3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மினி ஸ்டுடியோ
இயக்கம் - ஆதிக் ரவிச்சந்திரன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா
வெளியான தேதி 15 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 3/5

டைம் டிராவல், அதாவது எதிர்காலத்திற்குச் செல்வது, நிகழ்காலத்திற்குப் போவது என நம்ப முடியாத கதையை வைத்துக் கொண்டு சுவாரசியமாகச் சொன்ன படங்கள் ஹாலிவுட்டில் நிறையவே வந்திருக்கின்றன. தமிழிலும் இதுவரை ஐந்தாறு படங்கள் வந்துள்ளன. ஆனால், 'கேங்ஸ்டர்' கதையுடன் ஒரு டைம் டிராவல் படம் என்பது இந்திய சினிமாவுக்கும் புதியதுதான்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சுவாரசியமான ஒரு படத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு பக்கபலமாக விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

டெலிபோன் வைத்து டைம் டிராவல் மிஷின் ஒன்றை 1975ல் கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். அதை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தபின் விபத்தில் மரணமடைகிறார். அவருடைய கார் பல வருடங்களாக ரிப்பேருக்காக மெக்கானிக்காக இருக்கும் விஷாலிடம் இருக்கிறது. ஒரு நாள் அந்தக் காரில் இருந்த டைம் மிஷினை விஷால் உபயோகிக்க நேருகிறது. 70களில் பிரபல ரவுடியாக இருந்த அவருடைய அப்பா மீது மிகுந்த வெறுப்புடன் இருப்பவர் விஷால். அந்த டைம் மிஷின் மூலம் தன் அப்பா, அவரும் விஷால்தான், ரவுடியாக இருந்தாலும் நல்லவர் என்பதை உணர்ந்து கொள்கிறார். அப்பாவைக் கொன்றது அவருடைய நெருங்கிய நண்பரான எஸ்ஜே சூர்யா என தெரிய வருகிறது. அப்போது கொல்லப்பட்ட தனது அப்பாவை மீண்டும் உயிருடன் மீட்கிறார் விஷால். அதனால், இப்போது மெக்கானிக்காக இருக்கும் விஷால் இடத்தில் அவரது அப்பாவைக் கொன்ற எஸ்ஜே சூர்யா மகன், இவரும் எஸ்ஜே சூர்யாதான், மெக்கானிக்காக மாறுகிறார். மகன் எஸ்ஜே சூர்யாவுக்கு டைம் மிஷின் பற்றி தெரிய வர அவர் மீண்டும் விஷால் அப்பாவைக் கொல்ல முயற்சிக்கிறார். இந்தப் போட்டியில் யார் யாரைக் கொன்றார்கள், யார் வாரிசு உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

டெலிபோன் மூலம் டைம் டிராவல் என்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அதை வைத்து 1975க்கும் 1995க்கும் இடையே திரைக்கதை மாறி மாறி வருகிறது, போகிறது. மிகவும் கவனமுடன் பார்த்தால்தான் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் புரியும். அதைக் குழப்பமில்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

அப்பா ஆண்டனி, மகன் மார்க் என இரண்டு வேடங்களில் விஷால். மகன் மார்க் கார் மெக்கானிக்காக எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கிறார். ஆனால், அப்பா ஆண்டனி அதிரடியான ரவுடியாக இருக்கிறார். மகனை விட அப்பாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது.

அப்பா ஜாக்கி, மகன் மதன் என இரண்டு வேடங்களில் எஸ்ஜே சூர்யா. இரண்டு கதாபாத்திரங்களிலும் ஆர்பாட்டமாய் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக 1975 கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிகவும் அமர்க்களம். கொஞ்சம் சத்தமாகப் பேசுவதை மட்டும் குறைத்திருக்கலாம். இருந்தாலும் 70களில் அப்படி நாடகத்தனமாகப் பேசுவது அந்தக் கால சினிமாவில் இருந்ததால் அதை ரசிக்க முடிகிறது.

விஷால், சூர்யா இருவர் மட்டுமே மொத்த படத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வதால் மற்றவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். மகன் விஷாலின் ஜோடியாக ரித்து வர்மா, சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வதோடு அவர்கள் வேலை முடிந்துவிடுகிறது.

ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருந்தாலும் பாடல்களில் ஏமாற்றியிருக்கிறார். 'ரெட்ரோ' பாடல்களில் கொஞ்சம் முயற்சித்து ஹிட் கொடுத்திருக்கலாம். 1975, 1997 என இரண்டு காலகட்டங்கள் என்பதால் அந்தக் காலங்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் கலை இயக்குனர் ஆர்கே விஜயமுருகன் கடுமையாக உழைத்திருக்கிறார். அதை அருமையாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அபிநந்தன் ராமானுஜம். படத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடிட் செய்திருக்கிறார் விஜய் வேலுக்குட்டி.

டைம் டிராவலை சம்பந்தப்படுத்திய காட்சிகள் மட்டுமே படத்தில் இருக்கிறது. மற்றபடி காதல், சென்டிமென்ட், காமெடி அவற்றிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. படம் முழுவதுமே காது கிழியும் அளவிற்கு ஒரு சத்தம் ஆக்கிரமிக்கிறது. தியேட்டரைவிட்டு வெளியே வந்தபின் டிராபிக் சத்தங்கள் கூட அமைதியாக இருக்கிறது. அந்த அளவிற்கு தியேட்டருக்குள் சத்தம் அதிகம்.

மார்க் ஆண்டனி - அறுபது மார்க்…

 

மார்க் ஆண்டனி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மார்க் ஆண்டனி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓