வேட்டை நாய்,Vettai naai
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சுரபி பிக்சர்ஸ்
இயக்கம் - ஜெய்சங்கர்
இசை - கணேஷ் சந்திரசேகரன்
நடிப்பு - ஆர்கே சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா
வெளியான தேதி - 26 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5

ஒரு தாதா, அவருக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு அடியாள். இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ விதமான கதைகள் வந்துவிட்டன. இந்தப் படமும் அப்படியான ஒரு படம் தான். முழுவதும் ரவுடியிசமான கதையாகச் சொல்லாமல் காதல், சென்டிமென்ட் என சேர்த்து கவர முயற்சித்திருக்கிறார்கள்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நடக்கும் கதை. அங்கு கட்டப் பஞ்சாயத்து செய்பவராக தாதா ரேஞ்சுக்கு இருப்பவர் ராம்கி. அவரிடம் அடியாளாக வேலை பார்க்கிறார் ஆர்கே சுரேஷ். பக்கத்து ஊரில் பெண் பார்க்கச் சென்ற இடத்தில் அங்கு தனது உறவினர் பெண்ணான சுபிக்ஷாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் சுரேஷ். சில பல முயற்சிகளுக்குப் பின் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பின் கணவர் அடியாள் வேலை செய்யும் சுரேஷை மாற்ற முயற்சித்து சில தோல்விகளுக்குப் பிறகு வெற்றியும் பெறுகிறார் சுபிக்ஷா. தன்னை விட்டு விலகிப் போன சுரேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ராம்கி. மேலும், தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சுரேஷ் கொன்றதாக அவரைக் கொலை செய்யத் துடிக்கிறார்கள் முஸ்லிம் சமூகத்தினர் சிலர். சுரேஷுடன் வேலை செய்யும் மற்றொருவரும் சுரேஷைக் கொலை செய்யத் துடிக்கிறார். திருந்தி வாழும் சுரேஷ் அவர்களால் கொல்லப்படுகிறாரா, நலமாக வாழ்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பொதுவாக ரவுடியிசக் கதை என்றால் சென்னை, மதுரை, நெல்லை என மாநகரத்துப் பின்னணியில் இருக்கும். இந்தப் படத்தில் இயக்குனர் ஜெய்சங்கர் மலைப் பிரதேசத்தைத் தேர்வு செய்திருக்கிறார். ஆனால், சில காட்சிகளில் மட்டும்தான் அது காட்டப்படுகிறது. மற்றபடி அந்தப் பின்னணி கதைக்களத்திற்கு பெரிய உதவி எதையும் செய்யவில்லை.

அடியாள் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருக்கிறார் ஆர்கே சுரேஷ். ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதற்காக நடித்துத் தள்ளுகிறார். காதல் காட்சிகளில் அவருடைய நடிப்பு சுத்தமாகப் பொருந்தவில்லை. அதே சமயம், அடிதடி காட்சிகளில் அந்த ஆவேசத்தை இயல்பாகக் காட்டிவிடுகிறார்.

தாதாவாக ராம்கி. இன்றைய ரசிகர்களுக்கு இவரை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காலம் மாற மாற நடிப்பும் மாறிவிட்டது. 80களில் நடித்ததைப் போலவே இந்தப் படத்திலும் நடிப்பது தெரியும்படி நடித்திருக்கிறார் ராம்கி.

படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் மூவர். ஒருவர் படத்தின் கதாநாயகி சுபிக்ஷா, மற்றொருவர் சுரேஷின் அத்தை ரமா, இன்னொருவர் மாமா நமோ நாராயணன். பள்ளியில் படிக்கும் பெண்ணான திருமணம் செய்து வைப்பதெல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு கணவரை மாற்ற முயற்சிக்கும் நடிப்பில் சுபிக்ஷா பாராட்ட வைக்கிறார்.

இடைவேளைக்குப் பின் கதை தடம் மாறுகிறது. சுபிக்ஷா பள்ளியில் படிக்கும் போது அவரைக் காதலிக்கும் மலையாள இளைஞர், தன் காதலிக்குத் திருமணம் ஆனது தெரிந்தும் சுரேஷுக்கு உதவி செய்ய முன் வருகிறார். கள்ளக் காதல் என ஊரார் கிசுகிசுக்க, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்க என படத்தின் மையம் தடம் மாறுகிறது.

அடிதடி கதைக்கு மலைப் பிரதேசப் பின்னணி, இருந்தாலும் மலையின் அழகைக் காட்டாமல் வீடுகள் சார்ந்த பகுதிகளைக் காட்டி யதார்த்தத்தை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

வேட்டை நாய் என்ற தலைப்பு கதாநாயகனுக்காக வைக்கப்பட்ட தலைப்பு, ஆனால், அதன்பின் கதை கதாநாயகியைச் சுற்றி நகர ஆரம்பிக்கிறது. அழுத்தமில்லாத காட்சிகள், பரபரப்பில்லாத திரைக்கதை என படம் பல இடங்களில் தடுமாறுகிறது.

வேட்டை நாய் - வேட்டை அல்ல

 

பட குழுவினர்

வேட்டை நாய்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓