தி ரோட்,The Road
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஎஎ சினிமா பிரைவேட் லிட்
இயக்கம் - அருண் வசீகரன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - த்ரிஷா, ஷபீர், மியா ஜார்ஜ்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

ஒவ்வொரு படத்திற்கும் கதைக்களம் என்பது மிகவும் முக்கியமானது. இதுவரையில் ஒரு சாலையை கதைக்களமாக வைத்து எந்தப் படமும் வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். புதுமையான கதையுடன், ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயற்சித்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

கணவர் சந்தோஷ் பிரதாப், ஒரு மகன் என மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருக்கிறார் த்ரிஷா. இரண்டாவதாக தாய்மை அடைகிறார். மகனின் பிறந்தநாளைக் கொண்டாட அவரால் செல்ல முடியாத நிலையில் கணவரும், மகனும் காரில் கன்னியாகுமரி செல்கிறார்கள். செல்லும் வழியில் மதுரை அருகே விபத்தில் சிக்கி இருவரும் இறந்து போகிறார்கள். அந்த விபத்தின் பின்னணியில் ஏதோ ஒரு சதி இருக்கிறது என நினைக்கிறார் த்ரிஷா. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோழி மியா ஜார்ஜுடன் இறங்குகிறார். அது என்ன சதி என்பதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

த்ரிஷா தனி கதாநாயகியாக நடித்த படங்கள் அவருக்கு இதுவரையில் குறிப்பிடத்தக்க படங்களாக அமையவில்லை என்பதே உண்மை. ஆனால், இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது. கணவனையும், மகனையும் பறி கொடுத்தாலும் சோர்ந்துவிடாமல் அந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். போலீஸ் செய்ய வேண்டிய வேலைகளை த்ரிஷாவே செய்து முடிக்கிறார். த்ரிஷாவின் அடுத்த தனி கதாநாயகி படங்களுக்கான பாதையை இந்தப் படம் ஆரம்பித்து வைத்திருக்கிறது.

த்ரிஷா கதை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, அதற்கு இணையாக ஷபீர் பற்றிய கதை ஒன்றும் போய்க் கொண்டிருக்கிறது. அதை திரைக்கதை யுத்தி என இயக்குனர் நினைத்திருந்தால் அதுதான் இந்தப் படத்தை பின்னோக்கி இழுத்துவிட்ட விஷயமாகவும் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே பிளாஷ்பேக்கில் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதிலும் கல்லூரியில் வேலை பார்க்கும் ஷபீரை மாணவி ஒருவர் காதலிப்பதை சுருக்கமாகக் காட்டி முடித்திருக்கலாம்.

த்ரிஷாவின் தோழியாக மியா ஜார்ஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். த்ரிஷாவின் கணவராக ஓரிரு காட்சிகளுடன் போய்விடுகிறார் சந்தோஷ் பிரதாப். ஷபீர் அப்பாவாக வேலராமமூர்த்தி கண்கலங்க வைக்கிறார். காரில் விபத்து ஏற்படுத்தி கொள்ளை அடிக்கும் செம்மலர் அன்னம் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இருக்கலாம்.

திரில்லர் படங்கள் என்றாலே சாம் சிஎஸ் பின்னணி இசை தனியாகத் தெரிந்துவிடும். இந்தப் படத்திலும் தனது இசையால் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார். இரவு நேரக் காட்சிகள், சாலை காட்சிகள் ஆகியவற்றில் பரபரப்பாகப் பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேஜி வெங்கடேஷ்.

பரபரப்பாக ஆரம்பமாகும் படம் இடையிடையே தொய்வை ஏற்படுத்தி பின் வேகமாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின் இவர்களை வில்லனாக்கினால் திருப்பமாக இருக்கும் என நினைத்து கோட்டை விட்டிருக்கிறார்கள். இவர்கள்தான் வில்லன் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தாலும் அதில் எந்த பரபரப்பும் இல்லாமல் போய்விடுகிறது. இடைவேளைக்குப் பின் வரும் திரைக்கதையை மாற்றி யோசித்திருந்தால் பெரிய வெற்றிப்படமாகி இருக்கும்.

தி ரோட் - ஹைவே வித் ஸ்பீட் பிரேக்கர்ஸ்

 

தி ரோட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தி ரோட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓