Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை,Sathuranga Vettai
 • சதுரங்க வேட்டை
 • நட்ராஜன் சுப்ரமணியம்
 • இஷாரா
 • இயக்குனர்: வினோத்
31 ஜூலை, 2014 - 10:47 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சதுரங்க வேட்டை

தினமலர் விமர்சனம்தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை விளம்பரப்படுத்துவது மட்டுமே படத்தை ஒட வைத்து விடும் என்ற அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் சுமாரான படத்தைக் கூட நாலு விஐபிக்களை விட்டு சூப்பர் படம்..அருமையான படம்...எனச் சொல்ல வைத்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முயற்சிக்கிறார்கள். அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி வந்தாலும் படம் பார்க்கும் சராசரி ரசிகன், அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்கிறான். அவன் சொல்வதைக் கேட்டுத்தான் அவனுடைய நண்பர்களும் படம் பார்க்கச் செல்கிறார்கள்.


ஆக, ஒரு படத்தின் வெற்றியை அந்தப் படத்தைப் பற்றிப் பேசும் படம் சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது அந்த படத்தைச் சாராத மற்றவர்களோ நிர்ணயிப்பது இல்லை. திரையரங்கில் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனே தீர்மானிக்கிறான். இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தின் வெற்றிக்காக பல வேட்டைகளை நடத்த வேண்டியிருக்கிறது. பல ஆடு, புலி, ஆட்டங்களை ஆட வேண்டியிருக்கிறது. நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள், பொருத்தமான நட்சத்திரங்கள் இவற்றுடன் வரும் படங்கள் வெற்றி என்ற எல்லைக் கோட்டைத் தொட்டு விடுகின்றன.


இந்த சதுரங்க வேட்டையில் அறிமுக இயக்குனர் வினோத், புதிய பாதையில் பயணிக்க முயற்சித்தாலும், அவர் பயணம் செய்யும் வண்டி கொஞ்சம் பழைய வண்டியாகத்தான் உள்ளது. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குளால் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குனர் வினோத்.


தினசரி நாம் பத்திரிகைகளில் பார்க்கும் சில செய்திகளை கதையாக உருவாக்கி, அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார். உழைத்து சம்பாதிப்பதை விட கொஞ்சம் உட்கார்ந்த இடத்திலேயே கோடிகளையும், லட்சங்களையும் அள்ள வேண்டும் எனத் துடிக்கும் சிலர் புத்திசாலித்தனமான சில மோசடி வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு தெருக்கோடிக்கு வருவதை ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறோம், படித்து வருகிறோம். அப்படி சீக்கிரமே பணக்காரர் ஆகத் துடிக்கும் சாதாரண பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒருவனின் கதைதான் இந்த சதுரங்க வேட்டை.


சிறு வயதில் அனாதையாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படும் நட்ராஜ் வளர்ந்து பெரியவனாவதற்குள் குறுக்கு வழியில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்பதில் கை தேர்ந்த ஒரு திருட்டுப் பயல். அவருக்கென ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு பல விதங்களில், பல வழிகளில், பல தோற்றங்களில் அடுத்தவரை அழகாக ஏமாற்றுவதில் பலே கில்லாடி. “செட்டியாரும் டபுள் டெக்கரும், எம்எல்எம், பணம்அச்சடித்த ஆயுதம், இரிடியம் என்ற ரைஸ் புல்லிங்” இப்படி பல பெயரைக் கொண்ட ஏமாற்று வேலைகளை கனகச்சிதமாக செய்யும் அசகாய சூரன். ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டாலும் பண பலத்தால் வெளியே வருகிறார். அதன் பின் முன்னர் செய்த ஒரு தொழிலில் பாதிக்கப்பட்ட ஒருவனால் ஆள் வைத்து கடத்தப்படுகிறார். அதன் பின் தன்னைக் கடத்தியவனையே கூட பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, ஒரு 100 கோடி ரூபாய் ஏமாற்றுத் திட்டத்தில் இறங்குகிறார். இதனிடையே இஷாராவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு நல்ல வழியில் போக முடிவெடுத்தாலும், 100 கோடி ரூபாய் திட்டத்தின் பங்குதாரர் நட்ராஜை மிரட்டி அழைத்துச் செல்கிறார். இதன் பின் 100 கோடி ரூபாய் திட்டம் நடந்ததா, நட்ராஜ் திருந்தி வருகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கடந்த ஆண்டு பார்த்து ரசித்த வெற்றிகரமான ஓடிய சூது கவ்வும் மாதிரியான ஒரு படம். பத்திரிகைகளில் வந்ததை, நம்ம ஊரில் மக்கள் ஏமாந்ததை அப்படியே அச்சு அசலாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் வினோத். ஒவ்வொரு ஏமாற்றுத் தொழிலும் எப்படி உருவாகிறது, அதை எப்படி செயல்படுத்துகிறார்கள், அதில் எப்படிப்பட்டவர்களை சிக்க வைக்கிறார்கள் என்பது உண்மையிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். உண்மைக்கு மிக அருகில் படத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார். ஏமாற்றும் விஷயங்களைக் கொண்ட காட்சிகள் அனைத்துமே சினிமாத்தனம் இல்லாமல், அப்படியே நம் கண்முன் நடப்பது போன்றே தெரிந்தாலும், அவ்வளவு பெரிய அயோக்கியனை, ஒரு அப்பாவிப் பெண் காதலிப்பதும், அப்புறம் அவன் அடிபட்டுக் கிடக்கும் போது, அந்தப் பெண்ணே காப்பாற்றுவதும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் என வழக்கமான சினிமாத்தனமான காட்சிகளை வைத்து, இடைவேளைக்குப் பின் சுவாரசியத்தைக் குறைத்து விட்டார். அது, கிளைமாக்ஸ் வரையிலும் இருப்பதுதான் இது முற்றிலும் வித்தியாசமான படம் என்று சொல்ல முடியாமல் தடுக்க வைத்து விடுகிறது.


இந்தித் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்ராஜ், “நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக” ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாளை படத்திற்குப் பிறகு இந்தப் படம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட படமாக அமைய வாய்ப்புண்டு. பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது.


நட்ராஜை, அப்படியே நல்லவர் என நம்பும் அப்பாவிப் பெண்ணாக இஷாரா. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என யோசிக்க வைக்கிறார். சொந்தக் குரலும் அவருடைய அப்பாவித் தனத்திற்கு பொருந்திப் போகிறது. மொத்தமாக அரை மணி நேரம் வந்தாலும், அன்பு, பாசம், நேசம் என பேசி உருக வைக்கிறார். சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே. நிஜ வாழ்க்கையில் யாரை இப்படி திருந்த வைக்க முடியும்.


இவர்கள் இருவரைத் தவிர படத்தில் தெரிந்த முகம் என்று பார்த்தால் பொன்வண்ணன் மட்டும்தான். அவரும் ஓரிரு காட்சிகள் மட்டுமே வருகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் யாருமே சினிமாத்தனமான முகம் இல்லாதவர்கள், இப்போதுதான் புதிதாகப் பார்ப்பவர்களைப் போல் உள்ளார்கள். படத்தில் இடம் பெறும் பல வசனங்கள் கை தட்டல் பெறுகின்றன, யதார்த்தத்தைச் சொல்வதால்...


ஷான் ரோல்டன், காட்சிகளுக்கு பொருத்தமில்லாத பின்னணி இசையைத் தந்திருக்கிறார். இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்து பயணிக்காத உணர்வே ஏற்படுகிறது. குறிப்பாக எம்எல்எம்-ல் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறும் காட்சியில்...அதற்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒரு பின்னணி இசை. இப்படி பல காட்சிகளைச் சொல்லலாம்.


சதுரங்க வேட்டை - ராஜாவின் வேட்டை மட்டும்...!


----------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்

பரபரவென்று புயலாக ஒரு படம்!


எம்.எல்.ஏ., ஈமூ கோழி, இரிடிய கோபுரக் கலசம், மண்ணுளிப்பாம்பு என்று சமீபகால பித்தலாட்டங்களைச் செய்யும் ஒருவனை மையமாய்க் கொண்டு கதை பண்ணி சக்கைப் போடு போட்டிருக்கிறார்கள். பணத்துக்காக எதுவும் செய்யும் ஹீரோ, வசமாய்ச் சிக்கிக் கொள்ள, என்ன செய்கிறான் என்பதுதான் படம்.


இந்தித் திரைப்பட உலகில் முக்கியமான கேமராமேனான நம் ஊர் நட்ராஜ், நாயகனாக நச்சென்று பொருந்திப் போகிறார். அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அதகளம் செய்கிறார். கோபுரக் கலசத்தின் மகிமையைச் சொல்லி ஏமாற்றி எதிராளிக்குப் புல்லரிக்க வைக்கும் காட்சியில் விஸில் பறக்கிறது.


இஷாரா, பேஷாரா! அந்த டப்பிங் குரலில் பக்கத்து வீட்டுப் பெண் உணர்வு!


சமீபத்தில் வசனத்துக்காக அதிக கைதட்டல் வாங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். "அண்ணே, வெள்ளை வேட்டி, சட்டை போட்டாலே மக்களை ஏமாத்தலாம்னு தோணுது இல்ல? "குற்ற உணர்வு இல்லாத எந்த தப்பையும் துணிஞ்சு செய்யலாம் இயக்குநர் வினோத்துக்கு ஒரு ஷொட்டு.


திரைக்கதை செம இண்ட்ரஸ்டிங். நகைக்கடையை மையமாக வைத்து கல்லா காட்சி ஒன்று போதும்!


அவ்வளவு புத்திசாலியான நட்ராஜை தனக்குத்தானே குழி தோண்ட எந்த வில்லனாவது சொல்வானா?


ஒரு பாடல் நைஸ். ஆர்.ஆர். ரொம்ப பொருத்தம்.


ச.வே - வேகம், வேகம்!


குமுதம் ரேட்டிங் - நன்றுவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சதுரங்க வேட்டை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in