
தண்டேல்
விமர்சனம்
தயாரிப்பு-கீதா ஆர்ட்ஸ்
இயக்கம்- சந்து மொண்டேட்டி
நடிகர்கள்-நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, பப்லு பிரித்விராஜ், கல்பலதா
வெளியான தேதி-7 பிப்ரவரி 2025
நேரம்-2 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங்-3/5
கதை சுருக்கம்
ஆந்திர மீனவ கிராமத்தில் மீன்பிடித் தொழில் செய்து வரும் நாக சைதன்யாவும் அதே ஊரை சேர்ந்த சாய் பல்லவியும் சிறு வயது முதலே நெருங்கி பழகி காதலித்து வருகின்றனர். குஜராத் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில் தான் இவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கம். அப்படி நீண்ட தூரம் அவர்கள் செல்வதால் திரும்பி வர ஒன்பது மாதங்கள் ஆகும். இதனால் நாக சைதன்யாவை கடலுக்குள் செல்ல வேண்டாம் என சாய் பல்லவி எச்சரிக்கிறார். மீறி சென்றால் நமது காதல் நிலைக்காது என்றும் சொல்கிறார். ஆனால் ஊர் மக்களுக்காகவும், தன்னை நம்பி உள்ள 22 மீனவர்களுக்காகவும் கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் வீசியதால் நிலை தடுமாறி பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்று விடுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது பாகிஸ்தான் கடற்படை. இதனிடையே சாய் பல்லவிக்கும், கருணாகரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடந்தது என்ன? நாக சைதன்யா வெளியே வந்தாரா? என்பதே படத்தின் மீது கதை.
படம் எப்படி
2019ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மீனவர்களின் கண்ணீர் கதை. நாக சைதன்யா உண்மையான மீனவர் போல் வாழ்ந்துள்ளார். அவர்களின் உடல் மொழி மற்றும் நடை, உடை பாவனைகளை கச்சிதமாக திரையில் காட்டி நடித்துள்ளார். சாய் பல்லவியின் கேரக்டர் பல மீனவ பெண்களின் எண்ண பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. காதலனிடம் காட்டும் அன்பு, தனது வாழ்வுக்கான உத்திரவாத போராட்டம் என பல இடங்களில் தன்னுடைய நடிப்பு வாயிலாக அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். மேலும் கருணாகரன், ஆடுகளம் நரேன் மற்றும் மீனவர்களாக நடித்துள்ளவர்கள் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் மீனவ பிரச்னையை மையமாக வைத்து அதிலும் உண்மை சம்பவத்தை மேற்கோள் காட்டி எதார்த்தமான வாழ்வியல் படத்தை இயக்குனர் சந்து மொண்டேட்டி கொடுத்துள்ளார். திரைக்கதையில் தொய்வு ஏற்படுத்தாமல் அடுத்தடுத்த காட்சிகள் மூலம் சுவாரசியமாக படத்தை நகர்த்தியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் தத்துவ பாடல் ரசிகர்களிடம் கிளாப்ஸ் பெறுகிறது. பின்னணி இசையும் பிரமாதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷயாம் தத் அற்புதமாக கேமராவை கையாண்டு உள்ளார். அரபிக்கடலும் மீனவ கிராமங்களும் அழகாக தெரிகிறது.
பிளஸ் & மைனஸ்
காலம் காலமாக உள்ள மீனவப் பிரச்னையை அழகாக கையாண்டு அதோடு சமகால அரசியல் நிகழ்வை ஒன்றிணைத்து சொல்லிய விதம் பாராட்டுக்குரியது. அதே நேரம் பாகிஸ்தான் சிறையில் தீவிரவாதிகளுடன் அடைபட்டுள்ள இந்திய மீனவர்களை தாக்குவது, நாட்டின் தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை பாகிஸ்தான் சிறை காவலர்கள் அவமதிப்பு செய்வது போன்ற காட்சிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கு எதிரான ஒன்றாக தெரிகிறது.
தண்டேல் - ரசனை