தினமலர் விமர்சனம்
எப்பவோ நடந்த கந்தகர் விமான கடத்தலை இப்போது நம் கண் முன் நடப்பது மாதிரி கதையாக்கி, காட்சிகளாக்கி இரண்டரை மணி நேரம் பயணம் படமாக்கி, பரபரப்பாக்கி இருக்கிறது இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணி!
கதைப்படி, சென்னையில் இருந்து டில்லி செல்லும் விமானத்தை அதே விமானத்தில் பயணிகள் போல் பயணிக்கும் தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லி வெளிநாட்டுக்கு கடத்த முயற்சிக்கின்றனர். ஆனால், விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறாலும், விமானிகளின் சாதுர்யத்தினாலும் அந்த விமானம் கடத்தல்காரர்களின் ஒப்புதலுடன் (வேறு வழியில்லாமல்...) திருப்பதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்படுகிறது. அப்புறம்? அப்புறமென்ன....? இந்திய அரசாங்கம் கைது செய்து காஷ்மீரில் சிறை வைத்துள்ள சர்வதேச பயங்கரவாதி யூசுப்கானை விடுதலை செய்யச் சொல்லியும், பல கோடி பணத்தையும் கேட்டு நூற்றுச் சொச்சம் பயணிகளையும், அம்மாம் பெரிய விமானத்தையும் காட்டி மிரட்டுகின்றனர் பயங்கரவாதிகள். இந்த சமயத்தில் கமாண்டோ படை அதிகாரி நாகார்ஜூனா தன் டீமுடன் இந்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், திருப்பதி ஏர்போர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். அடுத்து அதிரடிதான் என யூகித்தால் அதுதான் இல்லை! படம் முழுக்க அந்த விமான பயணத்தில் தமிழ் -தெலுங்கு ஹீரோயிசத்தையும், பஞ்ச் டயலாக் கலாச்சாரத்தையும் கிண்டலடிக்கும் இயக்குனர் ராதாமோகன், அந்த தவறை செய்வாரா என்ன? நாகார்ஜூனா தன் கமாண்டோ படை மூளையான உயரதிகாரி பிரகாஷ் ராஜின் ஒப்புதலுடன் என்ன செய்கிறார் என்பதுதான் பயணம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்பும் நிறைந்த மீதிக் கதை!
நாகார்ஜூனா கமாண்டோ படை வீரராக கலக்கி இருக்கிறார் என்பதை விட வாழ்ந்தே இருக்கிறார் என்றே சொல்லலாம். அவரது புத்திசாலித்தனத்தால் காஷ்மீரில் பிணயக் கைதியாக பிடித்தபடி தப்பிக்க முயலும் பயங்கரவாதிகளின் கவனத்தை திசை திருப்பி சுட்டுத் தள்ளுவதில் தொடங்கி, கிட்டத்தட்ட விமான கடத்தலை முடிவுக்கு கொண்டு வந்தபின் தப்பித்து துப்பாக்கி முனையில் மொத்த பயணிகளையும் மீண்டும் கடத்த துடிக்கும் ஒரு பயங்கரவாதியை தீர்த்துக் கட்டுவது வரை ஒவ்வொரு விஷயத்திலும் மிர்கிறார் நாகார்ஜூன்.
நாகார்ஜூனா மாதிரியே அவரது உயரதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ், தெலுங்கு காமெடி நடிகர் பிருமானந்தம், உச்ச நடிகராக வந்து கரப்பான் பூச்சிக்கெல்லாம் பயப்படும் பப்லு அலைஸ் பிருத்விராஜ், காமெடி நடிகர் சமாஸ், விமான சக பயணிகளில் ஒருவராக இருந்து சாகசம் செய்ய காத்திருக்கும் மாஜி மிலிட்டரி மேஜர் தலைவாசல் விஜய், டாக்டராக வரும் ரிஷி, பாதிரியாராக ஜெபிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் என ஒவ்வொருவரும் கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். அதேபோன்று கே.வி.குகனின் ஒளிப்பதிவும், பிரவீன்மணியின் இசையும் பயணம் சிறக்க பக்காவாக பாடுபட்டிருக்கின்றன!
டி.வி.மீடியாக்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக பண்ணும் கூத்துக்களை படம் முழுக்க துணிச்சலாக விமர்சித்திருப்பதற்காகவும் பயணத்தை பார்க்கலாம்! பாராட்டலாம்.
பணயம் - நல் நயணம்!
----------------------------------------------
குமுதம் விமர்சனம்
கந்தஹார் விமானக்கடத்தல் சம்பவத்தில் ஹாலிவுட் அம்சங்களையும் நம்மூர் பிரச்னைகளையும் சேர்த்தால்..."பயணம்.
தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்ட விமானப் பயணிகள்தான் உண்மையில் படத்தின் ஹீரோக்கள். கருணையே வடிவான பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர், அறிவுஜீவி குமரவேல், முன்னாள் கர்னல் "தலைவாசல் விஜய், மனிதாபிமானமுள்ள டாக்டர் ரிஷி என அழுத்தமான கேரக்டர்கள், நின்றுபோன விமானத்துக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டத்தையே நடத்திவிடுகின்றன.
கமாண்டோ நாகார்ஜுனாவின் ஃபிட்னெஸ் அந்த கேரக்டருக்கு சல்யூட் போட வைத்துவிடுகிறது. லடாக்கில் நடக்கும் சண்டையிலிருந்து விமானத்தை மீட்கும் "ஆபரேஷன் கருடா வரை அவரது ஒவ்வொரு கெட்டிக்காரத் தனத்துக்கும் சின்னச் சின்ன லாஜிக் வைத்திருப்பது ஆறுதல். உள்துறை செயலராக வருகிற பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தையில் காட்டும் டென்ஷன் ஒரிஜினல் அதிகாரிகளை கண்முன்னால் நிறுத்துகிறது.
விமானத்துக்கு வெளியே "ஷைனிங் ஸ்டார், உள்ளே "பிணைக்கைதி என்ற இக்கட்டில் தவிக்கும் சினிமா நடிகராக வருகிற பிருத்விராஜ் தனது ரசிகர் சாம்ஸிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது அமர்க்களம். தீவிரவாதிகள் கேட்கும் யூசுப்கானுக்குப் பதிலாக டூப்பை அனுப்பும் காட்சிகளில் அந்த டூப்பும் அவரை இயக்கும் பிரம்மானந்தமும் காமடி திருவிழாவே நடத்தி விடுகிறார்கள். ரிஷி, சானாகான் ஜோடியின் மோதல் விறுவிறு கடத்தல் படலத்தில் ஜிலுஜிலு அம்சம். விமானப் பணிப்பெண்ணாக வரும் பூனம்கவுர் முகத்தில் நன்றாகவே கலவரம் காட்டுகிறார்.
"உங்க போலீஸ், ராணுவத்துக்கிட்ட பொண்ணுங்க இவ்வளவு பத்திரமா இருக்க முடியுமா?என்ற தீவிரவாதியின் குமுறல், கடிவாளம் போட்டுக்கொண்டு காஷ்மீர் பிரச்னையை அணுகுபவர்களுக்கு சாட்டையடி. படத்தில் பாடல்களே இல்லை...பலே!
கே.வி.குகனின் ஒளிப்பதிவு நம்மையும் பயணிகளில் ஒருவராக்கிவிடுகிறது.
ஹைடெக் வெடிகுண்டுகளுடன் களமிறங்கிய தீவிரவாதிகள் சில நேரங்களில் மாணவர்கள் முன்னால் எடுபடாத ஹாஸ்டல் வார்டன்கள் மாதிரி காட்சியளிக்கிறார்கள். மரணபயத்தில்கூட பிணைக்கைதிகள் மிமிக்ரி செய்வதும் தீவிரவாதியின் துப்பாக்கியை வாங்கி வெயிட் பார்ப்பதும் சாத்தியமா?
மனிதர்களின் மென்மையான பக்கங்களையே நம்பும் இயக்குநர் ராதாமோகன் விமானக் கடத்தல் கதையிலும் அதையே நம்பி ஜெயித்திருக்கிறார்.
பயணம் : வேகம், குமுதம் ரேட்டிங் : நன்று!