யூகி
விமர்சனம்
தயாரிப்பு - யுஎஎன் பிலிம் அவுஸ், ஜுவிஸ் புரொடக்ஷன்ஸ், எஎஎஆர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸாக் ஹாரிஸ்
இசை - ரஞ்சின் ராஜ்
நடிப்பு - கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி மற்றும் பலர்
வெளியான தேதி - 18 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
'வாடகைத் தாய்' விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழகத்திலும், தமிழ் சினிமா உலகிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் சமந்தா நடித்து வெளிவந்த 'யசோதா' படமும் இதே வாடகைத் தாய் விவகாரத்தை மையப்படுத்திய ஒரு படமாக வெளிவந்தது.
இந்த 'யூகி' படமும் 'வாடகைத் தாய்' விவகாரத்தை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படம்தான். இப்படத்தின் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டதாக படத்தின் இயக்குனர் ஸாக் ஹாரிஸ் சொல்லியிருக்கிறார். சென்டிமென்ட், த்ரில்லர், சஸ்பென்ஸ் கலந்த படமாக இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
சாலையில் நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆன பிரதாப்போத்தன், தனியார் துப்புறியும் நிபுணரான நரேனிடம் உதவி கேட்கிறார். நரேனுக்கு உதவி செய்ய சஸ்பென்ட்டில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டரான கதிரை அனுப்பி வைக்கிறார் பிரதாப் போத்தன். நரேன் தன் உதவியாளர்களுடனும் கதிருடனும் சேர்ந்து ஆனந்தியைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள். அந்தத் தேடுதல் வேட்டை பல திருப்பங்களுடன் நகர்கிறது. கடைசியில் ஆனந்தியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், நரேன், நட்டி. இவர்களில் நரேன் தான் படத்தின் கதாநாயகனாக இருக்கிறார். அவரைச் சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் தான் கதிர் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். நட்டி கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பது ஆரம்பத்திலிருந்தே ஒரு குழப்பத்தில் அமைந்து கடைசியில் அவர் யார் என்ற உண்மை தெரிய வரும் போது ஒரு அதிர்ச்சி வர வேண்டும். மாறாக அப்படி எதுவும் வரவில்லை. திரைக்கதை துண்டு, துண்டாக நகர்வதால் படத்தின் மீது எந்த விதமான ஒட்டுதலும், ஈர்ப்பும் ஏற்படவில்லை. அருமையான ஒரு கதை, திரைக்கதையில் இப்படி கொடுத்தால் ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனர் யோசித்ததில் தவறில்லை. ஆனால், அதை எந்தக் குழப்பமும் இல்லாமல் சொல்வதில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார்.
கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள் பொருத்தமாக இருக்கிறது. இத்தனை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை உருவாக்குவது எளிதல்ல. நரேன், கதிர், நட்டி யாருமே படம் முழுவதும் இயல்பாக இல்லை. எதையோ பறிகொடுத்தவர்கள் போல பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். நரேன், கதிர், ஆனந்தி, பவித்ரா லட்சுமி ஆகியோர் மீது நமக்கு அதிக அனுதாபம் வர வேண்டும். அந்த அளவிற்கு அவர்களுக்கு படத்தில் சில துயரங்கள் நடக்கிறது. அதன் தாக்கம் நமக்கும் வந்திருந்தால் இந்தப் படத்தின் ரசனை வேறுவிதமாக இருந்திருக்கும்.
படத்தின் கதைப்படி முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஜான் விஜய், டாக்டரான வினோதினி வைத்தியநாதன் இவர்கள்தான் படத்தின் நெகட்டிவ் கதாபாத்திரங்கள். வாடகைத் தாய் விவகாரத்தில் இவர்கள்தான் கயலின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவும், கிரேடிங்கும் மிகச் சாதாரணமாக இருக்கிறது. மேக்கிங்கில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். படத்தில் பாடல்கள் இல்லை, ரஞ்சின் ராஜ் பின்னணி இசை பரவாயில்லை.
'யூகி' எனத் தலைப்பு வைத்துவிட்டு காட்சிக்குக் காட்சி ரசிகர்களை யூகித்துக் கொள்ளச் சொல்வது சரியா?. ஒரு திருப்புமுனை, இரண்டு திருப்புமுனை என்றால் பரவாயில்லை காட்சிக்குக் காட்சி திருப்புமுனை என்றால், முன் காட்சிகளில் என்ன நடந்தது என்று யோசித்து கதையைத் தொடர்வதற்குள், யாருக்குப் பொறுமை இருக்கிறது.
யூகி - யோசி…நல்லா யோசி…
யூகி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
யூகி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்