பிளாக்
விமர்சனம்
தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கேஜி பாலசுப்ரமணி
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - ஜீவா, பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 11 அக்டோபர் 2024
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
திரில்லர் படம் என்றாலே பேய்ப் படமாக இருக்கும் அல்லது கிரைம் படமாக இருக்கும். இது மாறுபட்ட ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். கற்பனைக்கெட்டாத ஒரு கரு தான் இருந்தாலும் படத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பாலசுப்ரமணி.
ஜீவா, பிரியா பவானி சங்கர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். விடுமுறையைக் கொண்டாட கடற்கரை பகுதியில் அவர்கள் வாங்கியுள்ள 'வில்லா' ஒன்றிற்குச் செல்கிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட அந்த வில்லா குடியிருப்பில் அவர்கள்தான் முதலில் குடி போகிறார்கள். இரவு ஆனதும் திடீரென சில மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. யாருமே இல்லாத அந்த குடியிருப்பில் யாரோ இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எதிர் வீட்டில் திடீரென விளக்குகள் எரிகிறது. என்னவென்று போய் பார்த்தால் அந்த வீட்டிற்குள் ஜீவாவும், பிரியா பவானியுமே இருக்கிறார்கள். எப்படி இது என அதிர்ச்சியடைகிறார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நூற்றுக்கும் மேற்பட்ட வில்லா வீடுகள் அடங்கிய கடற்கரையோர குடியிருப்பு. அங்கு சில நாட்கள் மட்டுமே தங்குவதற்காகக் செல்லும் கணவன், மனைவி. அடுத்தடுத்து விசித்திரமாகவும், மர்மமாகவும் நடக்கும் சில சம்பவங்கள் என ஒரே இடம், இரண்டே கதாபாத்திரங்கள் என இரண்டு மணி நேரப் படத்தை சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். 2013ல் வெளியான 'கோஹெரன்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது. அப்படத்தில் ஆண், பெண் நண்பர்கள் என இருந்ததை, இந்தப் படத்தில் கணவன், மனைவி என்று மாற்றியுள்ளார்கள். தழுவல் என்றாலும் தமிழில் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த 'மேக்கிங்' இந்த 'பிளாக்'ல் இருக்கிறது.
திரில்லர் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு பதட்டம், பயம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள்தான் அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் அதைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள் ஜீவா, பிரியா பவானி. கணவன் மனைவி என்பதால் ஆரம்ப சில காட்சிகளில் கொஞ்சம் ரொமான்ஸ் மட்டும் இருக்கிறது. பின்னால் நடக்கப் போகும் சம்பவங்களில் ரசிகர்களைக் குழப்புவதற்கு ஒரு நபருடன் ஜீவா சண்டையிடுவதை தேவையில்லாமல் சேர்த்திருக்கிறார்கள். தமிழில் சில வருடங்களாய் காணாமல் போயிருந்த ஜீவாவுக்கு இந்தப் படம் முக்கியமான படமாக அமையலாம்.
ஜீவா, பிரியாவைத் தவிர இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் யோக் ஜபீ, ஜீவா நண்பராக ஷரா, ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, பிரியாவின் தோழியாக ஸ்வயம் சித்தா ஆகிய நால்வர் மட்டும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
படத்தின் மிரட்டலுக்கு முக்கிய காரணம் கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஒரே இரவில் நடக்கும் கதை, அழகான, பிரம்மாண்டமான வில்லா குடியிருப்பை நமக்கு பயமேற்படுத்தும் விதத்தில் விதவிதமாய் காட்டியிருக்கிறார். அதற்கான லைட்டிங்குகள் அவ்வளவு கச்சிதமாய் உள்ளது. காட்சிகளை குழப்பமில்லாமல் தொகுத்துத் தந்ததில் எடிட்டிர் பிலோமின் ராஜுக்குப் பெரும் பங்குண்டு. இருந்தாலும் கிளைமாக்சில் நமக்கு ஒரு குழப்பம் வருதைத் தவிர்க்க முடியவில்லை. ஓடிடியில் வெளியான பிறகு நிறுத்தி நிறுத்திப் பார்த்தால் ஒரு வேளை புரியலாம். பின்னணி இசையில் வழக்கமாக அதிக சத்தத்தைத் தரும் சாம் சிஎஸ் இந்தப் படத்தில் அடக்கித் தந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
எந்த கேள்வியும் கேட்காமல் பரபரப்பாக ஒரு இரண்டு மணி நேரம் ஒரு திரில்லர் படத்தைப் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த 'பிளாக்' பிடிக்கும்.
பிளாக் - மேஜிக்…