கூரன்,Kooran
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : கனா புரொடக்சன்ஸ், விபி கம்பைன்ஸ்
இயக்கம் : நிதின் வேமுபதி
நடிகர்கள் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், லாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா.
இசை : சித்தார்த் விபின்
வெளியான தேதி : 28.02.2025
நேரம் : 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதை சுருக்கம்
கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய், தனது குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருக்க, அதன் கண்ணெதிரேயே குட்டி மீது ஒரு குடிகாரக் கும்பல் காரை ஏற்றிக் கொன்று விட்டுப் பறந்து செல்கிறது. இதைப் பார்த்த அந்தத் தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது . அதன் பிறகு தனக்கான நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது. அங்கே அது துரத்தியடிக்கப்படுகிறது. அதன் பிறகு வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டுக்குச் செல்கிறது. காவலாளி அங்கேயும் அதை விரட்டி அடிக்கவே, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது. அதைக் கவனித்த எஸ்.ஏ.சந்திரசேகர் அது ஏதோ தம்மிடம் சொல்ல விரும்புகிறது என்று அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார். அது வாயில்லா ஜீவன் என்றாலும், தனது கதையை அவர் உணரும் படிச் செய்கிறது. அதைத் தொடர்ந்து, குட்டியை இழந்த அந்த நாய்யின் கோபத்தையும், சோகத்தையும் புரிந்து கொண்டு அந்த நாய்க்காக வாதாட கோர்ட்டுக்கு வருகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக ஓய்.ஜி.மகேந்திரனும், எதிர் தரப்பு வக்கீலாக பாலாஜி சக்திவேலும் இருக்கின்றனர். வினோதமான இந்த வழக்கில் நடந்தது என்ன? ஒரு நாய் எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கும், வக்கீல் வீட்டுக்கும் சென்றது? அதன் குட்டி மீது கார் ஏற்றி கொன்றது யார்? இறுதியில் அந்த நாய்க்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

கூரன் என்றால் கூர்மையான புத்தி கொண்டவன் என்ற பொருள். இந்தப் படத்தின் கதாநாயகன் (நாய்) புத்தி கூர்மையுடன் இருப்பதால் படத்திற்கு கூரன் என டைட்டில் வைத்துள்ளனர். ஒரு நாயின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் எப்படிக் காட்டுவார்கள் என்கிற ஒரு கேள்வி நமக்குள்ளே எழுகிறது. ஆனால் படம் தொடங்கி அடுத்தடுத்த காட்சிகளில் அதற்குரிய பதிலை நமக்கு இயக்குனர் நிதின் வேமுபதி கொடுத்து விடுகிறார்.

ஒரு நாய்க்கு இவ்வளவு அறிவு இருக்குமா என நாம் யோசிக்கும் நேரம் அதற்கும் ஒரு முன் கதை இருப்பதை இன்டர்வல் பிளாக்கில் ஓபன் செய்து விடுகிறார். அதுதான் இரண்டாம் பாதியில் சுவாரசியமான பிளாஷ்பேக். இப்படி ஒரு நாய்யை கதையின் நாயகனாக வைத்து படத்தை எடுத்த இயக்குனருக்கு சபாஷ் போடலாம். வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற கேரக்டரில் நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. நடிகராக அவர் தோன்றிய படங்களில் இந்த பாத்திரம் அவருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

நாயின் மீது காரை ஏற்றிக் கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக வரும் கவிதா பாரதி வழக்கம் போல வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்துள்ளார். வழக்கறிஞராக நடித்துள்ள பாலாஜி சக்திவேல் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் அருமை. கண்பார்வையற்றவராக நடித்துள்ள ஜார்ஜ் மரியான், பொதுவாகவே நாய்களுக்கு பார்வை குருடு இருப்பதை எப்படி ஏற்க முடியும் என்ற கேள்விக்கு விடையாக நிற்கிறார். அதேபோல் நாயின் குரைப்பு ஒலியை, ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பவராக வரும் சத்யன் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளராக இருக்கும் இந்திரஜாவும் ஸ்கோர் செய்துள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவில், கொடைக்கானல், மலைப்பிரதேச காட்சிகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளன. ஒரு நாய் பற்றிய கதையாக இருந்தாலும் அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நன்றாகவே பின்னணி இசையைச் சேர்த்துள்ளார் சித்தார்த் விபின். அதுமட்டுமல்ல பாடல்களும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார்.

பிளஸ் - மைனஸ்
விலங்குகள் கொலை செய்யப்படுவதைத் தடுக்கவும், தண்டிக்கவும் மனிதருக்கான சட்டங்கள் பொருந்துமா என்கிற கேள்வி எழுப்பப்படும் போது, அதற்கான சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்குவது சிறப்பு. அதோடு நீதிமன்றங்கள் கண்ணால் கண்ட சாட்சியை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமா? அல்லது உணர்வுகளின் அடிப்படையில் வரும் சாட்சிகளையும் ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு உரிய பதில் சொல்லப்படுவது பிளஸ். இருப்பினும் முதல் பாதி காட்சிகள் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளது.

கூரன் - உணர்ச்சி குவியல்

 

கூரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கூரன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓