ஹிட்லர்
விமர்சனம்
தயாரிப்பு - செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - தனா எஸ்எ
இசை - விவேக் மெர்வின்
நடிப்பு - விஜய் ஆண்டனி, ரியா சுமன், கவுதம் மேனன், சரண்ராஜ்
வெளியான தேதி - 27 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
சினிமாவில் ஒவ்வொருவரும் புதுப்புது கதைகளை தேடிக் கொண்டிருக்க 90களில் வந்த கதைகளைப் போல ஒரு அரசியல் பழி வாங்கல் கதையை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனா.
அஜித் நடித்து வெளிவந்த 'சிட்டிசன்' படத்தின் கதையையே அப்படி, இப்படி மாற்றி இந்த 'ஹிட்லர்' கதையை எழுதியிருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு கிராமமே அழிந்தது. இந்தப் படத்தில் கிராமத்தில் உள்ள பலர் கொல்லப்பட்டார்கள். அதில் பல வில்லன்கள், இதில் ஒரே ஒரு வில்லன், என சில வித்தியாசங்களே.
சென்னைக்கு வந்து நண்பன் அறையில் தங்கி வங்கி வேலைக்குச் செல்கிறார் விஜய் ஆண்டனி. அலுவலகத்திற்கு ரயிலில் பயணிக்கும் போது நாயகி ரியா சுமன்-ஐப் பார்த்ததும் காதல் கொள்கிறார். அவரைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறார். இது ஒரு புறமிருக்க, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் சரண்ராஜ் பல கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற நினைக்கிறார். மக்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக சில வழிகளில் அந்தப் பணத்தை அனுப்புகிறார். ஆனால், அந்தப் பணம் அடையாளம் தெரியாத ஒருவரால் கொள்ளை அடிக்கப்படுகிறது. மேலும், அவருடைய ஆட்கள் சிலரும் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்கை டெபுடி கமிஷனரான கவுதம் மேனன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனிதான் அந்த கொள்ளை, கொலைகாரன் எனத் தெரிய வருகிறது. அவர் ஏன் அப்படி செய்தார், அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கதைதான் கொஞ்சம் பழசு, காட்சிகளாவது புதிதாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அவற்றிலும் அப்படி எதுவுமில்லை. படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் ஆண்டனிதான் அந்த பணத்தை கொள்ளை அடிப்பது, கொலை செய்வது என்பதை படம் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடும். இது போன்ற எத்தனை சினிமா பார்த்திருக்கிறார்கள். ஏதாவது ஒன்று புதிதாக வரும் என்று காத்திருந்தால் கடைசி வரை ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
பொருத்தமில்லாத 'விக்' வைத்த ஹேர் ஸ்டைலுடன் விஜய் ஆண்டனி. இளம் வயது காதலன் போல ஓடி ஓடி காதலிக்கிறார். வழக்கமாக அவருடைய படங்களில் 'உம்' என்று இருப்பவர், இந்தப் படத்தில் கொஞ்சம் சிரித்த முகத்துடன் அந்தக் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். 'பிச்சைக்காரன்' போன்ற புதிய கதையுடன் யார் வந்தாலும் தேடிப் பிடித்து வைத்துக் கொள்வது விஜய் ஆண்டனிக்கு நல்லது.
படத்தில் இருக்கும் ஆறுதலான ஒரு விஷயம் கதாநாயகி ரியா சுமனின் நடிப்பு. பார்க்கக் கொஞ்சம் சீனியர் கதாநாயகி போலத் தெரிந்தாலும் அவரது துறுதுறுப்பான இயல்பான நடிப்பால் காதல் காட்சிகளில் கவர்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் இயக்குனர் இளமைக்குத் திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த அதே கெட்ட அரசியல்வாதியாக சரண்ராஜ். இத்தனை வயதிலும் துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருடைய தம்பியாக இயக்குனர் தமிழ். அண்ணனை விட தம்பிக்குத்தான் அதிகக் காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர்.
டெபுடி கமிஷனராக கவுதம் மேனன். அவருடைய வழக்கமான பேச்சு, பார்வை என போலீஸ் அதிகாரிக்குரிய அதிகாரத்தைக் காட்டுகிறார்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஒன்று கூட சரியாக அமையவில்லை. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஒரு கவர்ச்சிப் பாடல் நடனத்தை வைத்து 90ஸ் கதைதான் என்பதை உறுதி செய்கிறார்கள். சண்டை இயக்குனர் முரளி கடுமையாக உழைத்திருக்கிறார். நவீன்குமார் ஒளிப்பதிவில் ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு.
படத்தின் சஸ்பென்ஸுக்குக் காரணமான அந்த கிராமத்து விபத்து, அது சம்பந்தப்பட்ட காட்சிகள் உருக வைக்கின்றன. இன்னும் இப்படியான அடிப்படை வசதிகளைப் பெறாமல் பல இடங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை படம் முழுவதும் அடித்தளமாக இயக்குனர் கடத்தியிருக்கலாம். ஆரம்பத்தில் காதல் காட்சிகளை எல்லாம் காட்டிவிட்டு கிளைமாக்சில் மட்டுமே அந்த வலியை மீண்டும் சொல்ல வருகிறார். அழுத்தமான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்க வேண்டிய படம், மிஸ் ஆகிவிட்டது.
ஹிட்லர் - 'சாரி'அதிகாரி…