டிமான்டி காலனி 2
விமர்சனம்
தயாரிப்பு - பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை, ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அஜய் ஞானமுத்து
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன்
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
இரண்டாம் பாகம் எடுத்தாக வேண்டுமே என்ற காரணத்திற்காக ஒரு படத்தை எடுக்கக் கூடாது. அப்படியே எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் முதல் பாகத்தின் தரத்தை எந்த விதத்திலும் குலைக்காத அளவிற்கான படமாக எடுக்க வேண்டும்.
2015ல் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் பாகம் வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட படமாக இருந்ததால் வரவேற்பைப் பெற்றது. அதில் அடுத்து என்ன நடக்கும் என்ற திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை பரபரப்புடன் பார்க்க வைத்திருக்கும். இடைவேளைக்குப் பிறகு ஒரே வீட்டில் கதை நகர்ந்தாலும் அதை மறக்க வைத்து ஒரு ஹாரர் அனுபவத்தைக் கொடுத்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தைத் தொடர்பு படுத்தி ஆரம்பத்தில் சில காட்சிகளை வைத்திருக்கிறார். அதன்பின் டபுள் ஆக்ஷன் அருள்நிதி, ஒருவர் உயிருக்கு ஆபத்து என்றால் மற்றொருவருக்கும் ஆபத்து என வலிய வந்து டபுள் ஆக்ஷனைத் திணித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் மட்டுமே கதை நகர்கிறது. முதல் பாகத்தைப் போல திரைக்கதையில் பரபரப்பைக் காட்டாமல் விஎப்எக்ஸ்-ஐ நம்பி மட்டுமே காட்சிகளை அமைத்து, சுவாரசியமின்றி கொடுத்து படத்தை முடித்திருக்கிறார்.
முதல் பாகத்தின் கிளைமாக்சில் வீட்டிலிருந்து வெளியில் விழுந்து கம்பியில் குத்தி உயிருக்குப் போராடுவார் அருள்நிதி. அத்துடன் முதல் பாகம் முடிந்தது. இரண்டாவது பாகத்தில் அந்த அருள்நிதியை பிரியா பவானி சங்கரும், அவரது மாமனார் அருண்பாண்டியனும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பிரியா பவானியின் கணவர் தற்கொலை செய்து கொண்டவர். அவரது ஆவியுடன் பேச விருப்பப்படுகிறார் பிரியா பவானி. அப்படி பேசுகையில் அவரது கணவரது ஆவிக்குப் பதிலாக வேறு ஒரு ஆவி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.
இதனிடையே, ஹைதராபாத்தில் மற்றொரு அருள்நிதி இருப்பதாகவும், அவரும் முதல் பாகத்தில் வந்து காப்பாற்றப்பட்ட அருள்நிதியும் இரட்டையர்கள் என கதை சொல்கிறார்கள். அவர்களது அப்பா தம்பிக்கு அதிக சதவீத சொத்தை எழுதி வைக்கிறார். உயிருக்குப் போராடும் தம்பியை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவு பெற்று வருகிறார் அண்ணன் அருள்நிதி. அவரிடம் நடந்த உண்மைகளைச் சொல்கிறார் தம்பி அருள்நிதியைக் காப்பாற்றிய பிரியா பவானி. இரண்டு அருள்நிதிக்கும், பிரியா பவானிக்கும் சில தீய சக்திகளால் ஆபத்து ஏற்படுகிறது. அது என்ன அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இரண்டு வேடங்களில் அருள்நிதி நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் வந்த தம்பி அருள்நிதிக்கு இரண்டாம் பாகத்தில் வேலையில்லை. கட்டிலில் கோமாவில் படுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணன் அருள்நிதி, தம்பியிடமிருந்து சொத்தை எழுதி வாங்க வந்து தம்பியின் நிலையைப் பார்த்து மனம் மாறுகிறார். தம்பியையும், தன்னையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றப் போராடுகிறார். எமோஷனல் சீன்களாக இருக்கும் என எதிர்பார்த்தால் அவருக்கு ஏனோ தானோ சீன்களையே அமைத்திருக்கிறார் இயக்குனர். முதல் பாகத்தை அழுத்தமாகத் தந்தவர் என்ற நம்பிக்கையில் அருள்நிதி நடிக்க சம்மதித்திருக்கலாம். ஆனால், அவரை சற்றே ஏமாற்றிவிட்டார் இயக்குனர்.
அருள்நிதியை விடவும் பிரியா பவானி சங்கருக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அவருக்கான எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் இருப்பதால் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். தனது கணவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கும் பிரியா அடுத்தடுத்து சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு களத்தில் இறங்குகிறார். படத்தில் இருக்கும் முக்கிய எமோஷனல் கனெக்ட் பிரியா மட்டுமே.
அருள்நிதியைக் காப்பாற்ற முயற்சிக்கும் டாக்டராக, பிரியாவின் மாமனராக அருண் பாண்டியன். அவர் பெரிதும் நம்பும் புத்த மத சாமியாராக டிசெரிங் டோர்ஜி. அருள்நிதியின் சித்தப்பாவாக முத்துக்குமார், டிமான்ட்டி காலனியில் சிக்கும் கல்லூரிப் பெண்ணாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டிய நடிகர்கள். தீய சக்திகளை விரட்டும் புத்தமத சாமியார் டிசெரிங் டோர்ஜி மற்றவர்களை விட முக்கியத்துவம் பெற்றுள்ளார்.
பின்னணி இசை என்றாலே இசைத்துத் தள்ள வேண்டும் என நினைக்கிறார் சாம் சிஎஸ். ஆங்காங்கே கொஞ்சம் அடக்கி வாசிப்பதை அவர் முயற்சிக்க வேண்டும். இடைவேளைக்குப் பின் ஒரே ஹோட்டலில் நடக்கும் கதை என்பதால் அங்குதான் ஒளிப்பதிவாளருக்கு வேலை அதிகம். அதை சரியாகச் செய்திருக்கிறார் ஹரிஷ் கண்ணன்.
வெளிநாட்டுத் தயாரிப்பாளர் படத்தில் வந்த பின் விஎப்எக்ஸ் காட்சிகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கியிருப்பார்கள் போலிருக்கிறது. அதை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். பேய்ப் படம் என்றாலும் ரசிகர்களுக்கு படத்துடன் ஒரு 'கனெக்ட்' வர வேண்டும், அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஆரம்பம் முதல் கடைசி வரை இடையிடையே எங்கெங்கோ போய் வருகிறது திரைக்கதை.
டிமான்ட்டி காலனி 2 - திரைக்கதை இன் டிமான்ட்
டிமான்டி காலனி 2 தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
டிமான்டி காலனி 2
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்