பொம்மை,Bommai

பொம்மை - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஏஞ்சல் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராதாமோகன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 16 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 2/5

உணர்ச்சிக்குவியலாய் வந்த 'மொழி, அபியும் நானும்' படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கிய படமா இது என படம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே நமக்குள் கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நாடகத்தனமான படத்தை ராதாமோகன்தான் இயக்கியிருப்பாரா என்ற சந்தேகமும் வருகிறது.

'பொம்மையைக் காதலித்தாலும் அது காதல் தான்' என ஒரு இடத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் வருகிறது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ராதாமோகன்?.

சிறு வயதில் தனது எதிர்வீட்டுத் தோழியைத் தொலைத்தவர் எஸ்ஜே சூர்யா. அதனால் மனதளவில் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. ஓவியத் திறமை உள்ளதால், ஜவுளிக்கடை பொம்மைகள் செய்யும் ஒரு கம்பெனியில் பொம்மைகளை கலை நயத்துடன் உருவாக்கும் வேலையைச் செய்து வருகிறார். ஒரு முறை அவரது சிறு வயது தோழிக்கு கன்னத்தில் பெரிய மச்சம் இருப்பது போலவே ஒரு பொம்மை அவரிடம் வருகிறது. அதை முழுமையாக வடிவமைத்து பார்த்தபின் அந்த பொம்மையிடம் மனதைப் பறி கொடுக்கிறார். அந்த பொம்மையும் அவருக்கு ஒரு உயிராகவே தெரிகிறது. உயிர் பெற்று வந்த அந்த பொம்மையாக பிரியா பவானி சங்கர். கம்பெனி சூப்பர்வைசர் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்கிறார். அதனால், கோபமடையும் எஸ்ஜே சூர்யா, அந்த சூப்பர்வைசரைக் கொன்றுவிட்டு, பொம்மை இருக்கும் அந்த கடைக்கே வேலைக்குச் சேர்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'பொம்மை' எனப் படத்திற்குப் பெயர் வைத்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களையும் இரண்டரை மணி நேரம் ஒரு 'பொம்மை' போலவே உட்கார வைத்துவிட்டார்கள். எந்த ஒரு காட்சியும் நம்மிடம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சூர்யாவும், பிரியா பவானியும் இரண்டரை மணி நேரத்தில் இரண்டு மணி நேரமாகப் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தனக்கு நடிக்கத் தெரியும் என அடிக்கடி 'மோனோ ஆக்டிங்' போல நடித்து, நடித்துத் தள்ளுகிறார் சூர்யா. 'மாநாடு' படத்தில் மிரட்டிய சூர்யாவா இது என ஒரு கட்டத்தில் சந்தேகமே வந்துவிடுகிறது. தமிழ் சினிமா உலகே, 'சைக்கோ' கதாபாத்திரங்களுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுங்கள்.

ஒரு கதாபாத்திரம் நம்மை உருக வைக்க வேண்டும் என்றால் அக்கதாபாத்திரத்தின் மீது நமக்கு அனுதாபம் வர வேண்டும். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா மீது அப்படி எந்த ஒரு அனுதாபமும் வரவில்லை. ஒரே ஒரு காட்சியாவாது கண்ணீர் சிந்த வைத்து உருக வைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் ராதாமோகனும், சூர்யாவும் சேர்ந்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

'க்யூட்' ஆன முகபாவங்கள் வருவது ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் வரப்பிரசாதம். அந்த 'க்யூட்' முகபாவங்களை வரவழைக்க பிரியா பவானியும் எவ்வளவோ முயற்சிக்கிறார், வரவேயில்லை. பொம்மை போல ஆடை அணிந்தால் மட்டும் அது வந்துவிடாது, பீலிங் வரணும் பீலிங். சூர்யாவைக் காதலிப்பது போல 'பீலிங்ஸ்' காட்ட முயற்சித்து தோற்றுப் போகிறார் பிரியா பவானி.

எஸ்ஜே சூர்யாவைக் காதலிப்பவராக சாந்தினி. சூர்யாவின் பொம்மை வந்து சேர்ந்த கடையில் வேலை பார்க்கிறார். சூர்யா அந்த கடையிலேயே வேலைக்குச் சேர லாஜிக்காக ஒரு கதாபாத்திரம் வேண்டும் என உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அதிகம் தெரியாத முகங்கள், சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்.

யுவனின் இசையில் எப்படியாவது ஹிட் பாடலைக் கொடுக்க வேண்டும் என முயற்சித்திருக்கிறார். 'முத்தம் முதல் முத்தம்…' பாடல் மட்டும் பரவாயில்லை ரகம். அவருடைய பின்னணி இசை அழுத்தமில்லாத பல காட்சிகளைக் கூட கொஞ்சமாக கரை சேர்க்கிறது. படத்தின் மேக்கிங் மிகப் பெரும் மைனஸ் பாயின்ட். ஒரு பொம்மை கம்பெனி, ஒரு ஜவுளிக் கடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி என இரண்டே இடங்கள்தான். ஒரு நாடகமாக எடுத்திருந்தால் கூட நான்கைந்து ஸ்கீரின்களை பின்னணியில் மாற்றியிருப்பார்கள். எதற்காக இப்படி ஒரு சிக்கன பட்ஜெட் ?.

ஹாலிவுட் படமான 'மானிகுயின்' படத்தின் காப்பி, ஒரு நாவல் தொகுப்பின் காப்பி என இந்தப் படத்திற்கு சர்ச்சை வேறு. 'மொழி' ராதா மோகனையும், 'மாநாடு' எஸ்ஜே சூர்யாவையும் நினைத்து 'குஷி' ஆகச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த 40 டிகிரி வெயிலில் 'உப்பு கருவாடு' ஆகித்தான் தியேட்டரை விட்டு வெளியில் வருவீர்கள்.

பொம்மை - இன்மை

 

பட குழுவினர்

பொம்மை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓