விசித்திரன்,Visithiran
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பி ஸ்டுடியோஸ்,
இயக்கம் - பத்மகுமார்
நடிப்பு - ஆர்கே சுரேஷ், பூர்ணா
வெளியான தேதி - 6 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஜோசப்' படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'விசித்திரன்'. மலையாளத்தில் படத்தை இயக்கிய பத்மகுமார் தமிழ் ரீமேக்கையும் இயக்கியுள்ளார்.

பொதுவாக மலையாளப் படங்களின் திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகரும். அது மலையாள ரசிகர்களுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால், தமிழ் ரசிகர்கள் இன்னும் அம்மாதிரியான திரைப்படங்களுக்கு அதிகம் பழகவில்லை. இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமக்கு குறையாகத் தெரிவது மெதுவாக நகரும் அந்தத் திரைக்கதைதான். மற்றபடி ஒரு த்ரில்லர் படத்தில் சென்டிமென்ட், காதல் கலந்து கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பத்மகுமார்.

விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஆர்கே சுரேஷ். பிரிந்து போன மனைவி பூர்ணா, விபத்தில் இறந்து போன மகள் என தன்னுடைய வாழ்க்கையை தனிமையில் கடத்துகிறார் சுரேஷ். எந்த ஒரு வழக்கையும் தீர விசாரிப்பதில் வல்லவர். சுரேஷின் பிரிந்து போன மனைவி பூர்ணாவும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து போகிறார். ஆனால், அது ஒரு கொலை எனச் சொல்கிறார் சுரேஷ். அதற்கான காரணத்தை தனது போலீஸ் நண்பர்கள் மாரிமுத்து, இளவரசு ஆகியோரது உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறார். அது ஒரு மெடிக்கல் மாபியா என்பதை அறிந்திருந்தும் தன் உயிரை துச்சமென மதித்து களமிறங்குகிறார். முன்னாள் மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆர்கே சுரேஷ் தன்னை தனித்துவதமான கதாநாயகனாக முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்த படத்தை ரீமேக் செய்து நடித்திருக்கிறார். நடுத்தர வயது கதாபாத்திரத்தில் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இழந்த மகள், பிரிந்த மனைவி என ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம் இருக்கும். அவ்வளவு சோகத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இருப்பினும் அந்த சோகத்திற்காக எப்போதும், புகைப்பதையும், குடிப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

சுரேஷின் முன்னாள் மனைவியாக பூர்ணா. முன்னாள் காதலியாக மதுஷாலினி. இருவருக்கும் கொஞ்சமான காட்சிகள்தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள். சுரேஷின் ஆத்மார்த்தமான நண்பர்களாக இளவரசு, மாரிமுத்து. எந்நேரமும் நண்பன் கூடவே இருக்கும் இம்மாதிரியான நண்பர்களைப் பார்ப்பது அரிது.

படத்தில் தனித்த வில்லன் என்று யாரும் கிடையாது. ஒரு மருத்துவமனையை மட்டும் 'மெடிக்கல் மாபியா மையம்' என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இதற்கு முன்பு இம்மாதிரியான திரைப்படங்கள் சில வந்திருக்கின்றன. அவை ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்த படங்கள். இப்படம் உணர்வுபூர்வமான ஒரு படம்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு பாடல்கள் அவசியமில்லை, இருந்தாலும் ஒரு சில பாடல்கள் உள்ளன. பின்னணி இசையில் பரபரப்பை கூட்டியிருக்கிறார் ஜிவி. ஒரு த்ரில்லர் படத்திற்கு மலைப் பிரதேச கதைக்களம் ஒரு அச்சத்தைத்தரும். ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன் வால்பாறையை வளைத்து வளைத்துப் படமாக்கியிருக்கிறார். எடிட்டர் சதீஷ் சூர்யா காட்சிகளின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் யாருமே யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இப்படியான கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் அபூர்வமாகவே அமையும். அந்த கடைசி கட்ட காட்சிகள் மிகவும் உருக வைக்கும்.

விசித்திரன் - தியாகி

 

விசித்திரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

விசித்திரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓