில், "கண்ணோடு கலந்துவிட்டேன்....", "உயிரிலே உறங்குதே காதலே...", "லெட்ஸ் கோ பார்ட்டி...", "உன்னை விட்டு போனால் உயிரை விட்டுப் போவேன்.." ஆகிய பாடல்களில் பெரிய குறையொன்றுமில்லை. அதிலும், "லெட்ஸ் கோ பார்ட்டி.." பாடல் நடனத்தில் ஆர்யா முதல் பாக்யராஜ் வரை ஏகப்பட்ட ஆண், பெண் நட்சத்திரங்கள் தோன்றி செல்வது கொடுத்த டிக்கெட் காசுக்கு ரசிகனுக்கு கூடுதல் பிரயோஜனம்.
அதிரூபனின் எழுத்து, இயக்கத்தில் கல்யாணம் நின்றதும் பட்டமரம் காட்டப்படுவது, ஒடிப்போன தங்கையை ஜாதி வெறி பிடித்த அண்ணன்கள் தீர்த்து கட்டுவது, நாயகியின் பெற்றோர் ஜவுளிக்கடையில் இருக்கும் போதே அவரை அதே கடையின் டிரஸ் சேன்ஜ் ரூமில் நாயகர் இழுத்து அணைப்பது, தன் அப்பா, அம்மாட்டக் கூட பேசாமல் வருஷத்தோட முதல் நாள் முதல் நொடி காதலியின் குரலை போனிலாவது கேட்டு விட காதலர் துடிப்பது... உள்ளிட்ட, முன்பாதி படம் முழுக்க ஏராளமாக நம் தமிழ் சினிமாக்களிலேயே பார்த்த கதையும், காட்சியமைப்புகளுமே பரவி, விரவிக் கிடப்பது பலவீனம்.
அதற்கு நேர்மாறாக இரண்டாம் பாதி, காதல் பழிவாங்கலாக கச்சிதமாக படமாக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான பெரும் பலம். அதே நேரம், நம் ஐயமெல்லாம், இப்பட முதல் பாதியை பார்த்த ரசிகன்., இரண்டாம் பாதி வரை காத்திருப்பானா.? என்பது தான்! அவ்வாறு பொறுமையுடன் காத்திருந்தால்., "முப்பரிமாணம் - முதலுக்கு மோசமில்லாது தியேட்டரில் ஒரளவிற்கு ஜொலிக்கும்! ஜெயிக்கும்... என நம்பலாம்!!"