
முருங்கைக்காய் சிப்ஸ்
விமர்சனம்
தயாரிப்பு - லிப்ரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸ்ரீஜர்
இசை - தரண்குமார்
நடிப்பு - சாந்தனு, அதுல்யா ரவி
வெளியான தேதி - 10 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம் (18 பிளஸ் படம்)
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமா எத்தனையோ விதமான நல்ல கதைகளையும் பார்த்திருக்கிறது, மோசமான கதைகளையும் பார்த்திருக்கிறது. இந்தப் படத்தில் இருப்பது மோசமான கதை மட்டுமல்ல, ஆபாசமான கதையும் கூட.
இந்தக் கதையையெல்லாம் ஒரு படமாக எடுக்கலாம் என யோசித்த இயக்குனருக்கும், பணம் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், நடிக்க சம்மதித்தவர்களுக்கும் சினிமா என்பது என்னவென்று இன்னும் புரியாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
சாந்தனு, அதுல்யா ரவி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குடும்பத்திற்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்து வேண்டுமென்றால் முதல் இரவில் மனைவி மீது சுண்டு விரல் கூட படக்கூடாது என்கிறார் சாந்தனுவின் தாத்தா பாக்யராஜ். அப்படி நடந்தால் 300 கோடி சொத்தும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்கிறார். தங்கள் குடும்பத்தில் முதல் இரவில் சும்மா இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது, அதனால், அன்றே அதை முடித்திட வேண்டும் என அதுல்யாவிடம் சொல்கிறார் அவரது அத்தை ஊர்வசி. அனாதை ஆசிரமத்திற்கு சொத்து சென்றால் அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கத் துடிக்கிறார் அக் குடும்பத்தின் மானேஜர் மனோபாலா. அதனால், சாந்தனு, அதுல்யா முதல் இரவு நடக்க என்னென்னமோ செய்கிறார். முதல் இரவு நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஒரே இரவில், அதுவும் முதல் இரவில் நடக்கும், நடக்காத சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை. அதை எந்த அளவிற்கு இரட்டை அர்த்த வசனங்களுடன், ஆபாசமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்குச் சொல்லியிருக்கிறார் படத்தின் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர்.
படத்தின் நாயகன் சாந்தனு, தனது அப்பாவிற்கு ஒரு காலத்தில் 'முந்தானை முடிச்சு' படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சமாச்சாராம் பேர் வாங்கிக் கொடுத்தது போல இந்தப் படமும் தனக்கு பேர் வாங்கித் தரும் என நம்பியிருக்கிறார். இந்தக் கதையை அவரது அப்பா பாக்யராஜ் கேட்டு, மகனையும் நாயகனாக நடிக்க சம்மதிக்க வைத்து அவரும் நடித்திருக்கிறார் என்பது வியப்பை வரவைக்கிறது.
நெருக்கமாக நடிக்க வேண்டும், குழைவாகப் பேச வேண்டும் அது போதும் என அதுல்யாவிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அனைத்திற்கும் சம்மதம் என சொல்லிவிட்டு அப்படியே நடித்தும் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் குளியல் காட்சிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த நடிகை என்ற பெருமையைப் பெறுகிறார் அதுல்யா.
பாக்யராஜ், ஊர்வசி ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள். யோகிபாபு ஏதோ ஒரு நன்றிக்காக படத்தில் நடித்திருப்பார் போலிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், முனிஷ்காந்த் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். மனோபாலா, மதுமிதா, மயில்சாமி காமெடி என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறார்கள்.
தரண் குமார் இசையில் ஒரு சில பாடல்கள் படத்தை நிரப்புகின்றன. ஒரே ஒரு வீட்டில், ஒரே ஒரு அறையில் அதிகமான காட்சிகள் நடக்கிறது. அதை தனது ஒளிப்பதிவில் எப்படியோ சமாளிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி.
தான் தயாரிக்கும் படத்தை அந்தப் படத்திலேயே கிண்லடித்துக் காட்சி வைக்கும் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறோம்.
முருங்கைக்காய் சிப்ஸ் - சுவையில்லை…
முருங்கைக்காய் சிப்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
முருங்கைக்காய் சிப்ஸ்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்