கழுவேத்தி மூர்க்கன்
விமர்சனம்
தயாரிப்பு - ஒலிம்பியா மூவீஸ்
இயக்கம் - சை கவுதம் ராஜ்
இசை - டி இமான்
நடிப்பு - அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன்
வெளியான தேதி - 26 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 3/5
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சாதி பெருமை பேசும் திரைப்படங்களும், சாதி வித்தியாசத்தால் நடக்கும் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசும் திரைப்படங்களும் கொஞ்சம் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் சாதி ஒற்றுமையைப் பற்றிப் பேசும் சில படங்களும் வந்து எரிகின்ற சாதித் தீயில் சமாதானம் என்ற தண்ணீரை ஊற்றி அணைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த 'கழுவேத்தி மூர்க்கன்'
இயக்குனர் சை கவுதம் ராஜ், சாதி கடந்த நட்பு, ஒரு அழகான காதல், எதிர்பாராத துரோகம், சாதியை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், காவல்துறை எடுக்கும் நடவடிக்கை என கருத்துடன் கூடிய ஒரு கமர்ஷியல் படத்தை ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். எந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமோ அது சார்ந்த திரைக்கதை அமைத்து, அதற்கான காட்சிகளை அமைத்து, வசனங்களை அமைத்து நேர்க்கோட்டில் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த 'இராவணக் கோட்டம்' படத்திலும் இதே மேலத் தெரு, கீழத் தெரு நட்புதான் படத்தின் மையமாக இருந்தது. எந்தக் குழுவிலிருந்து அந்த 'மையம்' லீக் ஆனது என்பது தெரியவில்லை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தெக்குப்பட்டி கிராமத்தில், மேலத் தெருவில் வசிக்கும் அருள்நிதி, கீழத் தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போது தன் உயிரைக் காப்பாற்றிய சந்தோஷ் மீது அவ்வளவு நட்பாக இருக்கிறார் அருள்நிதி. இது சாதிப் பாசம் மிக்க அருள்நிதி அப்பாவும், முன்னாள் ஊர் தலைவரான யார் கண்ணனுக்கும் பிடிக்கவில்லை. அவர் சார்ந்த சாதிக் கட்சியில் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜசிம்மன் தனது செல்வாக்கை அந்த மாவட்டத்தில் அதிகரிக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த முயற்சிக்கிறார். அப்போது அவர் வைத்த பேனர் ஒன்றை சந்தோஷ் பிரதாப் கிழித்ததால் ராஜசிம்மனின் மாவட்ட செயலாளர் பதவி பறி போகிறது. அடுத்த சில நாட்களில் சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட அந்தப் பழி அருள்நிதி மீது விழுகிறது. அவர் தப்பியோட, காவல் துறை அவரைத் தேடுகிறது. சந்தோஷைக் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத்துடிக்கிறார் அருள்நிதி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மூர்க்கசாமி கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை பொருத்திக் கொண்டுள்ளார் அருள்நிதி. அந்த கிடா மீசையும், கண்களை உருட்டுவதும், எதிராளிகளை எட்டி உதைத்து பந்தாடுவது, தூக்கிப் போட்டு மிதிப்பது என காட்சிக்குக் காட்சி ஆவேசத்தின் எல்லைக்கே செல்கிறார். அப்படிப்பட்டவருக்கு துஷாரா விஜயன் கண்ணை ஒரு நிமிடம் கூட நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தோற்றுப் போகிறார். இடைவேளை வரை இந்த ரொமான்ஸ், அருள்நிதி, சந்தோஷ் பிரதாப் நட்பு என சாதாரணமாகச் செல்லும் படம், இடைவேளைக்குப் பின் அப்படியே மாறிவிடுகிறது. படம் முடியும் வரை அருள்நிதியின் மூர்க்கம் மட்டுமே தாண்டவமாடுகிறது. கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு கொடூரமாக இருந்து அதிர்ச்சியூட்டுகிறது.
படத்திற்குப் படம் துஷாரா விஜயன் நடிப்பில் துடிப்பான முன்னேற்றம். அவரை வைத்து ஒரு முழு நீள ரொமான்ஸ் படத்தை எடுக்க யாராவது ஒரு இயக்குனர் முன்வர வேண்டும். அருள்நிதியுடனான காதல் காட்சிகளில் அப்படி ஒரு அசத்தல் நடிப்பு. இப்படிப்பட்ட காதல் காட்சிகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. அருள்நிதிக்கு முத்தம் கொடுத்து அவர் பேசும் வசனம் கண்ணைக் கலங்க வைத்துவிடுகிறது.
அருள்நிதியின் நண்பராக சந்தோஷ் பிரதாப். கீழத் தெருவைச் சேர்ந்த அவர் தன் மக்கள் அனைவருமே படித்து முன்னேற வேண்டும் என அவர்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்து தருகிறார். அருள்நிதி பெற்றோர் கூட அவரை அவமதித்தாலும் நண்பனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். 'சார்பட்டா பரம்பரை' படத்திற்குப் பிறகு அவருக்கும் பேர் சொல்லும் ஒரு படம்.
அருள்நிதிக்கு வில்லனாக பிரபலமான நடிகரை நடிக்க வைத்திருந்தால் அது வழக்கமான கமர்ஷியல் படமாக அமைந்திருக்கும். ராஜசிம்மனை மாவட்ட செயலாளர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது நல்ல தேர்வு. ஒரு லோக்கல் அரசியல்வாதியின் கதாபாத்திரத்தை, சாதி வெறி பிடித்தவரை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ராஜசிம்மன்.
அருள்நிதியின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் காதலியாக சாயாதேவி ஆகியோரது கதாபாத்திரங்களும் அதில் அவர்களது நடிப்பும் குறிப்பிட வேண்டியவை.
'அவ கண்ணைப் பார்த்தால்...' பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வைத்துவிட்டார் இமான். பின்னணி இசையையும் குறிப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக அருள்நிதிக்காக அவர் அமைத்துள்ள பின்னணி இசை ஒரு ஆவேசமான ஜல்லிக்கட்டுக் காளை ஓடி வரும் ஒரு உணர்வைத் தருகிறது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு, நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு ஆகியவையும் இயக்குனருக்கு பக்க பலம். குறிப்பாக கணேஷ் குமாரின் சண்டைப் பயிற்சிதான் படத்தின் பெரும் பலம். ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். பல வசனங்கள் மிகவும் ஷார்ப் ஆக உள்ளன.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சுவாரசியமில்லாமல் நகர்கின்றன. அரை மணி நேரம் கழித்துதான் படம் அதற்கான இலக்கை நோக்கி அதிரடியாய் நகர்கிறது. கருவேல காட்டுக்குள் ஒளிந்திருக்கும் அருள்நிதியை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது என்பதை மட்டும் நம்ப முடியவில்லை. தமிழ் சினிமாவின் சில முக்கிய லோக்கல் அரசியல் ஆக்ஷன் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம் பெறலாம்.
கழுவேத்தி மூர்க்கன் - காட்டாறு…
கழுவேத்தி மூர்க்கன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கழுவேத்தி மூர்க்கன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்