நடிப்பு - ஷாம், ஸ்ரீதேவிகுமார், ஆத்மிகா
தயாரிப்பு - 2எம் சினிமாஸ்
இயக்கம் - சாரதி
இசை - ஸ்யாம் மோகன்
வெளியான தேதி - 18 அக்டோபர் 2019
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தமிழ்ப் படங்கள் என்றாலே சுற்றிச் சுற்றி தமிழ்நாட்டில் தான் அதிகம் எடுக்கப்படும். சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வார்கள். ஆனால், இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
இயக்குனர் சாரதி, ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு அதை அமெரிக்கா பின்னணியில் கொடுத்திருக்கிறார். கதையும், கதைக்களமும் ஓகே, ஆனால், திரைக்கதையில் இன்னும் அதிகமான பரபரப்பும், விறுவிறுப்பும் இருந்திருந்தால் முழுமையாக ரசித்திருக்க முடியும்.
2013ம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளிவந்த 'தி கால்' என்ற படத்தை மையமாக வைத்து சில பல காட்சிகளை மாற்றி இந்த 'காவியன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சாரதி.
நமக்குத் தெரிந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகளின் விசாரணைதான் இருக்கும். இந்தப் படத்தில் 911 என்ற அமெரிக்கா போலீஸ் கட்டுப்பாட்டு அறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியெல்லாம் நம் நாட்டில் எப்போது வரும் என்று தெரியவில்லை.
அமெரிக்கா போலீசிடம் பயிற்சி பெறுவதற்காக தமிழ்நாடு போலீஸ் அதிகாரி ஷாம், சைபர் கிரைம் அதிகாரி செல்கிறார்கள். சிறிய சூட்கேஸ் ஒன்றில், ஊசி ஒன்றை வைத்துக் கொண்டு பெண்களிடம் தெரியாமல் கீறி ரத்தம் வர வைத்து அவர்களின் ரத்த மாதிரியை எடுக்கிறான் ஒருவன். பொருத்தமான ரத்தம் உள்ள பெண்களைக் கடத்தி கொலையும் செய்கிறான். அவன் அப்படி ஆத்மியாவைக் கடத்தும் போது, அவரது கையில் இருக்கும் மொபைல் போனில் 911 கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். அதை வைத்து ஆத்மியாவையும், அவரைக் கடத்திய குற்றவாளியையும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அமெரிக்கா போலீசுக்கு உதவியாக இருந்து அவர்களுக்கு முன்னதாகவே ஷாம் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
போலீஸ் அதிகாரியாக ஷாம். எப்போதும் இறுக்கமான முகத்துடனேயே ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஏனோ, தானோ என்றே நடித்தது போலத் தெரிகிறது. அவருக்கு அவரே பின்னணிக் குரலும் கொடுக்கவில்லை. இப்படிப் போன்ற புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒத்துக் கொண்ட பிறகு முழுமையான ஈடுபாட்டுடன் நடிப்பதுதான் சிறப்பு. ஏனோ, அதை அவர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
நாயகியாக ஸ்ரீதேவி குமார். 911 கட்டுப்பாட்டு அறையின் முக்கிய அதிகாரி. உட்கார்ந்த இடத்திலிருந்தே பிரச்சினையில் சிக்குபவர்களுக்கு உதவியாக இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். இவருக்கும், ஷாமுக்கும் பிளாஷ்பேக்கில் காதல் என்று சொல்வதும் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
கடத்தப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் ஆத்மிகா. இலங்கைத் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை அவரை வைத்து சில வசனங்கள் பேச வைத்திருக்கிறார்கள். அதன் பின் காரின் டிக்கிக்குள்ளேயே சிக்கிக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரம் அவருக்கு.
ஷாமுடன் அமெரிக்காவிற்குச் செல்லும் சைபர் கிரைம் அதிகாரியாக ஸ்ரீநாத். நகைச்சுவை என்ற பெயரில் 'மொக்கை' ஜோக்குகளை அடித்து நம் பொறுமையை சோதிக்கிறார்.
ஸ்யாம் மோகன் பின்னணி இசை, ராஜேஷ் குமாரின் அமெரிக்கா சாலைகளின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளன.
ஒரிஜனல் படத்தில் இருக்கும் பரபரப்பை அப்படியே தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
காவியன் - கடமை