நடிகர்கள் : ஜெய், சிவா, வைபவ், விஜய்வசந்த், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், அஜய், இனிகோ பிரபாகரன், மகத், பிரேம்ஜி, சனா அல்டாப், விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி, சாந்தினி மாதவன், கிருத்திகா, மகேஸ்வரி, மனிஷா யாதவ்.
அபிஷேக் பிலிம்ஸ் - கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி. சரண் - வெங்கட்பிரபு இருவரும் இணைந்து தயாரிக்க, பிளாக் டிக்கெட் நிறுவனம் வழங்க, சென்னை - 28 படத்தின் இரண்டாம் பாகமாக, வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஜெய், சிவா, வைபவ், விஜய்வசந்த், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், அஜய், இனிகோ பிரபாகரன், மகத், பிரேம்ஜி, சனா அல்டாப், விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி, சாந்தினி மாதவன், கிருத்திகா, மகேஸ்வரி, மனிஷா யாதவ், சச்சு, சுப்பு பஞ்சு, இளவரசு, அம்மா டி.சிவா, எஸ்.என்.சுரேந்தர், சந்தானபாரதி, சண்முகசுந்தரம், சக்தி சரவணன், ஹரி பிரஷாந்த், நாகேந்திரன்.... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க கிராமப்புற கிரிக்கெட் விளையாட்டையும், சென்டிமெண்ட்டையும் யதார்த்தமாக காட்சிப்பதிவு செய்திருக்கும் படம் தான் "சென்னை 600028 II".
கதைப்படி, சென்னை - 28 முதல் பகுதியில் வெற்றிகரமான கிரிக்கெட் டீமாக சென்னையில் வலம் வந்த டீம் வீரர்களில் சிலர் காணாமல் போயிருக்க பலர் உத்தியோகம், திருமணம், குடும்பம்... என்று செட்டில் ஆன பின்பும், விட்ட குறை, தொட்ட குறையாக கிரிக்கெட்டை விடாமல் தொடர்ந்து வருகிறார்கள் அந்த டீமில் கல்யாணம் ஆகாதவர்கள் ஜெய்யும், பிரேம்ஜியும் தான். அதில் ஜெய்க்கு அழகிய காதலி இருக்கிறார். ஒரு வழியாக பெற்றோர் சம்மதிக்க ரகு எனும் ஜெய்யின் காதலி அனுராதா - சானா அல்டாப்வுடன் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. மணமகள் அனு - சானா அல்டாப்பின் சொந்த ஊரான தேனி பகுதிக்கு, கார்த்தி - மிர்ச்சி சிவா, கோபி - விஜய் வசந்த், பழனி - நிதின்சத்யா, ஏழுமலை-அஜெய்ராஜ், சீனி - காமெடி பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்களும் அவர்களது குடும்பமும் புடைசூழ தனது குடும்பத்துடன் போகிறார் மணமகன் ரகு-ஜெய். போன இடத்தில், திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் சூழலில், நட்புக்காக கிரிக்கெட்டில் குதிக்கும் ஜெய்யும் அவரது நண்பர்களும், அந்த ஏரியா பில் - டப் கிரிக்கெட் பேர்வழி மருதுபாண்டி - வைபவ்வின் விளையாட்டு விபரீத புத்தியால் சந்திக்கும் பிரச்சினைகளும், பஞ்சாயத்துகளும் தான் சென்னை 600028 -11 மொத்தக் கதையும்.
வைபவ்வின் விபரீத புத்தியால் ஜெய்யின் திருமணம் எப்படி தடைபடுகிறது? நண்பர்களுக்குள்பிளவு எப்படி ஏற்படுகிறது?, முடிவாக நண்பர்கள் ஒன்று சேர்ந்தனரா? காதலியுடன் ஜெய்யின் திருமணம் நடந்தேறியதா..? தங்களது ஆஸ்தான கிரிக்கெட்டில் அவர்கள் வெற்றி பெற்றனரா..? ஆகிய இன்னும் பல கேள்விகளுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும், கலக்கலாகவும் பதில் சொல்கிறது ரசிகனை கொஞ்சமும் படுத்தாத இப்படக்காட்சிப்படுத்தல் மொத்தமும்.
ஏகப்பட்ட கதாநாயகர்கள் அதில் ரகுவாக ஜெய், கார்த்தியாக சிவா, மருதுபாண்டியாக வைபவ், கோபியாக விஜய் வசந்த், பழனியாக நிதின்சத்யா, அரவிந்தாகவே அரவிந்த் ஆகாஷ், ஏழுமலையாக அஜெய்ராஜ், ராயபுரம் ராக்கர்ஸ் அணியின் ஜானாக இனிகோ பிரபாகரன், சீனியாக பிரேம்ஜி, டீம் மேனேஜர் மனோகராக இளவரசு உள்ளிட்டோர் பக்காவாக நடித்து பளிச்சிட்டுள்ளளனர் .
அதிலும், மிர்ச்சி சிவா சானஸே இல்லை. இது, அலைபாயுதேயில் இருந்து உருவியது, இது, அவதாரில் இருந்து உருவியது..... என சினிமா விமர்சகர் போர்வையில் சோஷியல் மீடியாக்களில் அவர் கலாய்த்து அடிக்கும் லூட்டிகள் ஒரு பக்கம் என்றால், மற்றொருபக்கம், "க்ரவுண்டில் நிற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டைப் பார்த்து, "நீங்க ஏன் தேவையில்லாமல் எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசுறீங்க?" என்றும், "ரகு கூல் ஆயிட்டான்டா... எப்படி சொல்றேன்னு தெரியுமா...? பெங்களுர் போறதுக்கு முன்னாடி யாரும் பூஸ்ட் சாப்பிட மாட்டங்க... மச்சி சாப்பிடுறான்ல என்றபடி ரகு - ஜெய்யையும், நண்பர்களையும் மட்டுமின்றி ரசிகர்களையும் சிரிக்க வைப்பதிலும், கார்த்திக் எனும் மிர்ச்சி சிவா செம ஹாஸ்யம். கண்களாலேயே காதல் மொழி பேசும் காதல் நாயகராக ஜெய்யும் மார்வாடி பெண்ணான பொண்டாட்டியிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் வசந்தும், சேட்டைகளிலேயே காமெடி பண்ணும் பிரேம்ஜியும் படத்திற்கு படு ப்ளஸ்! தியேட்டரில் அள்ளுது அப்ளாஸ்!
கதாநாயகியரில் ஜெய்யின் காதலி அனுராதாவாக சானா அல்டாப் செம்ம. அதிலும், "நீ அஞ்சு வருஷமா லவ் பண்ணின பொண்ணு, வேற ஒருத்தனை கட்டிக்கப் போறான்னவுடனே.... எப்படி வலிச்சுச்சு....?, அதே மாதிரி, நான் அஞ்சு வருஷமா லவ் பண்ணின பையன் கல்யாணத்துக்கு நான்கு நாள் முந்தி வேற ஒருத்திக்கு தாலி கட்டினான்ங்கிறது எனக்கு எப்படி வலிச்சிருக்கும் ?" என நாயகிசானா, நாயகர் ஜெய்யைப் பார்த்து பேசும் "பன்ச்", அவரது அழகிய நடிப்புக்கு அசத்தல் உதாரணம். அம்மணி மாதிரியே, செல்வியாக மிர்ச்சி சிவாவின் மனைவியாக வரும் விஜயலட்சுமி (முதல், சென்னை - 28 நாயகி) மற்றும், அஞ்சனா கீர்த்தி, சாந்தினி மாதவன், கிருத்திகா, மகேஸ்வரி, சொப்பன சுந்தரியாக வந்து ஒத்தப் பாட்டுக்கு செம குத்தாட்டம் போடும் மனிஷா யாதவ், உள்ளிட்டோரும் ரகளை, ரசனை.
மேலும், லவ்வுக்கு உதவும் நாயகியின் பாட்டியாக சச்சு, சுப்பு பஞ்சு, நாயகியின் அப்பாவாக, அம்மா டிசிவா, நாயகரின் அப்பாவாக பாடகர் எஸ்.என்.சுரேந்தர், கிரிக்கெட் காம்பயர் படவா கோபி, மொடாக்குடி சந்தானபாரதி, 15 ஒவருக்காக 90 பந்துகள் வாங்கித் தர தயாராகும் மினிஸ்டர் சண்முகசுந்தரம், பிரேம்ஜியின் அப்பாவாக கங்கை அமரன், போலீஸ் நாகேந்திரன்.... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டுள்ளனர்... என்பது படத்திற்கு பக்கா வலு சேர்க்கிறது.
வித்தேஷின் கலை, இயக்கத்தில் கிராமிய கிரிக்கெட் பிட்சுகள் கலர்புல். பிரவின் கே.எல்.லின் படத்தொகுப்பில் 2 மணி45 நிமிட நேரப் பெரிய படம் இது, என்றாலும் துளியும் போரடிக்கவில்லை.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில், மதுரை தேனி பகுதி கிராமங்களும், அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளும் ரசனையாக பதிவு செய்யப்பட்டு அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.
"என் நினைவோ தினம் உன்னைச் சுற்றி.....", "சொப்பனசுந்தரி உன்ன யாரு வச்சிருக்கா...", "இதற்குத்தானா இணைந்து வாழ்ந்தோம்... வீட்டுல யாருமல்ல..." ஆகிய பாடல்கள் யுவன் சங்கர் ராஜா இசையில், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகராகம்..
சென்னை - 28 படத்தின் பாகம் இரண்டாக வெங்கட் பிரபுவின் எழுத்து, இயக்கத்தில், விளையாட்டில் ஜெயிக்க, ஒருத்தர் விளையாட்டாக செய்த விபரீதம் ஒருத்தரோட திருமண வாழ்க்கைக்கு தடை போடுகிறது. நண்பர்களின் உதவியுடன் அவர் தனது திருமணத்தை திரும்ப காண்பது எனும் அழகிய நாட்டில் (அதாங்ககருவில்....) கொஞ்சம் கிரிக்கெட்டையும், ஒரு அழகிய லவ்வையும், நிறைய காமெடி - சென்டிமெண்ட்டையும் கலந்து சென்னை - 28 முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தை மேலும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்திருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், சென்னை-28-ல் நகரத்து நவ நாகரீ பையன்களின் கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்தது மாதிரி அதன் இரண்டாம் பாகமான, இப்படத்தில் கிராமப்பகுதி கிரிக்கெட்டை அசத்தலாக கலர்புல் காமெடியாக பதிவு செய்துள்ளதும், நாயகர்களின் பெண்டாட்டி டார்ச்சர்களையும் மிக அழகாக படம் பிடித்திருப்பது உள்ளிட்டவை படத்திற்கு செம மாஸ் சேர்க்கும் க்ளாஸ், ப்ளஸ் பாயிண்ட்டுகள். எனவே, "சென்னை 600028 இரண்டாம் பாகம் - தமிழ் சினிமாவில் மற்றுமொரு கலகல, காமெடி பிராண்டு படமாகும்!"
---------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
முதல் பாகத்தில் மாமா, மச்சி என பேசிக் கொண்டிருந்த ஷார்க்ஸ் டீம் பசங்க எல்லாம் கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் உண்மையாகவே மாமா வயசான பின் நடக்கும் கதை.
எல்லாரும் ஜாலியாக்கிறாங்க, சந்தோஷமாக்கிறாங்க. குஜாலாக்கிறாங்க அப்பப்ப சரக்கடிச்சுகினேக்கிறாங்க. ஃப்ரெண்டு ஜெய் கல்யாணத்துக்காக தேனி போகுது சென்னை 28 டீம் அங்க போயும் கிரிக்கெட் விளையாடுது. ஒரே ஸாங்குல நண்பன் கல்யாணத்தையே நிறுத்திட்டு வந்திடுது. நின்னுபோன கல்யாணத்தை மீண்டும் நடத்தி வெக்கிறாங்க நண்பர்கள் அம்புடுதேன்.
10 வருடங்களுக்கு முன்னால் முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரையும் மீண்டும் சேர்த்த மெனக்கெடல் வீண் போகவில்லை. விசலாட்சி தோட்ட ஹவுசிங் போர்டில் இருந்த ஆல் பாய்ஸ் வெல் செட்டில்ட். சினிமாவில் தொடங்கி் அமெரிக்கத் தேர்தல் வரை எதையும் விட்டுவைக்காமல் விமர்சிக்கும் யூடியூப் ஆர்வக்கோளாறு விமர்சகர்களை வெச்சு செஞ்சிருக்கிறார் மிர்ச்சி சிவா. 'வியட்நாம் காலனி' படத்தைப் பார்த்துதான் கேமரூன் அவதார் எடுத்தார் என்று சொல்லிவிட்டு கேமரூனுக்கு சவால்விடுவது என்று படம் முழுக்க நான்ஸ்டாப் நக்கல்ஸ்.
'சொப்பன சுந்தரி' தவிர மற்ற பாடல்கள் கிளீன் போல்ட். பின்னணி இசைக்கு பிரேம்ஜி சப்ஸ்டிட்யூட்டாம். கிரிக்கெட் மேட்ச் காட்சிகள் ஜவ். பசங்கன்னாலே சரக்குதான் என்பதைப் போல காட்டியிருக்க வேண்டுமா?
கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம். அதையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு தன் வழக்கமான கலாய் ஃபார்முலாவை நம்பி பேட்டிங் செய்திருக்கிறது வெங்கட் பிரபு அண்ட் டீம்.
சென்னை 28 - பாய்ஸ் ஆப் பேக்
குமுதம் ரேட்டிங் - ஓகே
________________________________________
கல்கி சினி விமர்சனம்
முதல் பார்ட்டில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, அதே கதை களத்துடன் மீண்டும் இன்னொரு கிரிக்கெட் மேட்சை இயக்கி ஸ்பான்ஸர் செய்திருக்கிறார். படத்தின் ஆட்டநாயகன் என்று மேட்சைத்தான் சொல்ல வேண்டும். நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றும் சிக்ஸர், பவுண்டரியாய்க் கலக்குகின்றன. உலகக் கோப்பைப் பந்தயம் போல சில சமயம் விறுவிறுப்பாகவும், ரஞ்சித் ட்ராஃபி போல சில சமயம் ஜல்லியடிக்கவும் செய்கின்றன.
கங்கை அமரனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையே நடக்கும் அப்பா மகன் ஃபென்னி உரையாடல் ஃபன்னி உரையாடலாய் மாறி, செஞ்சுரி அடித்த விளைவைத் திரையரங்கில் உண்டாக்குகிறது.
ஆரம்பக் காட்சியில் சிவா அவுட்டானதும் காண்பிக்கப்படும் டபுள் ஆம்லெட் காட்சியின் போது ரசிகர்களின் முகங்களில் டக் அவுட் ஆன உணர்வு தோன்றுகிறது.
தொடக்கத்தில் அசரீரி அறிமுகப்படுத்தும் பாத்திரங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் கிரிக்கெட் புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர்களுக்கே நினைவிலிருத்த முடியும்.
சினிமா விமர்சகர்களைக் கிண்டல் செய்யும்போது மிர்ச்சி சிவாவின் ஸ்கோர் எகிறுகிறது. அதிலும் அவதார் படத்தை வியட்நாம் காலனியோடு ஒப்பிடுவது, ஆஸதிரேலியா அணியுடன், ஆதம்பாக்கம் டீமை ஒப்பிடுவதுபோலக் கலக்கல்.
நீள்வட்டச் சிறுமுகக் கதாநாயகி சனா அல்தாஃப் - இளமை துள்ளும் ஜெய் ஜோடி, விராட்கோலி, ரஹானே இணை சேர்ந்து ரன் அள்ளுவதைப்போலப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
பெரிய மேட்சுகளில் மட்டும்தான் cheer leaders இருப்பார்களா என்ன? இதில் கரகாட்ட மங்கைகள் அப்படி ஆட்டம் போட்டு குஷிப்படுத்துகிறார்கள்.
இரவு நேரக் கிரிக்கெட் பார்ப்பதுபோல பாந்தமாய் அமைந்திருக்கின்றன நிலவொளியில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பல.
போலித் தாலியைக் கழற்றும்போது கெட்டி மேளம் ஒலிக்கச் செய்திருப்பது அவுட்டான பேட்ஸ் மேன் வெளியேறும்போது நக்கல் ஒலியெழுப்புவதுபோலக் கிண்டல்!
நடிப்பில் பட்டையைக் கிளப்பும் சிவாவுக்கு ட்வெல்த் ப்ளேயரைப் போல அதிகம் வேலை இல்லை இந்தப் படத்தில். ஜெய்கூட அவுட் ஆகாமல் இருக்கும் பதினொன்றாம் பேட்ஸ்மேன் போலத்தான் வலம் வருகிறார்.
பத்து ஓவரிலேயே 200 ரன் எடுத்துவிடும். டீமின் வெற்றியை முன்கூட்டியே யூகிக்க முடிவதுபோல படத்தின் முடிவையும் னுமானிக்க முடிவது ஒரு மைனஸ் பாயின்ட்.
வெற்றி பெற்ற பிறகு விளையாட்டாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மதுவைப் பீய்ச்சி அடித்து மகிழ்வதைப் போல இதில் ஆரம்பம் முதல் மதுவருந்தும் காட்சிகள் அநேகம்.
பஞ்ச தந்திரம் படத்தில் மனைவிமார்கள் கணவன்கள் கெட்டுப்போவதற்கு மற்றவர் காரணம் என்பதைப்போல இதிலும் வரும் காட்சிகள், மேட்சை நேரடியாகப் பார்த்துவிட்டு தொலைக் காட்சியில் ஹைலைட்ஸ் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.
படத்தில் சில காட்சிகள் இங்கிலாந்து ஆண்டர்ஸனின் பந்து வீச்சு; சில காட்சிகள் நம்ம ஊரு ஜடேஜா ஸ்டைல்.
மொத்தத்தில் செஞ்சுரியும் இல்லை. டக் அவுட்டும் இல்லை.
திரையரங்கில் ரசிகர் கே.விக்னேஷ் கருத்து: சுமாரான மேட்ச் பார்த்த ஃபீல்