அஸ்திரம்
விமர்சனம்
தயாரிப்பு : பெஸ்ட் மூவிஸ்
இயக்கம் : அரவிந்த் ராஜகோபால்
நடிகர்கள் : ஷாம், நிரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்ட்டின்
வெளியான தேதி : 21.03.2025
நேரம் : 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் : 3/5
கதைக்களம்
ஊட்டி பூங்காவில் வினோதமான முறையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதை விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாம், அதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்ந்து அதில் தீவிரம் காட்டுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட இரண்டு இடங்களில் அதே பேட்டனில் தற்கொலைகள் நடந்ததை தெரிந்து கொண்டு அது குறித்து மேலும் விசாரிப்பதற்காக உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்கிறார் ஷாம். உயர் அதிகாரி அவருக்கு அனுமதி வழங்கி, ஒரு காவலரையும் உதவிக்கு அனுப்புகிறார். தொடர் தற்கொலைகள் குறித்து விசாரணையை தொடங்கும் ஷாமுக்கு எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், கல்லூரி நண்பர் ஒருவர் அவரை சந்திக்கிறார்.
ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் தற்கொலை சம்பவங்கள் பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை சொல்லி விட்டு, திடீரென்று அவரும், அவரை தேடி அங்கே வரும் மற்றொருவரும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்படுவதோடு, அந்த வழக்கில் இருந்து ஷாம் விடுவிக்கப்பட்டு, உயர் அதிகாரியால் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார். பணியில் இல்லை என்றாலும், தன்னை சுற்றி நடக்கும் தொடர் தற்கொலை சம்பவங்களுக்கும், அது பற்றிய சில தடயங்கள் மற்றும் தகவல்கள் தன்னை தேடி வருவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கும் ஷாம், அதன் முழுமையான பின்னணியை தெரிந்து கொள்ள முயலும் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது, அது என்ன? தற்கொலைகள் எதனால் நடக்கிறது? இந்த வழக்கை ஷாம் கண்டுபிடித்தாரா? என்பதை படத்தின் மீதி கதை.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் ஒரு வரலாற்றுப் புனைவு கதை அவசியம் . அதற்கேற்றார் போல் ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால். ஹீரோ உட்பட அனைத்து கேரக்டர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். பரபரப்பாக செல்லும் திரைக்கதையில் இன்டர்வல் பிளாக்கில் வில்லன் துப்பு கொடுத்தும் இறுதிவரை படத்தை கிரிபிங்க் ஆக கொண்டு சென்ற இயக்குனருக்கு சபாஷ் சொல்லலாம்.
ஹீரோயிசம் இல்லாமல் காவல்துறை அதிகாரியாகவே மாறி நடித்துள்ளார் ஷாம். அவருடைய உடல் மொழி மற்றும் விசாரிக்கும் விதம் ஆகியவை அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நாயகி நிரா கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் ஷாமுடன், போலீசாக வருபவர், புதுமுகம் என்றே தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மனநல மருத்துவராக வரும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர் மற்றும் ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றார் போல் உள்ளது.
பிளஸ் & மைனஸ்
பல கதாபாத்திரங்கள், அவர்கள் தொடர்புடைய பல திருப்பங்கள் திரைக்கதையில் இருந்தாலும், அனைத்தையும் பார்வையாளர்கள் எளிதியில் புரிந்துக் கொள்ளும்படியும், அதேநேரம் யூகிக்க முடியாதபடியும் படத்தை கொடுத்திருப்பது பிளஸ். அதே நேரம் ஜப்பான் மன்னனின் கதையை மட்டும் திரும்ப திரும்ப சொல்வது மைனஸ்.
அஸ்திரம் - ரசிகர்களை தாக்கும்
அஸ்திரம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
அஸ்திரம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ஷாம்
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் ஷாம். 1977ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, மதுரையில் பிறந்த ஷாம், பின்னர் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு தனது படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றியபடி சினிமாவிலும் முயற்சித்து வந்தார். ஜீவா இயக்கிய 12 பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஷாம், தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா போன்ற படங்களில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஷாம், 6 என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் இப்படத்திற்கான தனது உடலை கடுமையாக வருத்தி நடித்தார், குறிப்பாக தனது கண்களை வீங்க வைக்க பல நாட்கள் தூங்காமல் இருந்துள்ளார் ஷாம். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.