கொன்றால் பாவம்,Kondraal Paavam

கொன்றால் பாவம் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஐன்பேக் ஸ்டுடியோஸ்
இயக்கம் - தயாள் பத்மநாபன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப்
வெளியான தேதி - 10 மார்ச் 2023
நேரம் - 1 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 3/5

மலையாளத் திரைப்படங்களில் வருவது போன்ற கதைகளும், கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களும் தமிழிலும் வருவதில்லை என்ற ஒரு குறையை இந்தப் படம் தீர்த்து வைக்கிறது. இந்த மாதிரியான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வந்தால்தான் ஹீரோக்களின் பின்னால் இருக்கும் தமிழ் சினிமா கதைகளை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்.

ரூபர்ட் ப்ரூக் என்பவர் 1900களின் துவக்கத்தில் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கன்னடத்தில் ஒரு நாடகத்தை உருவாக்கியிருந்தார்கள். அந்த நாடகத்தை மையமாக வைத்து கன்னடத்தில் 2018ல் எடுக்கப்பட்ட படம் 'ஆ கரால ராத்ரி'. தயாள் பத்மநாபன் இயக்கிய அந்தப் படத்தை அவரே பின்னர் தெலுங்கில் 2020ல் 'அனகனகா ஓ அதிதி' என்ற படமாக ரீமேக் செய்தார். அதைத் தற்போது தமிழில் 'கொன்றால் பாவம்' என்ற பெயரில் அவரே இயக்கியிருக்கிறார். தமிழரான தயாள் பத்மநாபன் கன்னடத்தில் பல படங்களை இயக்கியவர். தமிழில் இதுதான் அவரது முதல் படம்.

தர்மபுரி அருகே 1981ல் நடக்கும் கதை. சார்லி அவரது மனைவி ஈஸ்வரி ராவ், அவர்களது மகள் வரலட்சுமி என கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசித்து வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம். முதிர்கன்னியாக இருக்கிறார் வரலட்சுமி. ஊர் ஊராகச் சுற்றித் திரிகிறேன் என்று சொல்லி சந்தோஷ் பிரதாப் அவர்களது வீட்டில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டு தங்குகிறார். சார்லியின் ஏழ்மையைப் பார்த்து அவரிடம் இருக்கும் பணம், நகைகளைத் தர நினைக்கிறார். ஆனால், சார்லி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் சந்தோஷைக் கொன்று அந்த பணம், நகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வரலட்சுமி நினைக்கிறார். அவரது பெற்றோர் மனதையும் மாற்றுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி மட்டும் கொஞ்சம் மெதுவாக, அழுத்தமில்லாத காட்சிகளால் நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதிதான் மொத்த படமே. சந்தோஷைக் கொல்ல நினைத்தபின் வரலட்சுமியால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்புடன் கொடுத்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி நாம் சிறிதும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதுதான் படத்தைத் தாங்கியும் நிற்கிறது.

தமிழில் அழுத்தமான பல கதாபாத்திரங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமாரை தமிழ் சினிமா உலகம் இதுவரை சரியாகப் பயன்படுத்தாமலே இருக்கிறது. அவர் தெலுங்குப் பக்கம் சென்று அங்கு பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து அவரது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தைக் கொடுத்து அவரை கதையின் நாயகியாக்கி இந்தப் படத்தை அவரைப் பற்றி பேச வைத்திருக்கிறார் இயக்குனர் தயாள். இதற்கு முன்பு கதாநாயகியாக வரலட்சுமி பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தை அவரது முக்கிய படங்களில் முதல் படமாக சொல்லும்படியான படமாக அமைந்திருக்கிறது.

சார்லி, ஈஸ்வரி ராவ் சிறந்த குணச்சித்திர நடிகர்கள். அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துபவர்கள். இந்தப் படத்தில் இருவரது நடிப்பும் அவர்களது அனுபவத்தைப் பேசியுள்ளது. சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரம் மீது நமக்கு பரிதாபம் வருவதே அவரது நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி.

சாம் சிஎஸ் பின்னணி இசை, செழியன் ஒளிப்பதிவு படத்திற்கு சரியான பலமாக இருக்கிறது. ஒரே ஒரு வீட்டிற்குள் இரவு நேரக் காட்சிகளுக்கான லைட்டிங்குகளில் தனி கவனம் செலுத்தி ஒரு இயல்புத் தன்மையை உருவாக்கியிருக்கிறார் செழியன்.

ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான, அதிர்ச்சியான ஒரு திரைப்படம் இது. பணம், பொன், மண் மீதான பேராசை ஒருவரது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் என்ன இந்தக் காலத்திலும் இப்படியான சில விஷயங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கொன்றால் பாவம் - விதி வலியது…

 

கொன்றால் பாவம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கொன்றால் பாவம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓