தினமலர் விமர்சனம் » அடடா என்ன அழகு
தினமலர் விமர்சனம்
வழக்கமான கல்லூரி மாணவர் - மாணவி இடையேயான காதல் கதைதான்! ஆனால் இதில் நாயகியின் அப்பாவை இந்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி கொடுத்து, படுத்தி எடுத்திருக்கிறார்கள்.
கதைப்படி நாயகன் ஜெய்ஆகாஷூம், புதுமுகம் நிக்கோலும் ஒரே மருத்துவக் கல்லூரி ஸ்டூடண்ட்ஸ். ஜெய் ஆகாஷின் பெற்றோர் சரத்பாபு - ரேகா இருவரும் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள். பாதுகாப்பு மந்திரி ஆஷிஷ் வித்யார்த்தியிடம் பேரம் பேசுவதற்காக அவரது மகள் நிக்கோலை கடத்துகிறது ஒரு கும்பல். வழக்கம்போல அந்த கும்பலிடம் இருந்து ஹீரோயினை ஹீரோ காப்பாற்றுவார் என்று நினைத்தால் அது தவறு! கதை அதுவல்ல...! அந்த கடத்தலின்போது எதிர்பாராமல் அடிபட்டு மனநிலை பாதிக்கப்படும் நிக்கோல் ஆகாஷின் பெற்றோர் நடத்தும் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். அங்கு ஆகாஷின் பெற்றோர் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டுக்கும் மேலாக ஆகாஷின் ஒரே பாடலில் நிக்கோல் குணமாகிறார். இதன் மூலம் இருவருக்குமிடையேயான காதலை ஆகாஷின் பெற்றோர் உணர்ந்து கொள்ள..., பாதுகாப்பு மந்திரி ஆஷிஷ் வீட்டிற்கு பெண் கேட்டு போகிறார்கள். அங்கு நான் மலை... நீ மடு...! என்றெல்லாம் அதரப் பழசான டயலாக்குகளை எல்லாம் பேசி, தன் சுய ரூபத்ைத காட்டி அவர்களை தரத்தி அடிக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. இதன் பின் என்ன? வீட்டை விட்டு வெளியில் வரும் ஜெய் ஆகாஷ் - நிக்கோலை ஒருபக்கம் பாதுகாப்பு மந்திரியின் ஆட்கள் துரத்த... இன்னொரு பக்கம் கடத்தல் கும்பல் விரட்ட.. விறுவிறுப்பாக நகர்கிறது கதை. காதல் ஜோடி தப்பியதா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
நாயகன் ஜெய் ஆகாஷ் காதல் ஹீரோவாக, லட்சணமாக, அழகாக டூயட் பாடுகிறார். ஆடுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் சண்டையும் போடுகிறார். நாயகி நிக்கோல் மெழுகு பொம்மை போல மொழு மொழுவென்று இருக்கிறார். கவர்ச்சி கட்சிகளில் உடம்பையும், மீதி காட்சிகளில் நடிப்பையும் காட்ட முற்பட்டு, முன்னதில் வெற்றியும், பின்னதில் தோல்வியும் கட்டுள்ளார். இன்னும் முயற்சி செய்யணும் மேடம்!
கருணாஸ் - ஆர்த்தி ஜோடி சிரிப்பிற்கு பதில் கடுப்பை வரவழைக்கிறது. ஒரே ஒரு பாடலில் மறைந்த ரகுவரன் (முதலில் இவர்தான் ஹீரோ ஆகாஷின் டாக்டர் அப்பா போலும்!) ஆறுதலாக வந்து போகிறார். சரத்பாபு - ரேகா, ஆஷிஷ் வித்யார்த்தி - ஐஸ்வர்யா ஜோடிகள் வழக்கமான அப்பா - அம்மா பணியை சரியாக செய்துள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு மந்திரியாக இருந்து கொண்டு அடிதடி, ரகளை, அடாவடி எல்லாம் பண்ணும் ஆஷிஷ் ஓவரோ ஓவர்!
டி.எம்.ஜெயமுருகன் ஏழெட்டு க்ளைமாக்ஸ்களையும், தேவையும் - அர்த்தமும் இல்லாத ஹீரோ - ஹீரோயின் சண்டையையும் தவிர்த்திருக்கலாம். ஜீவன் தாமஸின் இசையில் அழகான பாடல்கள் ஆறுதல். அதுவும் அதிக எண்ணிக்கையில் வருவது சற்றே போர். கிச்சாஸ் ஒளிப்பதிவில் ஊட்டி புதிய அழகில் ஜொலிப்பது சூப்பர்ப்! எக்கச்சக்கமாக திணிக்கப்பட்டிருப்பதாலோ என்னவோ எதோ குறை!
அடடா என்ன அழகு - பாடல்கள் மட்டும் அழகு