நடிப்பு - வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா மற்றும் பலர்
தயாரிப்பு - ஸ்வேதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - ஏ.வெங்கடேஷ்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
வெளியான தேதி - 8 பிப்ரவரி 2019
நேரம் - 1 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் - 2/5
நட்பு, காதல் இவை இரண்டும் இல்லாத திரைப்படங்களைப் பார்ப்பது அரிதான ஒரு விஷயம். இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்த நேத்ரா படத்தின் முக்கிய அம்சங்கள்.
நட்பையும், காதலையும் சிலர்தான் சரியாகப் பிரித்துப் பார்ப்பார்கள், சிலர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து நினைத்து அவர்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவார்கள். இரண்டையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை.
இந்த நேத்ரா படமும் நட்பு, காதலை மையமாக வைத்துள்ள படம்தான். பல ஆக்ஷன், காமெடிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ், இந்த நேத்ரா படத்தை அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தைத் தவிர படத்தின் கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. அதை கதைக்கு இன்னும் கூடுதலான சிறப்பம்சாகச் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வினய், சுபிக்ஷா, தமன் குமார் ஆகியோர் நண்பர்கள். சுபிக்ஷா, தமன் காதலர்கள். ஆனால், சுபிக்ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். தனது நண்பர்களின் காதலைச் சேர்த்து வைக்க கனடாவிலிருந்து வருகிறார் வினய். அவரது திட்டப்படி சுபிக்ஷா, தமன்குமார் கனடாவுக்குச் செல்கிறார்கள். அவர்கள் வரும் சமயம் வினய் வேலை விஷயமாக ஆஸ்திரேலியா செல்கிறார். தமன் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்கிறார்கள். அங்கு வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே தமன் காணாமல் போகிறார். காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார் சுபிக்ஷா. ஆனால், அவர் தமனுடன் வரவில்லை என்றும் தனியாகத்தான் வந்தார் என்றும் பலர் அதிர்ச்சியைக் கொடுக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் நாயகன், வில்லன் என இரண்டாகவும் வினய். நண்பர்களின் காதலுக்கு உதவுவதாகச் சொல்பவரே அவர்களைப் பிரித்து வைத்து நாடகமாடுவது நாம் எதிர்பாராத அதிர்ச்சி. அதற்கு அவர் சொல்லும் காரணம் சரிதான். அதற்காக தன் நண்பனையே அவர் கொல்ல முயற்சிப்பதெல்லாம் படுபயங்கரமான வில்லத்தனம். இருந்தாலும் சாக்லேட் பாய் தோற்றத்தில் இருக்கும் வினய் கஷ்டப்பட்டு வில்லத்தனத்தை வரவழைக்க முயற்சித்திருக்கிறார்.
காதலர்களாக தமன்குமார், சுபிக்ஷா. அப்பாவி தமன்குமாருக்கு சுபிக்ஷாவைக் கொஞ்சக் கூட நேரமில்லை. கனடா சென்று கொஞ்சுவதற்குள் அவரைக் கடத்திவிடுகிறார்கள். அதன்பின் தனியறையில் மாட்டிக் கொண்டு மரண பயத்துடன் இருக்கிறார். அவர் கண் எதிரிலேயே தன் காதலி ரசிக்கப்படுவதைப் பார்க்கும் அபாக்கியசாலி.
சுபிக்ஷா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகையில்லாமல் நடித்திருக்கிறார். காதலனைப் பறிகொடுத்துவிட்டு தவிப்பவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் வினய் மீதே சந்தேகம் வருகிறது. அதன்பின் அவரைக் கொஞ்சம் ஆக்ஷன் நாயகியாகக் கூட மாற்றியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
ரித்விகாவுக்கு அதிக வேலையில்லை. வினய்யின் உதவியாளராக வருகிறார். ரோபோ சங்கர், ராஜேந்திரன் நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. முந்தைய ஹிட் படங்களை ஸ்பூப் செய்து நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்களை விட பின்னணி இசை பரவாயில்லை. கனடாவின் அழகை இன்னும் கண்கொள்ளாக் காட்சியாக ஒளிப்பதிவாளர் காட்டியிருக்கலாம்.
ஒரு த்ரில்லர் கதைக்குரிய வேகமும் விறுவிறுப்பும் திரைக்கதையில் இல்லை. தமன் காணாமல் போன பிறகு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து படத்தை நகர்த்தியிருக்கலாம்.
படத்தின் கதை ஓகே. திரைக்கதையும், மேக்கிங்கும் வேறு ஒரு தளத்தில் இருந்திருந்தால் இந்த நேத்ரா ரசிகர்களை சூப்பர்ரா என சொல்ல வைத்திருக்கும்.
நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்சம் உஷாரா இரு எனச் சொல்கிறது இந்த நேத்ரா.
நேத்ரா - கனடாவுக்கு ஒரு காதல் யாத்ரா