
ஏஜன்ட் கண்ணாயிரம்
விமர்சனம்
தயாரிப்பு - லபிரின்ந்த் பிலிம்ஸ்
இயக்கம் - மனோஜ் பீதா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - சந்தானம், ரியா சுமன்
வெளியான தேதி - 25 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தெலுங்கில் 'ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' என்ற ஒரு வெற்றிப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறேன் என இப்படி செய்திருக்கக் கூடாது. தான் நாயகனாக நடிக்கும் படத்தை எதற்குப் பார்க்க வருவார்கள் என படத்தின் இயக்குனருக்குத்தான் தெரியவில்லை என்றால் சந்தானத்திற்குக் கூடவா தெரியாது.
ஒரு த்ரில்லர் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல், சென்டிமென்ட் படமாகவும் இல்லாமல் எந்த வகைப் படம் என நாமே ஒரு பெயரைச் சொல்லிக் கொள்ளும்படிதான் படம் இருக்கிறது. இயக்குனர் மனோஜ் பீதா, சந்தானத்தை முற்றிலுமாக மாற்றி ஒரு 'டார்க் காமெடி' படத்தைக் கொடுக்கிறோம் என அதீத நம்பிக்கையுடன் இருந்திருப்பார் போலிருக்கிறது.
கோவையில் தனியார் டிடெக்டிவ் ஆக இருப்பவர் சந்தானம். தனது அம்மா மரணம் அடைந்ததால் பக்கத்தில் இருக்கும் சூலூருக்குச் செல்கிறார். சொத்து விவகாரம் காரணமாக அங்கேயே சில நாட்கள் தங்க வேண்டி இருக்கிறது. அங்கு அடுத்தடுத்து சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் சந்தானம். அவருக்குத் துணையாக டாகுமெண்டரி படமெடுக்க வரும் கதாநாயகி ரியா சுமன் உதவியாக இருக்கிறார். மரணங்களின் மர்மத்தை சந்தானம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி 'குளு குளு' என்ற படத்தில் நடித்தார் சந்தானம். அந்தப் படத்திற்கான ரிசல்ட் என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதே போன்றதொரு சோதனை முயற்சியில் இந்தப் படத்திலும் இறங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எந்தப் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானாரோ?. மீண்டும் தனது பழைய பாதையைத் தேர்வு செய்வதே சந்தானத்திற்கு நல்லது. ஒரு சில இடங்களில் வரும் சந்தானம் டைப் காமெடி தவிர படம் முழுவதும் தீவிரமான துப்பறியும் நிபுணராக வலம் வருகிறார் சந்தானம்.
சந்தானத்துடன் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் டாகுமெண்டரி படமெடுப்பவராக கதாநாயகி ரியா சுமன். கேமரா லைட்டை ஆன் பண்ணாமல் கூட படமெடுக்கிறார், கேமராவையாது ஆன் செய்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
மற்ற கதாபாத்திரங்களில் புகழ், ராமதாஸ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆதிரா, குரு சோமசுந்தரம், இந்துமதி என பல நடிகர்கள், நடிகைகள். அவ்வப்போது வந்து போகிறார்கள்.
படத்தின் மேக்கிங்கில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா அதற்காக இயக்குனருக்குக் கண்ணாக இருந்திருக்கிறார்கள்.
புதுமுக இயக்குனர்களுக்கும், வளரும் இயக்குனர்களுக்கும் ஒரே ஒரு ஆலோசனை. உங்களுக்குப் பிடித்த விதத்தில் படங்களை எடுப்பதை விட, ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் படங்களை எடுங்கள்.
ஏஜன்ட் கண்ணாயிரம் - ஏன் கண்ணாயிரம் ? ஏன் ?
ஏஜன்ட் கண்ணாயிரம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஏஜன்ட் கண்ணாயிரம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
- இசை அமைப்பாளர்