3

விமர்சனம்

Advertisement

சண்டக்கோழி 2 - விமர்சனம்

நடிப்பு - விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர்
இயக்கம் - லிங்குசாமி
இசை - யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி
வெளியான தேதி - 18 அக்டோபர் 2018
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 3/5

2005-ம் ஆண்டு வந்த 'சண்டக்கோழி' படத்தின் தொடர்ச்சி இந்த 'சண்டக்கோழி 2' கிடையாது. வேறு கதையுடன் இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் திருவிழாவைச் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழி வாங்கல், பாசம், காதல் என கலந்துகட்டி கமர்ஷியல் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. 'அஞ்சான்' படத்தின் அச்சத்திலிருந்து அம்சமாகவே இந்த 'சண்டக்கோழி 2' படத்தில் அவர் மீண்டுவிட்டார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையால் ஊர் திருவிழா நின்றுவிடுகிறது. அதை எப்படியாவது மீண்டும் நடத்த வேண்டும் என ஊர் பெரிய மனிதர் ராஜ்கிரண் முயற்சி எடுக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனைப் பறி கொடுத்த வரலட்சுமி, தன் கணவனைக் கொன்றவர்களின் வம்சத்தையே அழிக்க சபதமெடுக்கிறார். அந்த குடும்பத்தை சேர்ந்த பலரையும் வெட்டிக் கொல்கிறார். வரலட்சுமியின் பழிவாங்கலில் மிஞ்சிய ஒருவரைக் காப்பாற்றி அந்தக் குடும்பத்திற்கு வாக்கு கொடுத்து ஆதரவாக இருந்து அவரைப் படிக்க வைக்கிறார் ராஜ்கிரண். மீண்டும் திருவிழா நடப்பதால் மிஞ்சிய அந்த ஒருவரை வரலட்சுமியும் அவரது ஆட்களும் கொல்லத் துடிக்கிறார்கள். அதில் ராஜ்கிரண் காயப்பட்டு, படுத்த படுக்கையாகிறார். அப்பாவின் வாக்கை அவர் மகன் விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த மாதிரி ஆக்ஷன் கதாபாத்திரம் விஷாலுக்கு 'அல்வா' சாப்பிடுவது போல. அடித்துத் துவைத்து எதிரிகளை பந்தாடுகிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் வேகம் இன்னும் அதிகம். அவர் திரையில் வந்தாலே எப்போது அடிப்பார், எப்படி அடிப்பார் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. விஷாலின் சண்டைக் காட்சிக்காக ஸ்டன்ட் இயக்குனர்கள் தனி கவனம் எடுத்து உழைத்திருக்கிறார்கள்.

படத்தில் கீர்த்தி அறிமுகம் காட்சியில் தியேட்டரில் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகம் ஒலிக்கிறது. கிராமத்துப் பெண்ணாக மதுரைத் தமிழில் பேசி கலகலக்க வைக்கிறார் கீர்த்தி. நடிக்கிறார் என்று தெரிந்தாலும் அதையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். விஷாலை யார் என்று தெரியாமல் அவரைக் கலாய்க்கும் காட்சிகளில் ஓவராகத்தான் சலம்புகிறார். என்ன இருந்தாலும் முதல் பாகத்தின் விஷால் - மீரா ஜாஸ்மின் கெமிஸ்ட்ரியை இந்த விஷால் - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் மிஞ்ச முடியாது.

வழக்கம் போல அதே மரியாதையான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண். அவருடைய தோற்றமும், பேச்சும் அதே கம்பீரம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிரட்டலான நடிகை வேண்டும் என தேடுபவர்கள் இனி அவர்களது பட்டியலில் வரலட்சுமியையும் சேர்த்துக் கொள்ளலாம். பேச்சிலும், மிரட்டல் பார்வையிலும் வரலட்சுமியின் வில்லத்தனம் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

நகைச்சுவைக்கு என்று தனியாகக் காட்சிகள் இல்லை. ஆரம்பத்தில் அந்த வேலையை கீர்த்தி சுரேஷ் செய்துவிடுகிறார். முனிஷ்காந்த், கஞ்சா கருப்பு அவர்கள் பங்கிற்கு கொஞ்சமே கொஞ்சம் செய்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'கம்பத்துப் பொண்ணு...' ரசிக்க வைக்கிறது. ஒரு இனிமையான டூயட் பாடல் ஒன்றைப் போட்டு ஹிட்டாக்கியிருக்கலாம். பின்னணி இசையில் கிராமிய மணம் வீசுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையில் ஆவேசம் இன்னும் கலந்து வருகிறது. சக்திவேல் ஒளிப்பதிவு திருவிழா காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறது.

வழக்கமான பழி வாங்கும் ஆக்ஷன் கதைதான். பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாத திரைக்கதை. ஆக்ஷனில் மட்டுமே விறுவிறுப்பும், பரபரப்பும் அதிகம் இருக்கிறது. முதல் பாகத்தில் இருந்த ஒரு குதூகலம், உற்சாகம் இந்த இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங். இருப்பினும் ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

சண்டக்கோழி 2 - 'பறபற'ப்பு

 

பட குழுவினர்

சண்டகோழி 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓