இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, அனுமபா பரமேஷ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலர் நடித்து மலையாளத் திரைப்படம் பிரேமம், அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் தெலுங்கில் பிடித்துள்ள இடம் என்ன என்று பார்ப்போம்.
நாயகன் விக்ரம்(நாக சைதன்யா) தனது வாழ்வில் மூன்று நிலைகளில் கடக்கும் காதல் தான் மொத்த பிரேமம் திரைப்படமும். விக்ரம் தனது பள்ளிப் பருவத்தில் சுமா(அனுபமா பரமேஷ்வரன்) எனும் பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்கின்றார். அது தோல்வியில் முடிய கல்லூரி பருவத்தில் ஆசிரியை சித்தாரா(ஸ்ருதிஹாசன்)-வை காதலிக்கின்றார். அக்காதலும் தோல்வியில் முடிய அவரது வாழ்வில் சிந்து(மடோனா செபஸ்டியன்) வருகின்றார். இறுதியில், விக்ரம் காதல் திருமணம் முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆனாரா இல்லையா என்பதை காதல் ரசம் சொட்ட குதுகலமாய் சொல்லி இருக்கின்றது பிரேமம் படத்தின் மீதிப்பாதி.
முழுநீள காதல் படத்தில் நாகசைதன்யாவா? என பயந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நாகசைதன்யா, காதலியுடன் ரொமான்ஸ் மற்றும் காதலி பின்னால் ஏக்கத்துடன் சுற்றும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் நாக சைதன்யாவின் ரசிகைகளின் எண்ணிக்கை கண்டிபாக உயர்ந்துவிடும் என்றே கூறலாம் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், பின்னர் நடுத்தர வயது நாயகன் என மூன்று நிலைகளிலும் தனது உடலால் மட்டுமல்லாமல் நடிப்பாலும் நாக சைதன்யா வேறுபட்டு தெரிவது பாராட்டுக்குரிய விஷயம்.
மலர் டீச்சரான சாய் பல்லவியுடன் ஒப்பிடாமல் பார்த்தால் சித்தாரா டீச்சராக வரும் ஸ்ருதிஹாசனும் கதாபாத்திரத்தில் ஒன்றி தான் நடித்துள்ளார். மலர் டீச்சரின் மேஜிக்கை சித்தாரா டீச்சர் செய்வாரா என்றால் சந்தேகம் தான். அழாகால் வசீகரிக்கும் அனுபமா பரமேஷ்வரன் அளவிற்கு மடோனாவின் மேக்கப்பிற்கு முக்கியத்துவம் தராதது ஏன் என தெரியவில்லை.
ஸ்ரீநிவாஸ் ரெட்டி, பிரம்மாஜி, ப்ரவீன் என நாக சைதன்யாவின் நண்பர்களாக திரைக்கதை முழுதும் பயணிக்கும் கதாபாத்திரங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் தருகின்றனர். முதல் பாதி முழுவதும் நகைச்சுவைக் கொண்டாட்டமாக நகருகிறது. மலையாள பிரேமம் படத்தில் சிற்சில மாற்றங்களுடன் வந்திருக்கும் தெலுங்கு பிரேமம் படத்தில், டோலிவுட் படங்களுக்கே உரிய மசாலா விஷயங்களை திணிக்காமல் இருந்ததற்கு இயக்குனருக்கு கண்டிப்பாக நன்றி கூற வேண்டும்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் காமிரா வண்ணத்தில் திரையில் மாயஜாலங்கள் நிகழ்கின்றன. படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றன. ஏற்கனவே இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையில் ஹிட்டான எவரே பாடலுடன் பிற பாடல்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இளைஞர்களின் நாடி அறிந்து வசனங்களை அமைத்துள்ளனர். திரையரங்கில் எழும் கைதட்டல்களும் பறக்கும் விசில் சப்தங்களுமே அதற்கு சாட்சி.
இயக்குனர் சண்டூ மொன்டேட்டி, பிரேமம் படத்தை அப்படியே காப்பி அடிக்காமலும், முழுவதுமாக மாற்றி விடாமலும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். இருப்பினும் மலையாள பிரேமம் படத்தின் அதீத காதலர்களுக்கு தெலுங்கு பிரேமம் கண்டிப்பாக நெருடலை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தத்தில், நாக சைதன்யாவின் புதுவித நடிப்பு, குதூகலமான கதை சொல்லல், ரொமான்டிக் பாடல்கள் என பிரேமம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி தான்.