மன்மத லீலை,Manmadha leelai

மன்மத லீலை - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - பிரேம்ஜி
நடிப்பு - அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே
வெளியான தேதி - 1 ஏப்ரல் 2022
நேரம் - 1 மணிநேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
சென்சார் சான்றிதழ் - A (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)

'மாநாடு' திரைக்கதை எழுதும் போது அதையே சற்று மாற்றி எழுதினால் எப்படி இருக்கும் என வெங்கட் பிரபுவுக்குத் தோன்றி இருக்கும் போல. அப்படம் 'டைம் லூப்' அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.

இந்த 'மன்மத லீலை'யில் படத்தின் நாயகனுக்கு 2010ல் நடக்கும் ஒரு சம்பவம், 2020ல் நடக்கும் ஒரு சம்பவம் என இரண்டடையும் ஒன்றாக்கி அடுத்தடுத்த காட்சிகளாக திரைக்கதையில் கோர்த்திருக்கிறார்கள்.

2010ல் பல பெண் தோழிகளுடன் பழக்கம் உள்ளவர் அசோக் செல்வன். அப்போதைய சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு சம்யுக்தா ஹெக்டே பழக்கமாகிறார். வீட்டில் யாரும் இல்லாத ஒரு நாளில் அசோக்கை தன் வீட்டிற்கு வரச் சொல்கிறார் சம்யுக்தா. இருவரும் கட்டில் வரை செல்கிறார்கள். விடிந்தால் சம்யுக்தாவின் அப்பா ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார். அவரிடமிருந்து தப்பிக்க முயன்று சிக்கிக் கொள்கிறார் அசோக் செல்வன்.

2020ல் மனைவி ஸ்மிருதி, ஒரு மகள் என டிசைனர் ஷாப் ஓனராக வசதியான வாழ்க்கையில் இருக்கிறார் அசோக் செல்வன். ஒரு மழை நாளில் வீட்டு முகவரி மாறி அசோக் வீட்டிற்கு வருகிறார் ரியா சுமன். ரியாவின் அழகில் மயங்கி அவரைக் கட்டில் வரை அழைத்துச் செல்கிறார் அசோக் செல்வன். விடிந்தால் அசோக்கின் மனைவி ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார். அவரிடமிருந்து தப்பிக்கிறார் அசோக். ஆனால், அசோக்கும், தானும் படுத்திருந்ததை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்கிறார் ரியா.

2010 மற்றும் 2020ல் நடக்கும் சம்பவங்களில் சிக்கிக் கொள்ளும் அசோக் செல்வன் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கலாம். ஆனால், படம் ஆரம்பமான அரை மணி நேரத்திற்கு ஒருவர் மாற்றி மற்றொருவர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்தடுத்து சில முத்தக் காட்சிகள் வந்த பிறகுதான் படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

பெண் பித்தனாக அசோக் செல்வன். அப்பாவித் தோற்றத்தில் இருப்பவர்கள்தான் இப்படி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது போலவே படம் முழுவதும் நடித்து நடந்து கொள்கிறார் அசோக். குறிப்பாக சம்யுக்தாவிடம் அவர் பேசும் காட்சிகள் தியேட்டர்களில் ஆர்ப்பரிக்க வைக்கிறது. குறிப்பாக, ''நான் உன்னை உஷார் பண்ணலாம்னு வந்தால், நீ என்னை உஷார் பண்ணியிருக்க” என்ற வசனத்திற்கு கைத்தட்டல். படத்தில் பெண்களைப் பற்றிய சில தவறான வசனங்கள் உள்ளன. ஆனால், பல பெண்களை ஏமாற்றும் அசோக் செல்வன் பற்றி எந்த ஒரு தவறான வசனமும் இடம் பெறவில்லையே ஏன் என்றும் கேட்க வைக்கிறது.

ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரில் ரியா தான் முக்கியத்துவத்துடன் முந்திக் கொள்கிறார். அதற்கு அவருடைய தாராள கிளாமர் தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். சம்யுக்தாவுக்கும் கிளாமர் காட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இயக்குனர் அவரை அப்படிக் காட்டவில்லை. ஸ்மிருதி ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். 'அப்பா' ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் கொஞ்சமே வந்தாலும் மிரட்டி விட்டுப் போகிறார்.

இரண்டே இரண்டு வீடு, ஒரு பார்ம் அவுஸ் என மொத்த படத்தையும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெங்கட் பிரபு எடுத்து முடித்திருக்கலாம். அவருடைய சம்பளம், நடிகர்களின் சம்பளம்தான் படத்தின் செலவாக இருக்கும். ஓடிடிக்காக எடுத்து அப்புறம் மனம் மாறி தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஓடிடியில் வந்திருந்தால் 'தாராளமயமாக்கல்' இன்னும் நிறைய இருந்திருக்கலாம். கொரோனா காலத்தில் 'மாநாடு' படத்திற்கு இடையே கிடைத்த 'கேப்'பில் 'சின்ன கல்லு, பெத்த லாபம்' பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.

பிரேம்ஜி இசையில் பாடல்கள் இல்லை, பின்னணி இசையில் கூட கொஞ்சம் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்ட படம் என்றாலும் சரியான லைட்டிங்கால் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அமுதன். திரைக்கதைக்கேற்றபடி படத்தைக் குழப்பமில்லாமல் தொகுத்திருக்கிறார் எடிட்டர் வெங்கட் ராஜன்.

அந்த இரண்டு முத்தக் காட்சிகளை நீக்கிவிட்டிருந்தால், இது ஒரு சாதாரண த்ரில்லர் படம்தான். அவற்றோடு சேர்த்துப் பார்த்தால் 'எரோட்டிக் த்ரில்லர்'. படத்தைக் கடைசியில் சினிமா பாணியில் முடித்தது கொஞ்சம் அதிர்ச்சிதான்.

மன்மத லீலை - லீலைகள்…

 

மன்மத லீலை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மன்மத லீலை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓