தி வாரியர்
விமர்சனம்
தயாரிப்பு - ஸ்ரீ சீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்
இயக்கம் - லிங்குசாமி
இசை- தேவிஸ்ரீபிரசாத்
நடிப்பு - ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா
வெளியான தேதி - 14 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 2/5
தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள மற்றுமொரு போலீஸ் - ரவுடி கதை. இயக்குனர் லிங்குசாமி இந்தப் படத்திற்காக புதிய கதையை எல்லாம் யோசிக்கவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய 'வேட்டை' படத்தின் கதையில் மாதவன், ஆர்யா அண்ணன் தம்பியாக நடித்திருப்பார்கள். அதில் தம்பியை நீக்கிவிட்டு மாதவன் கேரக்டரை மட்டும் கொஞ்சம் மாற்றி எடுத்ததுதான் இந்த 'வாரியர்' கதை. அவர் இதற்கு முன்பு இயக்கிய 'ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான்' என ஒவ்வொரு படத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தேவையான அளவு இதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்துள்ள படம். இதற்கு முன்பு லிங்குசாமி இயக்கிய மேலே சொன்ன படங்களைப் பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. புதுக் கதை என நினைத்து இந்தப் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
படத்தை தெலுங்கில் மட்டும் தயாரித்து, தமிழில் வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டு மொழிகளில் எடுத்துள்ளோம் எனச் சொல்லி தெலுங்கு வாடையுடன் மட்டுமே எடுத்து தமிழ் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்கள். படத்தின் நாயகன் ராம் பொத்தினேனி பைக்கில் வரும் போது வண்டி என் முதலில் ஆந்திரா பதிவெண்ணாகவும், அடுத்த தெருவில் தமிழ்நாடு பதிவெண்ணாகவும், அதற்கடுத்த தெருவில் மீண்டும் ஆந்திரா பதிவெண்ணாவுகம் மாறி மாறி வருகிறது. அந்த அளவிற்குத்தான் இயக்குனர் படத்தை கவனித்திருக்கிறார். மதுரை என்கிறார்கள், பின்னணியில் தெலுங்கு போர்டுகள் எல்லாம் சர்வ சாதாரணமாகத் தெரிகிறது. மதுரை என்று சொல்லிவிட்டு ஆந்திராவின், கர்னூல் நகரை மதுரை என சொல்லி ஏமாற்றுவது சரியா ?. தெலுங்குப் படமாகவும் இல்லாமல், தமிழ்ப் படமாகவும் இல்லாமல் ஏமாற்றுகிறது படம்.
மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஆக வேலைக்குச் சேர்கிறார் நாயகன் ராம் பொத்தினேனி. மதுரையை ஆட்டிப் படைக்கும் தாதாவான ஆதிக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. ராமை பலமாக அடித்து ஊரைவிட்டே அனுப்புகிறார் ஆதி. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு டிஎஸ்பி ஆக திரும்புகிறார் ராம். ஆதியின் கொட்டத்தை அடக்கி, மதுரையை அமைதிப்பூங்காவாக மாற்ற களம் இறங்குகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தெலுங்கில் சில பல வெற்றிப் படங்களில் நடித்த ராம் பொத்தினேனி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். இப்படியான கதை, கதாபாத்திரங்களில் நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்தால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம்.
லிங்குசாமி படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் மட்டும் கலகலப்பாக இருக்கும். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். 'உப்பெனா' தெலுங்குப் படத்தில் அவ்வளவு அழகாக இருந்தவரா இவர் என யோசிக்க வைக்கிறார். மேக்கப்பே சரியில்லை. ஆனாலும், தனது துறுதுறு நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு ஆயிரம் வில்லன்கள் செய்த அதே ரவுடி கதாபாத்திரத்தில ஆதி. கிடைக்கும் கேப்களில் மிரட்டலை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நதியாவுக்கு மட்டும்தான் ஓரளவுக்கு வாய்ப்பு. எம்.குமரனில் பார்த்த நதியாவா இவர் என யோசிக்க வைக்கிறார். பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கும் வயதாகும் தானே.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் 'புல்லட், விசில்' ஆகிய இரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. மதுரை என்று சொல்லப்படும் கர்னூல் நகர் என காட்ட மகேஷ்பாபு நடித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'சரிலேரு நீக்கெவரு' படத்திற்காக போடப்பட்ட அரங்கையே இந்தப் படத்திற்காகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலும்.
போலீசுக்கும், ரவுடிகளுக்கும் சினிமாவில் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்…தமிழ்ப் படம் என தெலுங்குப் படத்தைக் காட்டும் இயக்குனர்களே.
வாரியர் - 'சாரி'யர்…