இன்று நலிந்து போன கட் அவுட் மற்றும் பேனர் வரையும் தொழிலையும் ரஜினி - கமல் ரசிகர்களையும் மையப்படுத்தி, ஈராஸ் இண்டர்நேஷ்னல் புரடக்ஷன் தயாரிப்பில், நட்டி -நடராஜ், ராஜாஜி, ராதாரவி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், பாலா சிங், ப்ளோரண்ட் சி.பெர்ரெரா, தாக்ஷாயினி, முருகானந்தம், வெற்றிவேல்ராஜா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, ராமு செல்லப்பா எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமே "எங்கிட்ட மோதாதே".
இரு நாயகர்களில் ஒருவரான நட்டி - நடராஜ், ரஜினி கட் அவுட் வரையும் ரஜினி ரசிகர், இன்னொரு நாயகரான ராஜாஜி, கமல் பேனர் வரையும் கமல் ரசிகர். ஆனாலும் இருவரும் நண்பர்கள். திருநெல்வேலி சீமையில் தொழில் செய்யும் இருவருக்கும், அத்த ஏரியா அரசியல் புள்ளியும் தியேட்டர் அதிபருமான ராதாரவியாலும் அவரது வலது கை விஜய் முருகனாலும் பிரச்சினை வருகிறது. அதில் ரெண்டு பட்டு எதிர் எதிர் துருவங்களில் நிற்கும் இருவரும், மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.? ராதாரவி - விஜய் முருகன் கோஷ்டிக்கு தக்க பாடம் புகட்டினார்களா....? என்னும் கதையுடன் நட்டி - சஞ்சிதா ஷெட்டி, ராஜாஜி - பார்வதி நாயர் இரு ஜோடிகளின் காதல் கதையையும், ரஜினி - கமல் மன்றங்களாலும் ரசிகர்களாலும் ஒரு காலத்தில் திருநெல்வேலி பகுதியில் விளைந்த நன்மை, தீமைகளையும் கலந்து கட்டி "எங்கிட்ட மோதாதே" படமாக்கியிருக்கின்றனர்.
ரஜினி கட் அவுட் வரையும் ரஜினி ரசிகராக நட்டி - நடராஜ் நெல்லை சீமை மண்ணின் மைந்தராக செம மாஸ் காட்டியிருக்கிறார். நண்பர் ராஜாஜிக்கு ஒன்றென்றால் பாயும் புலியாக பாய்வதிலாகட்டும், ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டியுடன், அண்ணனுக்குத் தெரியாமல் காதல் வயப்படுவதிலாகட்டும், டூயட் பாடுவதிலாகட்டும், ராஜாஜிக்கு தங்கள் காதல் தெரிந்த பின், "நானும் மரகதமும் கல்யாணம். பண்ணிக்கலாம்னு இருக்கோம்... என்று அவரிடம் கூறிவிட்டு, முடிஞ்சா பண்ணிக்கோ... எனும் ராஜாஜியிடம் முடிஞ்சதால தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்..." என்று அர்த்தபுஷ்டியாக சிரிப்பதிலாகட்டும், அரசியல் புள்ளி ராதாரவி, அவரது ஆள் விஜய் முருகனிடமும் "படம் வரையும் போது பின்னாடி தொட்டா சாக அடிச்சு புடுவேன்.." என்றபடி, முட்டி மோதுவதிலாகட்டும், ஜெயிலில் திருச்செந்தூர் முருகனை வரைந்து வைத்து கைதிகள் வணங்க வழியேற்படுத்தி தருவதிலாகட்டும்..... சகலத்திலும் நயன்டீஸ் ரஜினி, ரசிகராக சக்கைப் போடு போட்டிருக்கிறார். சூப்பர் நட்டி!
கமல் கட் அவுட் பேனர் வரையும் கமல் ரசிகராக மற்றொரு நாயகராக வரும் ராஜாஜியும் தானும் நட்டிக்கு சளைத்தவர் அல்ல... என காட்சிக்கு காட்சி படத்தில் தான் இருப்பதையும் மெய்பிக்கும் படி சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர் நட்டி தன் தங்கை சஞ்சிதாவை காதலிக்கும் செய்தி தெரிந்திருந்தும், அவர் மூலம் தங்கை உண்டாகி இருப்பது தெரிந்ததும் காட்டும் ரியாக்ஷன்ஸ் பிரமாதம் ராஜாஜி .
இரு நாயகியரில் நட்டியின் ஜோடியாக வரும் சஞ்சிதா ஷெட்டி, செம சுட்டி. அதிலும், "ஆம்பளைன்னா என்னான்னு தெரியுமா... எப்ப நீ ஒரு பொண்ண தொடுறியோ அப்பதான் ஆம்பளை..." என்றபடி, நட்டியை வீழ்த்தும் இடங்களிலும் சரி, அண்ணனுக்குத் தெரியாது சாக்கு போக்கு சொல்லி, நட்டியை சந்திக்க கிளம்பும் இடங்களிலும் சரி செம யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
ராஜாஜியின் ஜோடியாக வரும் பார்வதி நாயர், மாவும் கையுமாக அடிக்கடித் தென்பட்டாலும் ரசிகனின் நெஞ்சில் வெல்ல பாகாக ஒட்டி இனிக்கிறார்.
ராதாரவி, விஜய் முருகன், ப்ளோரண்ட் சி.பெர்ரெரா, பாலா சிங், தாக்ஷாயினி, முருகானந்தம், வெற்றிவேல்ராஜா உள்ளிட்ட அனைவரும் கச்சிதம். அதிலும், ராதாரவி, நெல்லை அரசியல் புள்ளியாக வினியோகஸ்தர் சங்க பொறுப்பாளராக திரையரங்க அதிபர் மந்திர மூர்த்தியாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். எம்ஜிஆர் சாகவில்லை... செத்தும் வாழப்போகும் தலைவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்... என அவர் வாயால் பேசும் "பன்ச்"க்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அதே மாதிரி அவரது வலது கை சிதம்பரமாக வரும் விஜய் முருகன், நட்டியின் நண்பர் தேங்கா பொறுக்கி - முருகானந்தம் உள்ளிட்டவர்களும் ஹாசம்.
நடராஜன் சங்கரனின் இசையில் "உனப் பார்த்தேன் ராசாத்தி...", "பைய பைய நெருங்கி வாரேன்புள்ள..." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல்.
எம் - சி கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில், காட்சிகள் ஓவியப்பதிவு, அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பில் பெரிய குறை ஏதுமில்லை. படமும் இரண்டு மணி நேரம் எட்டு நிமிடத்தில் முடிந்து விடுவது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது ஆறுதல். கே.ஆறுச்சாமியின் கலை இயக்கத்தில் கட்-அவுட்டுகளும் திரையரங்க முன்பகுதி செட் அப்புகளும் பத்து பதினைந்து வருடங்கள் பின்னோக்கி நம்மை அழைத்து செல்வது இப்படத்திற்கும், கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறது.
ராமு செல்லப்பாவின் எழுத்து, இயக்கத்தில் கதைக்களம், பத்து, பதினைந்து வருடத்திற்கு முந்தைய பல்வேறு ஜாதிகளும், ஜாதி கலவரங்களும் நிரம்பிய "திருநெல்வேலி சீமை" என்றாலும், படத்தின் பாத்திரங்கள், இன்ன ஜாதி என பிரதானப்படுத்தி காட்டாது படம் எடுத்ததற்காகவே இயக்குனரைப் பெரிதும் பாராட்டலாம்.
மேலும், "நம்ம, ரஜினி ரசிகர்களை காட்டிலும் பெண்களுக்கு ஏன் கமல் ரசிகர்கள் கிட்டேயே அதிகம் காதல் ஏற்படுது?" எனும் கேள்வியை கேட்டு, "அவனுங்க, அவங்க தலைவர் மாதிரி "லிப் டூ லிப்" கிஸ் அடிச்சே பொண்ணுங்களை கவுத் துப்புடுவானுங்க நாம, ஸ்டைலா நம்ம தலைவர் மாதிரி சிகரெட்டும், பீடியும் புடுச்சி உதட்டை கறுப்படிச்சுகிட்டு திரிஞ்சா எவதான் சிக்குவா...?" என நக்கல் "பன்ச்" பதில் தருவதிலாகட்டும்., "பொண்ணும் கரண்ட்டும் ஒன்னு தான் தொட்டா ஷாக் அடிக்காம விடாது..." எனும் அனுபவ "பன்ச்" சிலாகட்டும், அரசியல்வாதி சினிமா ஹீரோ ஓப்பீடு செய்வதிலாகட்டும், "ரஜினி - கமல் விட அவன் ரசிகனுக்கு பவர் ஜாஸ்தி..." எனும் விவாதத்திலாகட்டும் எல்லாவற்றிலும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது" எங்கிட்ட மோதாதே".
ஆக மொத்தத்தில், "எங்கிட்ட மோதாதே - ஒடும் தியேட்டரில் ஜாஸ்தி ரசிகர்கள் அலை மோதலாம்!"