கஸ்டடி
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - நாக சைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார்
வெளியான தேதி - 12 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு அதைத் தெலுங்குப் பின்னணியில், தெலுங்கு கதைக்களத்துடன் படமாக்கி அதைத் தமிழ்ப் படம் என்று சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ?. படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தமிழில் மட்டும் பேசினால் அது தமிழ்ப் படமாகிவிடுமா ?.
இப்படித்தான் இதற்கு முன்பு வந்த 'த வாரியர், வாத்தி' ஆகிய தெலுங்கு வாடையுடன் கூடிய தமிழ்ப் படங்களாக வெளியிட்டார்கள். அதே வரிசையில் இப்போது இந்த 'கஸ்டடி' படமும் சேர்ந்துள்ளது. பேசாமல் தெலுங்கில் மட்டும் படமாக்கிவிட்டு தமிழில் டப்பிங் செய்து கூட வெளியிட்டிருக்கலாம்.
1996ல் ஆந்திராவின் சிறிய ஊரான சாகிநெட்டிபள்ளியில் நடக்கும் கதை. அந்த ஊர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்ப்பவர் நாக சைதன்யா. ஒரு நாள் இரவு ரோந்து செல்லும் போது குடி போதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும் அவருடன் இருந்த சம்பத் ராஜையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வருகிறார். சம்பத் ராஜ் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் அரவிந்த்சாமி பிரபல ரவுடி, அவரைக் கைது செய்யத்தான் வந்தேன் என்று சொல்கிறார். அரவிந்த்சாமியைக் கொல்ல எஸ்பி--யே காவல் நிலையம் வர அவரைக் கொல்லச் சொன்னதே முதலமைச்சர் பிரியாமணிதான் என்ற உண்மையும் தெரிய வருகிறது. அரவிந்த்சாமியையும், சம்பத்ராஜையும் அங்கிருந்து அழைத்துக் கொண்டு ஓடுகிறார் நாக சைதன்யா. அவர்களைக் கொல்ல ஐஜி சரத்குமாரே களத்தில் இறங்க அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சிபிஐ, முதலமைச்சர் பிரியாமணி, ஐஜி சரத்குமார், ரவுடி அரவிந்த்சாமி, கான்ஸ்டபிள் நாகசைதன்யா கூடவே அவரது காதலி கிர்த்தி ஷெட்டி என நடக்கும் ஆடு, புலி ஆட்டம் தான் படத்தின் பரபரப்பான திரைக்கதை. அரசியல், ரவுடியிசம், நேர்மையான கான்ஸ்டபிள், சிபிஐ என ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை விஷயங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனாலும், 'மங்காத்தா, மாநாடு' என வேறு விதமான 'கேம்' ஆடிய வெங்கட் பிரபுவா இந்த 'கேம்'ஐயும் ஆடினார் என்பது ஆச்சரியமாக உள்ளது. திடீரென சில சிறப்பான காட்சிகள், திடீரென சில 'சில்லி' ஆன காட்சிகள் என தடுமாறியிருக்கிறார்.
நாகசைதன்யா நேர்மையான கான்ஸ்பிளாக அழுத்தமாக நடித்திருந்தாலும் அவருடைய தோற்றம் ஒரு தமிழ் நடிகருக்கான தோற்றமாக இல்லாமல் இருக்கிறது. இதற்கு முன்பு அவருடைய டப்பிங் படங்கள் சிலவற்றையாவது தமிழ் ரசிகர்கள் பார்த்திருந்தால் அவருடய இந்த நேரடி தமிழ் அறிமுகத்தை வரவேற்றிருப்பார்கள். பிளாஷ்பேக்கில் தாடியுடன் வரும் போது மட்டும் அப்பா நாகார்ஜுனாவை 'இதயத்தை திருடாதே' படத்தில் பார்த்தது போல் இருக்கிறார். உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற அவரது கொள்கை நேர்மையான காவல் துறையினருக்கான ஒரு சமர்ப்பனம்.
ரவுடியாக அரவிந்த்சாமி. படத்தில் ஆங்காங்கே நமக்கு ரிலாக்ஸ் கொடுப்பவர் அவர் மட்டுமே. சில இடங்களில் அவரது கிண்டலான வசனங்கள் நம்மை சிரிக்கவும் வைக்கிறது. ஆளும் அரசுக்கு சேவகம் செய்யும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார். நாகசைதன்யாவையும், அரவிந்த்சாமியையும் துரத்திக் கொண்டே இருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி காதல் காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் சுவாரசியமாக இருந்தாலும் படம் எதை நோக்கிப் போகப் போகிறது என்ற குழப்பத்தால் ஒட்டாமல் இருக்கிறது. செத்தாலும் பரவாயில்லை காதலனுடனேயே தான் ஓடுவேன் என அடம் பிடித்து நாகசைதன்யாவுடன் ஓடிக் கொண்டேயிருக்கிறார் கிர்த்தி.
ஆந்திராவின் முதலமைச்சராக பிரியாமணி. அவரைப் பற்றிய ஊழல்களை, அவருக்கு எதிரான சாட்சியான அரவிந்த்சாமியை பெங்களூரு நீதிமன்றத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் என வெங்கட்பிரபு தமிழக அரசியலையும் சற்றே ஞாபகப்படுத்திவிடுகிறார். சில காட்சிகள் என்றாலும் பிரியாமணி கம்பீரம் காட்டுகிறார். பிளாஷ்பேக்கில் ஒரு சர்ப்ரைஸ் காதல் ஜோடியாக ஜீவா - ஆனந்தி.
இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வழக்கம் போல யுவனின் தீம் மியூசிக் ரசிக்க வைக்கிறது. கதிர் ஒளிப்பதிவில் அந்த அணைக்கட்டு சண்டைக் காட்சிகளும், தொடர் சேசிங் காட்சிகளும் அவருடைய உழைப்பைக் காட்டுகிறது.
ஒரு 'க்ரிப்' இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் திரைக்கதை, நாகசைதன்யா, அரவிந்த்சாமி எங்கே சென்றாலும் அவர்கள் தொடர்ந்து தப்பிக்க சரியாகக் கிடைக்கும் ஒரு 'லிப்ட்' ஆகியவை ஏமாற்றமே. 'மாநாடு' போன்ற 'பிரில்லியன்ஸ்' திரைக்கதைக்குப் பிறகு இப்படி ஒரு சினிமாத்தனமா என்ற கேள்வி எழும்.
கஸ்டடி - Lack Of Security