Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

பிரியாணி

பிரியாணி,Briyani
26 டிச, 2013 - 15:48 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிரியாணி

தினமலர் விமர்சனம்


உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!


--------------------------------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com

ஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பும், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.

கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி ?

1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா?

2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?

3. போலீஸ் சதியா ?

இந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.


படத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.

கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.

பிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.

ராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.

ஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.

மாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.

உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.


--------------------------------------------------------------------


குமுதம் விமர்சனம்



புட்டி, குட்டி என்று ஜாலியாய் அலையும் இரண்டு நண்பர்கள் ஒரு நாள் சாலையோரக் கடையில் பிரியாணி சாப்பிடும்போது, அவர்களின் வாழ்க்கையே திசை மாறுகிறது. ஒரு வி.ஐ.பி.யின் கொலைப்பழி இருவர் மீதும் விழ, இவர்களையும் காலி பண்ண வில்லன்கள் துரத்த, அப்புறம் என்ன? ஓட்டம், ஓட்டம்தான்!

வெங்கட்பிரபுவின் படம் பொதுவாக எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதுவும்!

சில பல சறுக்கல்களுக்குப் பிறகு கார்த்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். யாரைப் பார்த்தாலும் ஜொள்ளு விட்டு மடக்குவது, நண்பனின் சரக்கையும் சேர்த்து சாப்பிடுவது என்று கலகலக்க வைக்கிறார். அதுவும் எல்லா அழும்பையும் தானே பண்ணிவிட்டு, ஹன்சிகாவிடம் அப்பாவி போல அப்படியே மாற்றிச் சொல்லும் காட்சி (ர)களை!

பிறந்தாலும் வெங்கட்பிரபுவுக்குத் தம்பியாகப் பறக்க வேண்டும்! அதற்காக படம் ஆரம்பிக்கும்போதே அருக்கஞ்சட்டி போல் பிரேம்ஜி வாயைப் பிளப்பதை இவ்ளோ நேரமா காட்டுவது? கார்த்திக்கு இணையாக படம் முழுக்க வருகிறார். கஷ்டப்பட்டு இவர் சேகரிக்கும் காதலிகளையெல்லாம் அஸால்ட்டாக கார்த்தி அள்ளிக் கொண்டு போய்விட, புலம்பியே புன்னகைக்க வைக்கிறார். அந்த புலி (உ) டான்ஸும் ஹி....ஹி...

ஹன்சிகா, வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகி போல மொழுமொழுவென்று வருகிறார். ஆடுகிறார். முறைக்கிறார். மறுபடியும் ஆடுகிறார்.

யாரய்யா அந்த தொடைக்கறி சாரி லெக்பீஸ் ஆன்ட்டி? ஜிலுக்கு போல் ஹஸ்கியாய் கெட்ட வார்த்தைகள் பேசி கெட்ட ஆட்டமும் ஆடுகிறார். தியேட்டரில் ஒருத்தரும் மூச்சு விடலியே! வாழ்க சென்சார்!

இது யுவனின் நூறாவது படம். இசையில் அந்த உற்சாகம் கொப்பளிக்கிறது. ஆனால் ஒரு பாட்டுக்கும் வார்த்தைகள் புரியவில்லை. ஆடியோ கேசட்டுடன் தருவது போல் சினிமா டிக்கெட்டுடனும் பாட்டுப் புத்தகம் ஒன்றை இலவசமாகக் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.

பல இடங்களில் குட்டிக் குட்டி வசனங்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. "போன்னு சொன்னவுடனே விட்டுட்டுப் போகறதுக்கு நான் ஒண்ணும் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லடா ஃப்ரெண்டு.

நாஸரை ஃப்ரிட்ஜ், கார் டிக்கி என்று அடைத்து வைத்த கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

உமா ரியாஸ் கம்பீரம். வில்லியை டக்கென டிரெயினில் தள்ளிவிடும் காட்சி பக்.

கொலையாளி யார் என்று ரசிகர்கள் யூகிக்கக் கூடாது என்பதற்காக ரொம்ப சிரமப்பட்டு சுற்றி வளைத்துக் குழப்பியிருக்கிறார்கள். படம் விட்டு வரும்போது "எவன் ஏன் கொலை பண்ணினான்? புரியலயே? என்ற சந்தேக குரல் காதில் ஒலிக்கிறது.

பிரியாணி - பீஸ் ஜாஸ்தி, சூடு கம்மி!

ஆஹா: வெங்கட்பிரபுவின் விறுவிறு திரைக்கதை

ஹிஹி: க்ளைமாக்ஸ்

குமுதம் ரேட்டிங்: ஓகே.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பிரியாணி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in