நடிப்பு - குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், விசாகன், சாந்தினி, அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர்
இயக்கம் - மனோஜ் பீதா
இசை - சாம் சி.எஸ்
தயாரிப்பு - லாபிரிந்த் பிலிம்ஸ்
வெளியான தேதி - 7 செப்டம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 41 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தவிதமான முன் அனுபவம் இல்லாதவர்களும் திரைப்படங்களைத் தயாரிக்கவும், இயக்கவும் வந்துவிட்டார்கள்.
குறும்படங்களை இயக்கிய சிலர், பெரிய திரையில் படங்களை இயக்கி வெற்றி பெற்றதும், சினிமாவுக்கான இலக்கணமும் மாறிவிட்டது. பெரிய நடிகர்களை மட்டுமே மையப்படுத்தி வெளிவந்த திரைப்படங்களைக் காட்டிலும், அவர்கள் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி வெளிவந்த திரைப்படங்களும் வெற்றி பெற்றன.
அது ஆரோக்கியமானது தான் என்றாலும் அதுவே எதிர்மறை விளைவுகளையும் ஆரம்பித்து வைத்துவிட்டது. ஒரு வரையறைக்குள் கட்டுப்படாமல் எல்லைகளை மீறிய பல படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.
அப்படி வெளிவந்துள்ள ஒரு படம்தான் 'வஞ்சகர் உலகம்'. இந்தப் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, நியூயார்க் திரைப்பட அகாடமியில் பயின்றவராம். அதனால்தானோ என்னவோ மக்களுக்கு நெருக்கமான படத்தைக் கொடுக்காமல் வஞ்சம் செய்துவிட்டார் போலிருக்கிறது.
வஞ்சகர்கள் சூழ்ந்த 'கேங்ஸ்டர்' உலகம் பற்றிய கதை. ஆனால், வஞ்சகர்கள் என்றால் ரவுடிகள் மட்டுமல்ல, பசுத்தோல் போர்த்திய பலரும் வஞ்சகர்களாகவே இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார். சொல்ல வந்த விஷயம் ஓகே, ஆனால், அதை சொல்லிய விதத்தில் சுற்றி வளைத்து குழப்பியிருக்கிறார் இயக்குனர்.
ஜெயப்பிரகாஷ் மனைவியான சாந்தினி அவருடைய வீட்டில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். சந்தேகத்தின் பேரில் எதிர் வீட்டிலிருக்கும் சிபி புவன சந்திரன் கைது செய்யப்படுகிறார். அதே சமயத்தில் சிபியுடன் வேலை பார்க்கும் டிவி நிருபரான விசாகன் பிரபல ரவுடியான குருசோமசுந்தரம், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். போலீஸ் ரெக்கார்டில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் குருசோமசுந்தரம் எப்படி உயிரோடு வந்தார் என்ற விசாரணையும் மறுபக்கம் அவரை என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரி அழகம்பெருமாள் மூலமாகவும் தொடர்கிறது. கடைசியில் உண்மைக் கொலைகாரனை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் கொஞ்சம் குழப்பமான திரைக்கதை கொண்ட இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.
சினிமா என்பது மக்களுக்கான சாதாரண ரசிகரும் ரசிக்கும் விதமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் படித்துவிட்டதால் ரசிகர்களைக் குழப்பும் விதத்தில் எல்லாம் எடுக்கக் கூடாது என்பதை இயக்குனர் மனோஜ் இனி புரிந்து கொள்வார்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சமும் இருக்கிறது. அந்தந்த கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள், நடிகைகள் அவர்கள் கதாபாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள். குறிப்பாக சிபி புவன சந்திரன், சினிமாத்தனமான முகத்துடன் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். இன்றைய தலைமுறை இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.
திருமணமானாலும் வேறொரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் சாந்தினி. இம்மாதிரியான கதாபாத்திரத்தில் அதிகம் பேசாமல் அவருடைய பெரிய கண்களால் பேச வைத்திருக்கிறார்.
'ஜோக்கர்' பட நாயகன் குருசோமசுந்தரம் அதிர வைக்கும் ரவுடியாக நடித்திருக்கிறார். அவரை ரவுடியாக ஏற்றுக் கொள்ள முடியாதுதான், ஆனாலும், படத்திலேயே அதற்கு ஒரு வசனத்தை வைத்து சரிக்கட்டி விடுகிறார்கள். பிளாஷ்பேக் காட்சிகளில் கல்லூரி மாணவராக மிரள வைக்கிறார்.
படத்தின் மற்றொரு நாயகன் என சொல்லுமளவிற்கு படம் முழுவதும் வருகிறார் அழகம் பெருமாள். விசாகன் சிக்கனமாக நடித்திருக்கிறார். அனிஷா அம்புரோஸுக்கு பெரிய வேலையில்லை. வழக்கமாக கத்திக் குவித்து ஓவர் ஆக்டிங் செய்யும் ஜான் விஜய் அடக்கி வாசித்திருக்கிறார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் நாயகன் கண்டபடி கெட்ட வார்த்தை பேசுகிறார். இவற்றை எல்லாம் சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை. 'ஏ' சர்டிபிகேட் படம் என்பது கூட படத்தின் கதைக்காகத்தான் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. நமது கலாச்சாரத்திற்கு விரோதமான ஒரு படம் தான். ஆனால், உச்சநீதிமன்றமே நேற்றைய தீர்ப்பில் இதை அனுமதிக்கலாம் என்று சொன்ன பிறகு சட்டரீதியாகக் கூட இந்தப் படத்தின் மையக் கருத்தை விமர்சிக்க முடியாது. இயக்குனரே ஒரு பொறுப்புடன் கதையையும், காட்சிகளையும் அமைத்திருக்கலாம்.
படம் முழுவதுமே 'குடி மற்றும் புகை'க்கு எதிரான எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுகிறது. போதாக் குறைக்கு போதைப் பொருள் காட்சி வேறு. படம் இதோ முடியும், அதோ முடியும் என்று பார்த்தால் போகிறது, போகிறது, போய்க் கொண்டே இருக்கிறது.
சாம் சிஎஸ், இந்துக்கள் புனிதமாகக் கருதும் சில இசையை ஆபாசமான காட்சிகளுக்கு பின்னணி இசை, பாடலாக அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அவ்வப் போது நல்ல சினிமா வரும் தமிழ்த் திரையுலகத்தில் இப்படிப்பட்ட படங்களும் வரத்தான் செய்யும்.
வஞ்சகர் உலகம் - குற்றம்