நடிகர்கள் : மோகன்லால், ஹனிரோஸ், அனூப் மேனன், நிகிதா, அதுல் குல்கர்னி, பிரதாப் போத்தன், இன்னொசன்ட்
டைரக்சன் : பத்மகுமார்
2010ல் வெளியான 'சிகார்' என்கிற வெற்றிப்படத்தை தொடர்ந்து மோகன்லால் - பத்மகுமார் இணைந்துள்ள இரண்டாவது படம் தான் இந்த 'கனல்'.
திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள கார்வார் நகரத்தை நோக்கி ஒரு நீண்டதூர ரயில் பயணத்துடன் படம் துவங்குகிறது. ரயிலில் பயணிக்கும் மோகன்லால் சக பயணியான அனூப் மேனனுடன் நட்பாகிறார். பாதி வழியில் ஏற்படும் இடையூறால் ரயில் பயணம் தடைபட, இருவரும் லாரியில் பயணிக்கிறார்கள். வெளிநாட்டு முதலாளி ஒருவருக்கு சேனல் ஆரம்பித்து நடத்திக்கொடுத்த வகையில் கடனாளி ஆனதால், கடன்காரர்களிடம் இருந்து தலைமறைவாவதற்காக மனைவி குழந்தைகளை ஊரில் விட்டுவிட்டு கிளம்பி வந்ததாக சொல்கிறார் அனூப் மேனன்.
தனது மனைவி ஹனிரோஸ் மற்றும் குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா வந்ததாக சொல்கிறார் மோகன்லால். இதே நேரத்தில் இன்னொரு பக்கம் திருவனந்தபுரத்தில், ஆளரவமற்ற பகுதி ஒன்றில், கதவுகள் அடைக்கப்பட்ட காரினுள் வசதியான வீட்டுப்பெண்ணான நிகிதா மூச்சுமுட்டி இறந்து கிடப்பதும், அதை தொடர்ந்து போலீஸ் விசாரிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
கார்வாரை அடையும் மோகன்லால், அங்கே பிரதாப் போத்தன் நடத்தும் விழாவில் அவரை சந்தித்து நட்பாகிறார்.. ஆனால் அன்று இரவே பிரதாப் போத்தன் மற்றும் அவரது மனைவி மகள் அனைவரையும் தயவுதாட்சண்யம் பாராமல் சுட்டுத்தள்ளுகிறார் மோகன்லால். அதற்குமுன் அவர்களது கணக்கில் உள்ள பணத்தை தனது வங்கிக்கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் பண்ணிக்கொள்கிறார். கூடவே இருந்து இதைப்பார்த்து அதிர்ச்சியடையும் அனூப் மேனனுக்கு அவர் கடன்தொகையை செட்டில் செய்யவேண்டிய பணத்தை கொடுத்து விட்டு கிளம்புகிறார் மோகன்லால்.
இந்நிலையில் நிகிதாவின் கணவரான அதுல் குல்கர்னிக்கு, அவரது மனைவி இறந்த தகவல் சொல்லப்பட வெளிநாட்டில் இருந்து கேரளா வருகிறார். வந்த இடத்தில் தனது மாமனார் பிரதாப் போத்தனும் குடும்பத்துடன் கொல்லப்பட்டதும், அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதும் வேறு யாருக்கோ மாற்றப்பட்டுள்ளதும் தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சியாகும் அதுல் குல்கர்னி, கடைசியாக மாமனார் கலந்துகொண்ட விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்க்கும்போது அதில் மோகன்லாலும் அனூப் மேனனும் இடம்பெற்றுள்ளதை பார்க்கிறார்.
அனூப் மேனன் சேனல் மூலமாக தெரிந்த முகமாக இருப்பதால் அவரது விலாசத்தை கண்டுபிடித்து நேரில் செல்லும் அதுல்குல்கர்னிக்கு, மோகன்லால் தான் இந்த கொலைகளை செய்தது என தெரிய வருகிறது. அதற்கான காரணமும் குல்கர்னிக்கு உடனே புரிய, தானும் எந்த நேரத்திலும் மோகன்லாலால் கொல்லப்படலாம் என உணர்கிறார்.. மோகன்லால் யார், எதற்காக பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தை ஈவிரக்கமில்லாமல் கொல்கிறார், அதுல் குல்கர்னி செய்த தவறு என்ன, இதில் சம்பந்தமில்லாத அனூப் மேனன் உள்ளே நுழைந்தது ஏன் என்பதற்கு கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.
இவ்வளவு மெல்லிய ஆனால் வயலன்ட்டான பழிவாங்கும் கதை இதற்குமுன் மலையாளத்தில் வந்திருக்கிறதா, அதுபோன்ற படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பது சந்தேகம் தான். அடிதடி, சேசிங் இப்படி எதுவும் இல்லாமல் மென்மையான அணுகுமுறையால் அசால்ட்டாக கொலைகளை செய்யும் நெகடிவ் கேரக்டரில் மோகன்லால் ஆச்சர்யப்படுத்துகிறார். குறிப்பாக நிகிதாவுடன் உறவாடி, அவரது உயிருக்கு விடுதலை கொடுக்கும் காட்சியில் ஜேம்ஸ்பாண்டாகவே மாறிவிடுகிறார் மோகன்லால்.
மோகன்லால் கொலைகளை செய்வதற்கு காரணமாக அமைந்த பின்னனி ரொம்பவே குரூரமானது.. துயரமானது.. கடனும் வறுமையும் சாதாரண மனிதர்களை எப்படி துரோகத்தின் வாசலுக்கு அழைத்து செல்கிறது என்பதற்கு நிகிதா, அதுல் குல்கர்னி, பிரதாப் போத்தன் குடும்பம் மொத்த உதாரணமாக காட்டப்பட்டிருக்கிறது. மோகன்லாலின் மனைவியான ஹனி ரோஸும் ஒரே நேரத்தில் பிறந்த அவரது நான்கு குழந்தைகளுக்குமான பிளாஸ்பேக் காட்சி மனதை உறைய வைப்பதுடன், மோகன்லால் மேற்கொள்ளும் பழிவாங்கும் படலத்தை நியாயப்படுத்தவும் செய்கிறது.
டிவி சேனலை ஆரம்பித்துவிட்டு அல்லல்படும் கேரக்டரில் அனூப் மேனன் பரிதாபம் அள்ளுகிறார்.. சேனலுக்கு பாயும் பணம் மூலமாக விபத்தை கொலையாக்குவதும், கொலையை விபத்தாக்குவதும் சாத்தையமாவதும், அதில் நிர்பந்தம் காரணமாக அனூப் மேனன் போன்ற நிர்வாகிகள் பலியாடுகளாவதும் யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. நிகிதாவின் கொடூரத்திற்கு அவருக்கு கிடைக்கும் தண்டனை சரிதான் என சொல்லவைத்திருக்கிறது திரைக்கதை. அதுல் குல்கர்னி ஒன்றும் படா படா திட்டங்கள் தீட்டும் கொடுமையான வில்லன் இல்லை என்பதால் கடைசியில் அவர் விஷம் அருந்தி மரணிப்பது, பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.. க்ளைமாக்ஸில் இவ்வளவு அழகாக, நீண்ட உரையாடலுடன் ஒரு கொலையை பண்ணுவது புதுசு.
நாக மாணிக்க கல்லை தேடி சதுரங்க வேட்டைக்கு கிளம்பும் இன்னொசன்ட் மற்றும் அவரது உதவியாளர் கொச்சு பிரேமனின் காமெடி ரயிலுக்குள்ளேயே முடிந்து விடுகிறது.. ரயில் பயணத்தையும், வெளிநாட்டு நிகழ்வுகளையும் பதமாக நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது வினோத் இல்லம்பள்ளியின் ஒளிப்பதிவு. திரைக்கதையில் இடைவேளைக்கு முன் சாதாரண பாசஞ்சர் வேகத்தில் பயணிக்கும் சுரேஷ்பாபுவின் பேனா, இடைவேளைக்குபின் புல்லட் ட்ரெயினாக பறக்கிறது..
அனூப் மேனனின் வெளிநாட்டு சேனல் பிளாஸ்பேக் எல்லாம் தேவையா என நம் தவறாக நினைத்தால், க்ளைமாக்ஸிற்கு முன் அதை சரியான இடத்தில் பொறுத்தி நம்மை வெட்கப்பட வைத்து விடுகிறார்கள். பழிவாங்கும் கதையை மிக நுணுக்கமாக, அதேசமயம் அழுத்தமான பின்னணியுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் பத்மகுமார். மோகன்லால் பழிவாங்குவதற்கான காரணத்தை க்ளைமாக்ஸ் வரை மறைத்து பதற்றத்தை ஏற்படுத்துவதில் இயக்குனரும் கதாசிரியரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.